Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நலம் காக்கும் கை வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

* சில்லென்று தண்ணீரை குடித்துக் குடித்து தொண்டை கமறல் ஏற்பட்டால் உப்பு கலந்த வெது வெதுப்பான நீரால் (அடிக்கடி வாயில் தொண்டையில் படும் வரை) கொப்பளித்து, துப்புங்கள்.

* கண் எரிச்சலை தடுப்பதற்கு உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து வில்லைகளாக நறுக்கி, கண்களின் மேல் போட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க கண் எரிச்சலை சரிசெய்ய முடியும்.

* வெள்ளரியையும் வில்லைகளாக நறுக்கி கண்களின் மீது வைத்து மெல்லிய துணியால் கட்டிவிட்டு படுத்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

* கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவி வர, கண் எரிச்சல் அடங்கும்.

* நீர்மோரில் வெள்ளரித்துண்டு சப்ஜா விதைகளைப் போட்டுப் பருக தாகம் தணியும்.

* உலர்ந்த வேப்பம் பூவில் 50 கிராம் அளவு எடுத்து, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறிய பிறகு, வேப்பம் பூ எண்ணெய் இரண்டையும் தலையில் நன்றாகத் தேய்த்து, அரைமணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர், சீயக்காய்ப் பொடியைத் தேய்த்துக் குளித்தால், பொடுகு பிரச்னை தீர்ந்துவிடும். இவ்வாறு வாரத்திற்கு ஓரிரு முறை என மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு நீங்கிவிடும்.

* காலையில் மாவுச்சத்து நிறைந்த அரிசிச் சோறு, இட்லி தோசைக்குப் பதிலாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்களைச் சாப்பிடுங்கள். நல்ல சத்து கிடைத்துவிடும். எளிதில் செரிமானம் ஆகி, பகலில் நன்றாகப் பசிக்கவும் செய்யும். இவ்வாறு செய்தால், மூன்று நாட்களில் முகம் பொலிவு பெறுவதை நீங்களே காண்பீர்கள்.

* கை, கால், விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு எந்த மருந்தும் தேவையில்லை. மிதமான வெந்நீரில் கல்லுப்பு எலுமிச்சைச்சாறு கலந்து சற்று கை, கால்களை சில நிமிடங்கள் வரை வைத்திருந்து பிரஷ்ஷால் தேய்த்துக் கழுவுங்கள்.

காலையில் எழுந்ததும், பல்லைத் துலக்கி விட்டு ஒரு லிட்டர் தண்ணீரைக் குடியுங்கள். அப்படி பழக்கம் இல்லாதவர் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தால், குமட்டலாம். வாந்தி கூட வரலாம். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துப் பழகிக் கொள்ளுங்கள். சில நாட்களில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க முடியும். அவ்வாறு குடித்து வந்தால், பிற்பகல் வரையிலாவது, நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைப் பார்ப்பவரே கண்டுபிடித்துக் கூறிவிடுவர். ஆனால், அதற்குக் காரணம் தண்ணீர்தான் என்பதை மட்டும் பிறர் அறிய முடியாது.