Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதாம் பிசினின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இதை உணவிலும் சேர்க்கலாம். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில். கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லது. பல ஆரோக்கிய நன்மைகளையும் பாதாம் பிசின் கொண்டுள்ளது. இது ஜிகர்தண்டா, ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் போன்றவற்றில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சத்து நிறைந்த பாதாம் பிசினில் 92.3 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸ், 2.4 விழுக்காடு புரதம் மற்றும் 0.8 விழுக்காடு கொழுப்பு நிறைந்திருக்கிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன.ஒல்லியாக இருக்கும் நபர்கள் உடல் எடை அதிகரிக்க இதை சாப்பிடலாம். இதில் 90 விழுக்காடு அளவுக்கு கார்போஹைட்ரேட்கள் இருப்பதால் பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கிறது. அந்தவகையில், பளுதூக்கும் போட்டிக்கு தயாராகும் வீரர்கள் பலரும் பாதாம் பிசின் பாலை விரும்புகின்றனர். உடல் எடை அதிகரிப்பு மூலம் வீரர்கள் அதிக எடை தூக்க முடியும் என்பதற்காக.

பாதாம் பிசின் இரத்தத்தில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பாதாம் பிசினை உட்கொள்வது கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.கர்ப்பிணிகள் பாதாம் பிசினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திலும் பாதாம் பிசின் பங்கு வகிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதிலும் பாதாம் பிசின் உதவுகிறது.

பாதாம் பிசின் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. உடலில் கழிவுகளை அகற்ற உதவுவதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. பாதாம் பிசினில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்புகளை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது. பாதாம் பிசினின் தொடர்ச்சியான நுகர்வு பல நோய்களைத் தவிர்க்கும். மூட்டு வலியையும் குறைக்க உதவுகிறது. பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளை பாதாம் பிசின் கொண்டுள்ளது.

பாதாம் பிசின் எரிச்சல் மற்றும் வெயிலின் தாக்கத்தை தணிப்பதன் மூலம் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தொடர்ந்து உட்கொண்டால் இயற்கையான பளபளப்பை பெற முடியும்.கோடை சீசனில் கட்டாயம் பாதாம் பிசினைச் உணவில் சேர்க்க வேண்டும். இது உடல் சூட்டை குறைத்து உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்க உதவும்.

தொகுப்பு: ஸ்ரீ