Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டச்சத்து மிகுந்த பிரவுன் ரைஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக அரிசி வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும், ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையிலும் வேறுபடுகின்றன. முந்தைய காலங்களில் அரிசியை உமியுடன் எடுத்துக் கொள்வர். ஆனால், காலப்போக்கில் உமி நீக்கப்பட்ட வெள்ளை அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்த பிறகு, வித விதமான நோய்களும் உருவாகி வருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஆரோக்கியம் தரும் பிரவுன் அரிசி பற்றி தெரிந்துகொள்வோம்.

பிரவுன் அரிசி என்பது உமி நீக்கப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகும். எனவே, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகமாக கொண்டுள்ளது. இந்த அரிசி கொழுப்பு, கலோரி மற்றும் பசையம் இல்லாததாகும். வெள்ளைநிற அரிசியைப் போல பிரவுன் அரிசி சுவையாக இல்லாமல் இருப்பினும், பழுப்பு அரிசி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பழுப்பு அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் பி1, பி2, பி3, மற்றும் பி6, வைட்டமின் ஈ, மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும், இதில் ஃபிளவனாய்டுகள், புரதங்கள், மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

இயற்கையாகவே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பிரவுன் அரிசி உதவுகிறது. இது குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், உட்கொள்ளும் உணவு மெதுவாக ஜீரணமாகி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய பாலிபினால்கள் இருப்பதால் இவை சர்க்கரையை மெதுவாக வெளியிட உதவுகின்றன.

உடல் எடையைக் குறைக்க பயன்படும் பிரபல உணவுகளில் ஒன்றாக பிரவுன் அரிசி உள்ளது. இதற்கு இதில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, குறைந்த கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. மேலும், இது தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.

பழுப்பு அரிசியில் கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், பிரவுன் அரிசி எடுத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பிரவுன் அரிசி நன்மை தருகிறது. மேலும் இவை மனச்சோர்வு, பதற்றம் அல்லது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

தொகுப்பு: தவநிதி