Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாயும் சேயும் நலம்..

நன்றி குங்குமம் டாக்டர்

பச்சிளங் குழந்தை + தாய்மார்கள் பராமரிப்பு டிப்ஸ்!

பிறந்த குழந்தை இருக்கும் வீடுகள் குதூகலத்தின் வசிப்பிடங்கள். அதே சமயம் நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என வருபவர்கள், ஆளாளுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து பெற்றவர்களைக் குழப்புவார்கள். ’குழந்தை விஷயம் ஆச்சே ரிஸ்க் எடுக்க முடியுமா?’ எனத் தவிப்பார்கள் தம்பதிகள். பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கான முக்கியமான டிப்ஸ் என்னென்ன, வாங்க பார்க்கலாம்…

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால் குழந்தைக்கு இன்ஃபெக்‌ஷன் எனப்படும் நோய்தொற்று ஏற்படக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. எனவே தண்ணீர்கூடத் தரத் தேவை இல்லை. அவசியம் எனில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் தரலாம். அதுவும் எப்போதாவதுதான்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் எனில் தாய்ப்பாலை சுத்தமான எவர் சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடிபோட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். இதனைக் குழந்தைக்குத் தேவைப்படும்போது எடுத்துப் புகட்டலாம். ஃபிரிட்ஜில் வைத்த பாலைக் கொதிக்கவைக்கக் கூடாது. ஒரு மணி நேரம் வெளியேவைத்துக் குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த பாலை 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது பால் வழிந்து கழுத்து, தோள்பட்டை மேல் பட வாய்ப்பு உள்ளது. இதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டால் சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, குழந்தையின் உடலை, பால் குடித்து முடித்ததும் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை ஃபீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், மூன்று வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமம். ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தினால் தரமான பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தவும். ஒவ்வொருமுறையும் அதனைப் பயன்படுத்திய பிறகும் வெந்நீரில் கழுவி உலரவைக்க வேண்டும்.

ஏழாவது மாதத்தில் இருந்து திட உணவைக் கொடுக்கத் தொடங்கலாம். சிலர் செரிமானம் எளிதாக இருப்பதற்காக நன்கு குழைந்த மோர், தயிர் சாதம் மட்டும் கொடுப்பார்கள். இதனோடு, குழந்தைக்குப் பருப்பு சாதமும் கொடுக்க வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் பி, நார்சத்து ஆகியவை சேரும். ஒரு வயது நிறைவடையும் வரை பசும்பாலைத் தவிர்ப்பது நல்லது. இதனால், குழந்தையின் செரிமானத்திறன் மேம்படும்.

முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். அதற்குப் பிறகு, தூக்கம் படிப்படியாகக் குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரசாயனக் கொசுவர்த்திகள், கிரீம்கள், மேட்கள், லிக்யூவிட்கள் போன்றவற்றைவிட கொசுவலையே சிறந்தது. கொசு பேட் பயன்படுத்துவதும் நன்றே. குழந்தைக்குத் தூக்கம் கெடும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகள் சிறந்தவை.காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக் கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்கவைப்பதால், வைட்டமின் டி சத்து கிடைக்கும்.குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். மேலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது.

குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்கள் எதுவும் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளின் சருமத்தில் வியர்வைத் துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.பிறந்த குழந்தைகளுக்குக் கண்மை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் இன்று சந்தையில் கிடைக்கும் கண்மைகளில் பெரும்பாலானவற்றில் செயற்கையான பொருட்கள் நிறைந்துள்ளன என்பதால் அவற்றால் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடலில் தடவி மசாஜ் செய்வது நல்லது. கண், மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் பி.ஹெச் லெவல் குறைவான சோப்புகள் அல்லது பயத்தம் பருப்பு போட்டு குளிக்க வைக்கலாம். தலைக்குக் குளித்ததும் தலையை நன்றாகத் துவட்ட வேண்டும். இல்லாவிட்டால் சளிப்பிடிக்கும்.குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்கவைப்பதால், மருத்துவரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வசம்புக்கயிறை குழந்தைகள் கையில் கட்டிவிடுவதைத் தவிக்க வேண்டும். இதனை, குழந்தை வாயில் வைக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பூசி போட வேண்டும். குழந்தை வளர்ந்து 16 வயதை நெருங்கும் வரை பல்வேறு வகையான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதால் சின்னம்மை, பெரியம்மை, ஹெபடைட்டிஸ் எனும் மஞ்சள் காமாலை, ரூபெல்லா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள், போலியோ போன்ற முடக்க நோய்கள் உட்பட பல்வேறு நோய்களை வென்று ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய காலத்தில் அந்தந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது.

இளம் தாய்மார்களுக்கான டிப்ஸ்!

குழந்தை பிறந்த காலங்களில் உடலும் மனமும் சோர்ந்து இருக்கும். எனவே, போதுமான அளவு ஓய்வு தேவை. உடலை வருத்திக்கொண்டு எதையும் செய்ய முயலாதீர்கள். குழந்தை பிறப்பு என்பது அன்னையின் உடலில் இருக்கும் அடிப்படையான சத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. இதனால் அன்னையின் உடல் மிகவும் பலவீனமாய் இருக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம் மிக அவசியம். தொடக்க நாட்களில் உடற்பயிற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம்.

குழந்தைக்குத் தாய்ப் பால் மிகவும் முக்கியம். ஆறு மாதங்கள் வரை குழந்தை தாய்ப்பால்தான் பருக வேண்டும் என்பதால் தாய்ப்பால் பெருக்கும் உணவுகள், சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள். குறிப்பாக, உங்களுக்கு எது பிடிக்கும் என்று கருதிச் சாப்பிடாமல் குழந்தைக்கு இது சேருமா என்பதை மனதில்கொண்டு சாப்பிடுங்கள். பெரும்பாலும் கருவுற்ற நாட்களில் நீங்கள் சாப்பிடாமல் தவிர்த்தது குழந்தைக்கு சேராமல் போக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவற்றை இயன்றவரை தவிர்த்துவிடுங்கள்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற கவனத்தில் உங்கள் உடல் நலனைக் காக்க மறக்காதீர்கள். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். அளவான உடற்பயிற்சி பிரசவகாலத்தில் உங்கள் உடலில் தங்கிய கொழுப்பையும் அதிகப்படியான எடையையும் குறைக்கும். ஆரோக்கியமான உடல்வாகைக் கொண்டு வரும். குறிப்பாக, வயிற்றுச் சுருக்கங்கள் மற்றும் அதிகப்படியான தொப்பைக்கு உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். சிசேரியன் ஆன பெண்கள், வயிற்றில் தையல் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் தாயின் எடை அதிகமாக வேண்டும் என்பதால் நன்றாகச் சாப்பிட்டு இருப்பீர்கள். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள். அதே சமயம் அளவாகச் சாப்பிடுங்கள். கர்ப்ப காலப் பழக்கம் இப்போதும் தொடர்வது எடை அதிகரிப்புக்கே வழிவகுக்கும். ஆரோக்கியமாகச் சாப்பிடுவது என்பது வேறு. அதிகமாகச் சாப்பிடுவது என்பது வேறு.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் என ஒவ்வொன்றுமே நம் உடலுக்கு அவசியம். எனவே, அனைத்தும் இணைந்த சமச்சீர் டயட் ஒன்றே இக்காலங்களில் உடலுக்கு ஏற்றது. எனவே, உடல் இளைக்க வேண்டும் என்றோ ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றோ கண்ட கண்ட டயட்டையும் முயலாதீர்கள்.

ஜங்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்றவற்றை சாப்பிட மனம் அரிக்கும்.

ஆனால், தாய்ப்பால் முடியும் வரை இவற்றை ஒதுக்கி வைப்பதே நல்லது. அதே போல் இரவு நேரங்களில் உண்ணாதீர்கள். பகலில் நான்கைந்து வேலையாக உணவைப் பிரித்து உண்ணுங்கள். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சி உங்கள் உடலில் போதுமான அளவு ஆக்சிஜனைக் கொண்டு வந்து மூளையைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதனால் பிரசவத்துக்குப் பிறகாக வரும் Postpartum depression போன்ற மன அழுத்தங்கள் உங்களை நெருங்காது.