Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாதவிடாய் வலியை குறைக்க உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்

நன்றி குங்குமம் தோழி

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செயல்முறையாகும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கடினமாக வயிற்று வலியோ அல்லது இடுப்பு வலியோ அல்லது உடல் சோர்வு போன்ற வலி அதிகமாகவும், சிலருக்கு வலி குறைவாகவும் இருக்கும். இது தவிர அஜீரணம், உடல் பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படும். பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியை பொறுத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த நாட்களில் அதிக வலி ஏற்படுவது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. மாதவிடாய் காலத்தில் மாதந்தோறும் வலி அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மாதவிடாய் நாட்களில் லேசான வலியை குறைப்பதில் பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும்.

* தர்பூசணி

மாதவிடாய் நாட்களில் வலியை குறைக்க தர்பூசணியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நாட்களில் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்வு பிரச்னை உள்ளதால் நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்று உப்புசத்தை குறைப்பதோடு உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.

* பீட்ரூட்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறார்கள். அதே நேரத்தில் ரத்தப்போக்கு உடலில் ரத்த சோகையை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக பீட்ரூட்டை உட்கொள்ளுங்கள். பீட்ரூட் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு அதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்தும்.

* எலுமிச்சை

மாதவிடாய் காலத்தில் எலுமிச்சை தண்ணீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மனநிலை மாற்றங்கள் மற்றும் பலவீனத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

* இஞ்சி

இஞ்சியை உட்கொள்வது வீக்கம் மற்றும் பிடிப்புகளை பெருமளவில் குறைக்க உதவும். இஞ்சியில் ஜிஞ்சரால் உள்ளதால் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இது ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதன் மூலம் வலியைக் குறைக்கிறது.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.