Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியத்தை காக்க உதவும் குயினோவா!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பலவித டயட் வகைகளை பின்பற்றுகின்றனர். அதற்காக பலவித உணவுமுறைகளையும் கடைபிடிக்கின்றனர். அந்தவகையில், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியமாக இருக்கவும் உலகளவில் குயினோவாவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். குயினோவா என்பது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

அரிசி, கோதுமை போன்ற கார்போ உணவுகளுக்குப் பதிலாக தானிய வகைகள் பலவும் சமீபகாலமாக உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த குயினோவா. குயினோவா என்பது நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்களான வரகரிசி, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய வகையைச் சார்ந்தது.

இது முழுக்க முழுக்க புரதச்சத்து நிறைந்த தானியம் ஆகும். இதனை அரிசி சாதத்திற்கு மாற்றாக பலரும் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கீன்வா என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இது பசைய அழற்சி இல்லாத குளூட்டன் ப்ரீ உணவும் கூட. இதனை, உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். அவை குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட அரிசியைத் தவிர்ப்பதற்கான அதே அளவு கார்போ கொண்ட கூடவே சிறிது அதிகம் நார்ச்சத்து இருக்கிற கோதுமையைத் தேர்வு செய்கிறோம். ஆனால் நாம் தவிர்க்க வேண்டியது ஒட்டுமொத்தமாக ஸ்டார்ச் அதிகம் இருக்கிற எல்லா தானியங்களும்தான். அதற்கு பதிலாக குயினோவா போன்ற குளூட்டன் ஃப்ரீ தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது. கிட்டதட்ட 9 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு தானியம் என்றால் அது குயினோவாதான். 100 கிராம் சமைத்த குயினோவாவில் கிட்டதட்ட 120 கலோரிகள் இருக்கின்றன.

புரதச்சத்து - 4.4 கிராம்

கொழுப்புச்சத்து - 1.9 கிராம்

கார்போஹைட்ரேட் - 19.4 கிராம்

நார்ச்சத்து - 2.8 கிராம்

கால்சியம் - 17 மில்லி கிராம்

மக்னீசியம் - 64 கிராம்.

9 வகை அமினோ அமிலங்களும் இரும்புச் சத்தும் அதிகமாக இருக்கிறது. தாவர அடிப்படையிலான புரதம் இதில் அதிகமாக இருப்பதால் வீகன் டயட் மேற்கொள்பவர்களும் இந்த குயினோவாவை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

குயினோவாவில் அதிக அளவிலான ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் நிறைந்திருக்கின்றன. பைட்டோ நியூட்ரிஷன்கள் அதிகம் கொண்டது.நம்முடைய உடலில் உண்டாகும் ஏராளமான நோய்களைத் தீர்க்கவும் தடுக்கவும் தேவைப்படுகிற நுண்ணூட்டச்சத்துக்கள் இதில் அதிகமாகவே இருக்கின்றன.மற்ற தானியங்களை ஒப்பிடும்போது இதில் அதிக அளவில் நிறைவுற்ற கொழுப்பும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. அதிக அளவிலான நார்ச்சத்துக்களும் பார்லியை (barely) போன்று அதிக புரதச் சத்தும் உள்ளடக்கியது.

இது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்கெனவே உள்ள எடையைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிக பயனுள்ளது.இதிலுள்ள புரதங்களும் நார்ச்சத்தும் அதிகமாக பசியெடுக்காமல் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கொஞ்சமாக எடுத்துக் கொள்ளும்போதே வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு எனர்ஜியைக் கொடுத்து பசியைக் குறைக்கும். இதன் கிளைசெமிக் குறியீட்டு எண் மிக மிகக் குறைவு.

நீரிழிவு நோயாளிகள் குயினோவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது நம்முடைய உடலில் ட்ரை-கிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது.இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கச் செய்யாமல் இருக்கவும் பயன்படுகிறது. அடர்த்தியான, அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதோடு இயற்கையிலேயே க்ளூட்டன் ஃப்ரீ தன்மை கொண்டது. அதனால் மற்ற க்ளூட்டன் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த தானியங்களுக்கு பதிலாக குயினோவா எடுத்துக் கொள்வது நல்லது.

குயினோவா உணவை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது கோலியாக் போன்ற அழற்சி சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தீர்வளிக்கிறது. இதில் அதிக அளவிலான நார்ச்சத்து்க்கள் நிறைந்திருப்பதால் இது வயிறு ஆரோக்கியம் மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. அதனால் அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்த்து குயினோவா போன்ற தானியங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.

குயினோவா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆன்டி- இன்பிளமேட்டரி பண்புகள் இதில் நிறைந்திருக்கின்றன. ப்ரோ-பயோடிக் செய்யும் வேலையை குயினோவா செய்கிறது. அதனால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன.