நன்றி குங்குமம் தோழி
‘‘பையனோட ஞாபக சக்தியை அதிகம் பண்றதுக்கு வல்லாரைக் கீரை தரலாமா டாக்டர்? வல்லாரை கேப்ஸ்யூல்ஸ், டானிக் ஹெல்ப் பண்ணுமா?” பரீட்சை நாட்கள் தொடங்கியதுமே பெற்றோர்கள் பலரது கேள்வி இது!ஞாபகத்திறனுக்கும் வல்லாரைக்கும் என்ன தொடர்பு? சிறுநீரகம் போன்ற வடிவம் கொண்ட இந்த இலைகள் உண்மையிலேயே மூளைக்கும் நரம்புகளுக்கும் வலிமையைக் கூட்டுகின்றனவா? வல்லாரை மாத்திரைகள் பாதுகாப்பானவையா? இவற்றைத் தெரிந்துகொள்ள, வல்லாரையுடன் ஓர் இயற்கைப் பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்..!
மனித இனத்திற்கென இயற்கை அளித்துள்ள அளப்பரிய செல்வங்களில் கீரை வகைத் தாவரங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். உண்மையில் மனித இனம் தோன்றும் முன்னரே தோன்றி, மனித இனம் செழித்தோங்க முன்னிற்கும் இந்தக் கீரை வகைத் தாவரங்கள், மண்ணுக்குள் கலந்திருக்கும் பற்பல தாதுக்களை தனக்குள் ஈர்த்துக்கொண்டு, உணவுக் கொடையாக அவற்றை நமக்கு அளிக்கின்றன. அதனால்தான், ‘கீரையில்லா அன்னம் கூரையில்லா வீட்டிற்கு சமம்’ எனப் போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்ட கீரை வகைகளுள், அறிவாற்றலை அதிகரிக்க உதவும் வல்லாரையின் தாவரப்பெயர் Centella asiatica. இது தோன்றிய இடம் இந்தியா. மூளையின் நரம்புகளுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டதாலேயே ‘Brainfood’ என்றும் அழைக்கப்படும் வல்லாரை, பிரம்மி, பிரம்ம மண்டகி, கோட்டு-கோலா, பர்மி, மோட்டி-பர்மி, சரஸ்வதாக்கு, கோடகம், ஹிங்கோட்டு-கோலா எனவும் நம்மிடையே அழைக்கப்படுவதுடன், சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி எனத் தமிழ் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Brahmi, Indian pennywort, Marsh pennywort அழைக்கப்படுகிறது.
ஒரு தாவரம் அறிவாற்றலையும் ஞாபகத்திறனையும் கூட்டுமா? அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? கசப்பு, துவர்ப்பு, இனிப்பு கலந்ததொரு சுவையும் பிரத்யேக மண்மணமும் கொண்ட வல்லாரையில், இலைகள் மட்டுமின்றி, வல்லாரையின் தண்டு, வேர், விதை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.வல்லாரையில் காணப்படும் ஊட்டச்சத்துகள் குறித்து நமக்கு எடுத்துரைக்கும் இயற்கை மருத்துவர்கள், எந்தவொரு கீரையிலும் இருப்பது போல அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, பச்சையம், வைட்டமின்கள் B, C, E, குறிப்பாக ஃபோலிக் அமிலம், நிகோடினிக் அமிலம், இவற்றுடன் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் & கொழுப்பு அமிலங்கள் கொண்டவை வல்லாரை என்கின்றனர்.
மேலும், டெர்பெனாயிட்ஸ் எனும் தாவரச்சத்துகள், அதிலும் குறிப்பாய் ட்ரை-டெர்ப்பீன், ஆசியாட்டிக்கோசைட், சென்ட்டெல்லோசைட், பிரம்மோசைட், மேடிக்கஸோசைட், பிரம்மிக் அமிலம், ஐசோ-பிரம்மிக் அமிலம், சென்ட்டெல்லோஸ் என நீளும் இதன் பிரத்யேகப் பட்டியல், வல்லாரையின் பல மருத்துவ குணங்களுக்கு, குறிப்பாக நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்குக் காரணமாகவும் இருக்கிறது. மேலும், இதற்கு பலம் சேர்க்கும் வகையில் கெம்ஃபெரால், குவர்செடின், ரூட்டின், குளோரஜெனிக் அமிலம், பல்வேறு குளுக்கோசைட்கள் என எண்ணிலடங்கா சத்துகள் வல்லாரையின் நலன்களுக்குக் காரணமாக இருக்கின்றன.
வல்லாரையின் பிரம்மிக் மற்றும் ஐசோ-பிரம்மிக் அமிலங்கள், மூளையின் உற்சாக சுரப்பிகளான டோப்பமைன் மற்றும் செரட்டோனின் அளவுகளை சமன்படுத்தும் அதேசமயம், வல்லாரையின் டெர்பனாயிடுகள் மற்றும் க்ளூகோசைட்கள், மூளை மற்றும் நரம்புகளுக்கு வலிமையைக் கூட்டி, ஞாபகத்திறனை அதிகரிக்கின்றன. தேர்வு நேரங்களில், ‘‘பையனின் ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரைக் கீரை தரலாமா டாக்டர்?” என பெற்றோர்களை நம்மிடத்தில் கேட்கவும் வைக்கின்றன.
அறிவாற்றலுக்கு மட்டுமன்றி, மன அழுத்தம், வலிப்பு நோய், தூக்கமின்மை, அல்சைமர், பார்க்கின்சன் நோய்கள் என பல நரம்பு சார்ந்த நோய்களுக்கு வல்லாரை பரிந்துரைக்கப்படுகிறது. GABA எனும் நரம்பூக்கி சுரப்பை வல்லாரை அதிகரிப்பதால் மன அழுத்தத்தையும் வலியையும் குறைக்க உதவுகின்றன. சமீப காலமாக, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம், ஏடிஹெச்டி (ADHD) கற்றல் குறைபாடுகள், கவனச்சிதறல், மறதி, மன நோய் ஆகியவற்றில் வல்லாரையின் பயன்பாடு தீவிர ஆய்வில் உள்ளது.
சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரித்து சருமத்தில் இருக்கும் ரத்த நாளங்களைத் தூண்டுவதன் காரணமாக, புத்தம் புதிய செல்கள் தோன்றவும், தோல் சுருக்கங்கள் மறையவும் வல்லாரை உதவுகிறது. வல்லாரையில் காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதால், தோலின் தழும்புகள் மறையவும், புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை மட்டுப்படுத்தி, தோல் அழற்சி நோய்களுக்கும், சருமப் புற்று நோய்க்கு எதிராகவும் செயலாற்றி, சருமத்திற்கான பாதுகாப்பு அரணாகவும் திகழ்கிறது.
வல்லாரையில் உள்ள அதிகமான நார்ச்சத்தும், தேவையான கனிமங்களும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், வயிற்று அழற்சி மற்றும் சிறுநீரக நோயின் தீவிரத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், கால் வீக்கம், மூட்டு வலி, வெரிக்கோஸ் வெய்ன்ஸ், எலும்புப்புரை ஆகியவற்றிலும் அதன் அறிகுறிகள் குறைய உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியையும் வல்லாரை கூட்டுவதால் காசநோய், தொழுநோய், நாட்பட்ட நுரையீரல் நோய் ஆகியவற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
மேலும், ரத்த சுத்திகரிப்பு, பார்வைக் குறைபாடு, பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம், புற்றுநோய் எதிர்ப்பு, மூப்பு நீக்கும் ஆற்றல் போன்றவை வல்லாரையின் சிறப்பு மருத்துவ குணங்கள் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். என்றாலும், வல்லாரை இலைகளை அதிகம் உட்கொண்டால் ஒரு சிலருக்கு வாந்தி, தலைசுற்றல், ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதையும், சமயத்தில் கல்லீரல் பாதிப்பு வரைகூடக் கொண்டுசெல்லும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
துவையல், மசியல், பொரியல் செய்து வல்லாரையை நாம் உட்கொள்வது போல, மியான்மர், வியட்நாம், மலாய், தாய், நாட்டு உணவுகளில் வல்லாரைக் கீரை சூப், சாலட், ரோல், ஜூஸ், தேநீர் என பயன்படுத்துகின்றனர். வல்லாரைக் கஞ்சி, Malluma, Gotu Kanda போன்றவை இலங்கையின் பிரபல வல்லாரை உணவு வகைகளாகும்.
வல்லாரையை பறித்தவுடன் நேரடியாகப் பயன்படுத்துவது மட்டுமின்றி, இதன் சாறு, வல்லாரை மாத்திரை மற்றும் டானிக் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அழகு சாதன க்ரீம்கள், லோஷன், எண்ணெய் தயாரிப்பிலும் வல்லாரை இடம்பெறுகிறது.பல நூற்றாண்டுகளாக இந்திய, ஆசிய நாடுகளில் மூலிகை மருந்தாக வல்லாரை பயன்பாட்டில் இருப்பதுடன், சீன மருத்துவத்தில், ‘வாழ்க்கைக்கான நீரூற்று’ என்று வல்லாரை சொல்லப்படுகிறது. பண்டைய இந்திய மற்றும் சீன மருத்துவங்களில் யானைக்கால் நோய், தொழுநோய், சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு முக்கியமான மூலிகை மருந்தாகவும் வல்லாரை குறிப்பிடப்பட்டுள்ளது. மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாய் உள்ள ரசாயனங்கள் கொண்டது வல்லாரை என ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.
‘An apple a day, keeps the doctor away’ என்பதுபோல, ‘Two leaves a day, Keeps the old age away’ என்பது சிங்களப் பழமொழியாகும். பலம் வாய்ந்த யானைகளுக்கே வலிமை சேர்ப்பது வல்லாரையின் சின்னஞ்சிறு இலைகள் என இலங்கை நாட்டில் வல்லாரையைக் கொண்டாடுகின்றனர். இவ்வளவு குணங்களைக் கொண்டிருக்கும் வல்லாரையை நாம் முறையாகப் பயன்படுத்தாத காரணத்தால், அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக வல்லாரை அழிவின் விளிம்பில் நிற்கிறது என்கிறது IUCN எனும் சர்வதேச இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஆணையம்.
இதய அல்லது சிறுநீரக வடிவ இலைகளையும், வெண்ணிறப் பூக்களையும் கொண்ட வல்லாரை, படரும் வளரியல்பைக் கொண்ட தாவரம் என்பதால், நீர் நிறைந்த பகுதிகளில் வருடம் முழுவதும் தானாக, அதேசமயம் வேகமாய் வளர்கிறது. இது இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, மடகாஸ்கர் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. அக்டோபர் மாதங்களில் நடவு செய்து, மூன்றே மாதங்களில் கொள்முதல் செய்யப்படுவதால், நமது இந்தியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
வல்லாரையைச் சுற்றியுள்ள நாட்டுப்புற கதைகளும் நம்பிக்கைகளும் ஏராளம் உண்டு. ஆனால் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வியான, ‘‘வல்லாரை கேப்ஸ்யூல்ஸ் மற்றும் டானிக் நினைவாற்றலுக்கு ஹெல்ப் பண்ணுமா?” என்பதற்கு, இதைத் தயாரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்களாலும், வல்லாரைச் சாற்றின் அடர்த்தியாலும், மூலிகை உண்டாக்கும் கல்லீரல் பாதிப்பினாலும், பறித்த கீரையை உட்கொள்வதுதான் எப்போதும் சிறந்ததாகும்.அறிவாற்றலை அதிகரிக்க... ஞாபகத்திறனைக் கூட்ட... மூப்பு தோன்றாமல் இருக்க... ஆரோக்கியம் கூட... வல்லமை மிக்க வல்லாரையை அளவோடு உட்கொண்டு நலம் பல பெறுவோம்..!
(இயற்கைப் பயணம் நீளும்!)
டாக்டர்: சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்