நன்றி குங்குமம் டாக்டர்
சர்க்கரை வள்ளி கிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது மிதமான சுவையோடு நிறைந்த மாவுச்சத்து கொண்டது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. இது கண் பார்வை, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் குளிர்காலத்தில் சருமப் பொலிவை பாதுகாக்கவும் இக்கிழங்கு துணை புரிகிறது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் மன அழுத்தம் மாய்க்கப்படுகிறது. வைட்டமின் பி பங்களிப்பு இந்த கிழங்கில் நிறைந்து உள்ளதால் செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. இதய நோய் பாதிப்பதைப் தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நமது உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றுகிறது.
இதிலிருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.ஆரோக்கியமான மன நிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது.இதிலிருக்கும் வைட்டமின் டி சத்து தைராய்டு சுரப்பிகள், பற்கள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றில் ஆரோக்கியத்தையும் காக்க துணை புரிகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை இது அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
பழுதடைந்த செல்களும் சரியாகின்றன.புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்தது.
கொலஸ்ட்ரால் பிரச்னை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
அதுபோன்று எங்கேனும் விழுந்து அடிபட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகின்றன. அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், இக்கிழங்கின் பங்களிப்பு கணிசமானது. எனவே, அவ்வப்போது சர்க்கரை வள்ளிகிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தொகுப்பு: ஆர்.கே.லிங்கேசன்