Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

தாயாகும் ஒரு காய்!

“தல்லி சாங்க்கன பிட்டன்னு உள்ளி சாங்க்குனட்ட” என்பது தெலுங்கு மொழியில் பிரசித்தமான ஒரு வழக்குமொழி. தாய் வளர்க்காத குழந்தையையும் வெங்காயம் வளர்க்குமாம் எனும் பொருள்படும் இந்தப் பழமொழியின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள, அன்னையர் தின சிறப்புப் பதிவாக, இயற்கை ஈந்த அன்னையான வெங்காயத்துடன் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்..!

ஆதிகாலத்தில் காட்டுப் பயிராக இருந்த வெங்காயம் மனிதனின் அன்றாட உணவாக மாறியபின், மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்துவிட்டது என்றே சொல்லலாம். உண்மையில், பெரும் பயணங்களையும், பெரும் மாற்றங்களையும், பெரும் விமர்சனங்களையும் ஒருங்கே சந்தித்த ஒரே உணவுப் பொருள் வெங்காயம் எனலாம்!உரிக்கும் போது அழ வைத்து, உண்ணும்போது அதிக பலன்களைத் தரும் வெங்காயத்தின் தாவரப்பெயர் Allium cepa. தோன்றிய இடம் ஆசியா. நீருள்ளி, உள்ளிகட்டா, உள்ளிப்பாயா, பியாஜ், கண்டா என பல பெயர்களில் அழைக்கப்படும் வெங்காயத்தை, நீருள்ளி, பூவண்டம் என்கின்றன நமது தமிழ் இலக்கியங்கள்.

வெங்காயம் என்றால் வெப்பத்தைத் தணிக்கும் வாசனை மிகுந்த உணவு எனப் பொருளாம். Onion என்ற ஆங்கிலப் பெயர், Unio என்ற லத்தீன் மொழியிலிருந்து தோன்றியது என்றும், வெங்காயத்தின் இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இணைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

நமது உணவுகளில் கட்டாயம் இடம் பெறுகிற சிறிய மற்றும் பெரிய வெங்காயத்தை, உலகில் அதிகம் உண்ணப்படும் பொருட்களில் ஆறாவதாகவும், இணை உணவில் தக்காளிக்கு அடுத்த இடத்திலும் வைத்துப் பார்க்கப்படுகிறது. சாம்பார், ரசம், பச்சடி, சட்னி, பொரியல், ஊறுகாய் என தென்னிந்தியாவின் அனைத்து உணவுகளிலும் பச்சையாகவும், சமைக்கப்பட்டும் இடம்பெறுகிற வெங்காயம், பழைய சாதமும் பச்சை வெங்காயமுமாக ஏழை உழவனுக்கான உணவாய் எப்போதுமே இருக்கிறது.

வெங்காயம் உலகெங்கிலும் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் வெங்காயத்தாளும், உலர வைத்த வெங்காயமும்கூட சமையலில் இடம் பிடிக்கின்றன. ஐரோப்பாவில் பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்கா யம் ஆகிய மூன்றும் முக்கிய விருந்து உணவாக பார்க்கப்படுகிறது. சாலட், சூப், ஸ்ட்யூ, பீட்சா, சாண்ட்விச், இனிப்பு சேர்ந்த caramelized onion உணவுகளிலும் இடம்பெறும்.

உணவையும் ஆற்றலையும் bulb எனும் தன் வேர்க்கால்களில் வைத்திருக்கும் வெங்காயம் அளவில் சிறியதாய், காரத்தன்மை மற்றும் வாசனையில் தூக்கலாய் இருப்பதுடன், ஊதா நிறம் கொண்ட சின்ன வெங்காயத்தை ‘Shallots’ என்றும், அளவில் பெரியதாய், வெள்ளை, மஞ்சள், ஊதா, பச்சை நிறத்தில், காரம் மற்றும் வாசனை குறைவாய் உள்ள பெரிய வெங்காயத்தை Onion என்றும் பிறநாடுகள் அழைக்கின்றனர். இங்கே இரண்டையும் நாம் வெங்காயம் என்றே அழைக்கிறோம்.

நிறைந்த நீர்த்தன்மை (86%), குறைந்த கலோரிகள் (40/100g) மற்றும் மிதமான நார்ச்சத்து (1.4g), கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், க்ரோமியம், ஃப்ளூரைட், மெக்னீசியம், செலீனியம், துத்தநாகம் உள்ளிட்ட முக்கியமான கனிம நுண்ணூட்டங்களுடன் C, E, K வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், நியாசின் உள்ளிட்ட B வைட்டமின் ஊட்டங்களும் வெங்காயத்தில் நிறைந்துள்ளன. மிகக்குறைந்த அளவு மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புகள் கொண்டது என்பதால், இணை உணவாகவும் வெங்காயம் பயன்படுகிறது.

வெங்காயத்திலுள்ள பல அத்தியாவசிய தாவரச்சத்துகள், அதன் நிறம், நெடி போன்றவை பிரத்யேக மருத்துவ குணங்களுக்கும் காரணமாக உள்ளன. குறிப்பாக, அல்லிசின்(Allicin), க்வெர்செடின்(Quercetin), க்ரிப்டோ-ஸாந்தின் (Cryptoxanthin), ரூட்டின்(Rutin), ஃபளாவனால்கள்(Flavanols), அந்த்தோ-சயனின்கள்(Anthocyanins), பாலி-ஃபீனால்கள் (Polyphenols), பீட்டா கரோட்டீன்(Beta Carotene) உள்ளிட்ட தாவரச்சத்துகள், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன.

இதிலுள்ள அல்லைல் ப்ரொபைல் டைசல்ஃபைடு (Allyl Propyl Disulphide) எனும் தாவர எண்ணெய், அதன் காரத்தன்மைக்கும் நெடிக்கும் காரணமாகிறது என்றால், உரிக்கும்போது அதிலுள்ள அல்லினேஸ் நொதி(Allinase enxyme) வெங்காயத்தின் அமினோ அமிலத்தை, Syn propanethial S oxide எனும் ரசாயனமாக மாற்றி, உரிப்பவர்கள் கண்களில் நீர் வருவதற்குக் காரணமாக அமைகிறது.

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என இதனைக் கூறினாலும், நோயெதிர்ப்பு ஆற்றல், ஞாபகத்திறன் அதிகரிப்பு, ரத்த அபிவிருத்தி, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீர்ப் பெருக்கம், தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமை, புற்றுநோய் எதிர்ப்பு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன், கல்லீரல் நோய்கள், மன அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் நோய் போன்றவற்றின் தீவிரத் தன்மையை மட்டுப்படுத்தும்.

குறிப்பாக வயிற்றுப்புண், குடல் அழற்சி, மலச்சிக்கல், குடல் புழுக்கள் ஆகியவற்றில் இருந்தும், சிறுநீரக நோய், கண் நோய், மூட்டு வலி, எலும்புப்புரை உள்ளிட்ட வயோதிக நோய்களிலிருந்தும் காக்கிறது. உடல் வெப்பத்தைக் குறைத்து, தாகத்தை நன்கு தணிப்பதுடன், காய்ச்சல் மற்றும் அம்மை நோய்களுக்கும் உதவுகிறது. பாலுணர்வைக் கூட்டி, கருவுறுதல் விகிதத்தை அதிகரித்து, கருத்தரித்த தாயின் செரிமானப் பிரச்னைக்குத் தீர்வாகவும், கருவின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உள் உறுப்புகள் மட்டுமன்றி, சருமத்திற்கும் கேசத்திற்கும் நன்மைகளை அளித்து, கரும்புள்ளிகள், தழும்புகள், இளநரை, பொடுகு, முடி உதிர்தலைத் தடுப்பதுடன், தேனீ, குளவி, விஷப்பூச்சிகளின் விஷத்தன்மையைப் போக்கும் ஆற்றலும் வெங்காயத்திற்கு உண்டு.

பாட்டி வைத்தியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வெங்காயம் வாந்தி, சீதபேதி, வயிற்று அழற்சி, தோல் அழற்சியை சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், உண்பவர்களின் மூச்சில் உள்ள நெடி,

அருகில் இருப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். வெங்காயத்தில் உள்ள கருப்பு பூஞ்சை தொற்றை கவனிக்காமலும், சரியாகக் கழுவாமலும் பயன்படுத்தும்போது மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும்.

கிரேக்கர் மற்றும் ரோமானியர்கள் வெங்காயத்தை உலகெங்கும் கொண்டு சென்றுள்ளனர். கிரேக்கத்தில் ஒலிம்பிக் வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும் முன்பு, நோய்த்தொற்றைத் தடுக்க, வெங்காயச் சாற்றை உடலில் பூசிக்கொண்டதாகவும், வெங்காயம் உட்கொண்டதாகவும் குறிப்புகள் உள்ளன. மரணமிலா பெருவாழ்விற்கான அழியாத ஒரு வரமாகவே எகிப்தியர்கள் வெங்காயத்தைக் கருதியுள்ளனர். எகிப்திய மன்னர்களை புதைக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்துப் புதைத்துள்ளதையும், பிரமிடுகளின் உட்சுவர்களிலும் ஓவியமாகவும் வெங்காயம் இடம்பெற்றுள்ளது. அரேபியர்களின் புனித அல்குர்ஆனில் வெங்காயம் பற்றிய குறிப்பு உள்ளது.

யூதர்கள் முற்காலத்திலே வெங்காயத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்கிறது புதிய ஏற்பாடு. துர்சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, ஐரோப்பியர்கள் வீடுகளில் தோரணமாகவும், கழுத்தில் மாலையாகவும் வெங்காயத்தை சூடி வந்தனராம்.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேடிஸ், வெங்காயத்தில் தொற்றுநோய் எதிர்ப்பு, சிறுநீர் பெருக்கம் மற்றும் காயங்களை ஆற்றுகிற பலன்கள் இருப்பதாய் தனது மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கர் மற்றும் இங்கிலாந்து நாட்டவர், நோய் தீர்க்கும் உணவாய் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். வெங்காயத்தை மதித்த கதைகள் போலவே, வெங்காயத்தை மிதித்த கதைகளும் ஏராளம் இருக்கின்றன.

உலக நாடுகளெங்கும் அதிகம் பயிரிடப்படும் தாவரங்களுள் ஒன்று வெங்காயம். வெவ்வேறு தட்பவெப்ப நிலையிலும், வெவ்வேறு மண் வளத்திலும், விதைகள் அல்லது வறண்ட வெங்காயம் கொண்டு சுலபமாய் பயிரிடப்படும் வெங்காயத்தை எளிதாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் முடியும் என்பதே இதன் சிறப்பு. ஏறத்தாழ 170 நாடுகள் வெங்காயத்தைப் பயிரிடுகின்றன. இதில் அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா, மாலே, ஜப்பான், அங்கோலா, எகிப்து உள்ளன. நம் நாட்டில், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது.

வெங்காயச் செடியின் வயது ஏறத்தாழ நூறு நாட்களாகும். அதேசமயம் குறுகிய காலப்பயிராகவும், ஏனைய பயிர்களைவிட அதிக நோய் தாக்குதலுக்கும், பூச்சித் தாக்குதலுக்கும் உள்ளாகிறது என்பதாலும், சாகுபடிக்கு அதிக உழைப்பை இது கோருகிறது. சில நேரங்களில் அதிக விலை ஏற்றம் காரணமாக, தங்கத்திற்கு ஒப்பானது என கேலியாக சித்தரிக்கப்படுவதும், இதற்கு நேர்மாறாக சாகுபடி செய்த வெங்காயத்தை வீதியில் வீசுகிற நிகழ்வுகளையும் காண நேரிடுகிறது.

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என்கிற அடைமொழியோடு, பெயரில் மட்டுமே இது ‘சின்ன வெங்காயம்’, பலன்களிலோ மிகப்பெரிய வெங்காயமாய் திகழும், இயற்கை அன்னை ஈந்த இந்த அருமருந்து பற்றிய தகவல்கள், இதன் குணங்களைப் போலவே அதிசயிக்க வைக்கிறதல்லவா..?!

(இயற்கைப் பயணம் நீளும்!)