Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கறுப்புத் திராட்சையைப் போன்று கரு நீல நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும் வகையைச் சேர்ந்தது ப்ளூ பெர்ரி பழம். உலக அளவில் ப்ளூ பெர்ரி ஒரு சூப்பர் ஃபுட் என்று ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. அந்தளவிற்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் இது. இந்தப் பழம் முழுக்க முழுக்க சாறாக இருக்கும்.ப்ளூபெர்ரியை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதில் தொடங்கி, ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது வரை நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறைவான கலோரிக்கள் நிறைந்துள்ள இனிப்புச் சுவை மிகுந்த இந்த ப்ளூபெர்ரி இதயம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது. வயது முதிர்ச்சியை தடுத்தல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், நினைவாற்றலை மேம்படுத்துதல் என பல்வேறு நன்மைகள் தருகிறது. இப்பழத்தின் மேலும் சில நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

ப்ளுபெர்ரியில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், போலேட் சத்து, மினரல்கள், இரும்புச்சத்து, ஜிங்க், மாங்கனீசு, ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த பழங்களில் ப்ளூ பெர்ரியும் ஒன்றுஒரு கப் பிரஷ் ப்ளூ பெர்ரியில், 84 கலோரிகள் வரை நமக்குக் கிடைக்கின்றன. அதில் 22 கிராம் அளவு கார்போஹைட்ரேட்டும், 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்தும் இருக்கிறது.

இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் தினமும் கூட எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவை நிர்வகிப்பதில் மிகச்சிறப்பாக இந்த ப்ளூ பெர்ரி செயல்படும். இதில் எல்லா வகை ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் முறைப்படுத்துகிறது. இதை சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனெனில் ஒரு கப் ப்ளூ பெர்ரியில் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. இருந்தாலும் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. குறிப்பாக இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தாராளமாக ப்ளு பெர்ரியை சாப்பிடலாம்.

ப்ளூ பெர்ரியின் கிளைசெமிக் குறியீட்டு எண் 53. மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய உணவுடன் ப்ளூ பெர்ரியைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ளூ பெர்ரியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய். குடல் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. நம்முடைய தினசரி உணவில் ப்ளூ பெர்ரியைச் சேர்த்துக் கொள்வதினால் கார்டியோ வாஸ்குலர் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது.

தொகுப்பு: ஸ்ரீ