Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றங்கள் ஏற்படும் மத்திய வயது!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

செவ்விது செவ்விது பெண்மை!

40-45 வயதுக்குள் உள்ள பெண்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய மாறுதல் கட்டத்தை அனுபவிக்கிறார்கள். இது பொதுவாக “நடுத்தர வயது மாற்றம்” என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொருவருக்கும் “கிரைசிஸ்”(Crisis)ஆக இருக்காது; ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது ஒரு சுயபரிசோதனையின் காலம். இந்த வயதில் பெண் தனது வாழ்க்கையை, உறவுகளை, இலக்குகளை, “நான் எந்த இடத்தில் நிற்கிறேன்?” என்ற அடையாள உணர்வை மீண்டும் ஆராய முயலும் ஒரு கட்டம் இது. இந்த கட்டத்தின் உள் உணர்வுகளும், உளவியல் மாற்றங்களும் உயிரியல் மாற்றங்கள், குடும்பப் பொறுப்புகள், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுடன் தொடர்புடையவை.

முதலில் பார்க்க வேண்டியது உடலியல் (ஹார்மோன்) மாற்றங்கள். இந்த 40-45 வயது காலம் பெரும்பாலும் “ப்ரிமெனோபாஸ் (premenopause)” எனப்படும் நிலைக்கு ஏற்படும். இது menopause வருவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் ஹார்மோன் அளவுகள் சரியாக இருக்காமல் ஏற்றத் தாழ்வாக மாறும் ஒரு காலம். இதில் estrogen மற்றும் progesterone என்ற ஹார்மோன்கள் மாற்றமடைவதால் மனநிலை பாதிக்கப்படும்.

சில பெண்களுக்கு கோபம் அதிகரித்தல், சற்றே தீவிரமான உணர்ச்சி பதில்கள், கவலைக்கான காரணம் தெரியாமல் மனஅழுத்தம், தூக்கக்குறைவு, மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். சிலர் இது “நான் மாறிகொண்டிருக்கிறேனா?” அல்லது “நான் இதுபோல ஏன் ஆகிறேன்?” என்று தங்களை சந்தேகிப்பார்கள். உண்மையில், இது உடலின் இயல்பு மாற்றம். ஆனால் இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் தனிமையாகப் போராடுகிறார்கள்.

அடுத்து அடையாள உணர்வு (Self-identity). இவ்வயது வரையில் பல பெண்கள் தங்களை “மனைவி”, “தாய்”, “மகள்”, “வேலைக்காரி”, “குடும்பத்திற்காக ஓடுபவர்” போன்ற பங்குகளின் மூலம் வரையறுத்திருக்கலாம். 40-45 வயதில் பெண்கள் “நான் யார்? நான் என்ன விரும்புகிறேன்?” என்ற ஆழமான கேள்விகளை தங்களுக்கு முன் வைக்கத் தொடங்குகிறார்கள். குழந்தைகள் சிறிது பெரியவர்களாகி, தங்களுடைய வாழ்க்கையில் தாமாக செல்கின்றன. இதனால் சில பெண்களுக்கு “குழந்தைகள் வேண்டி நான் இவ்வளவு காலம் வாழ்ந்தேன்; இப்போது என்னுடைய வாழ்க்கையில் என் இடம் என்ன?” என்ற வெற்றிட உணர்வு தோன்றலாம். இதே நேரத்தில், சில பெண்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களைத் தொடரும் வலிமையை பெறுவார்கள் - புதிய கல்வி, தொழில் வளர்ச்சி அல்லது தங்கள் தனிப்பட்ட ஆர்வங்கள்.

தொழில் மற்றும் பணிச் சூழலும் இந்த வயதில் மனநிலையை பாதிக்கக்கூடியது. பல பெண்கள் வேலைப்பளுவில் நன்றாக நிலைபெற்றிருந்தாலும், சில சமயம் அவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் நின்றுபோனதுபோல் தோன்றலாம். சிலருக்கு வீட்டுப் பொறுப்பு மற்றும் வேலைப் பொறுப்பு இரண்டும் சேர்ந்து சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். மேலும் சிலருக்கு “இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? இன்னும் நான் என்ன சாதிக்கலாம்?” என்ற ஆவல் தோன்றலாம். ஆனால் அதற்கான குடும்ப சூழல், நேரம், பணம் மற்றும் பொறுப்புகள் தடையாக இருந்தால், மனம் குழப்பமடையும்.

உறவுகளிலும் மாற்றங்கள் நடக்கிறது. திருமண உறவுகளில் சிலர் ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வார்கள்; சிலர் தாழ்வு உணர்வு, புரிதல் கோளாறு அல்லது இடைவெளியை அனுபவிப்பார்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகு கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் அறிந்து கொள்ள வேண்டிய நிலை வரும். சில பெண்களுக்கு உடலியல் மாற்றங்களால் பாலுணர்ச்சி (libido) குறையலாம். இதனால் மனதிருப்தி, உடற்காட்சிப் பற்றிய சுயநம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகியவை பாதிக்கப்படலாம்.

இந்த வயதில் உடல் மாற்றங்கள் தெளிவாக தெரியும் - எடை கூடுதல், தோல் மாற்றங்கள், முடி குறைவு, சுருக்கங்கள். சமூகத்தில் இளைஞர்களின் அழகிற்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும் போது, பெண்கள் தங்களை ஒப்பிட்டு, “நான் மாற்றமடைந்துவிட்டேன்” என்ற உணர்வு பெறலாம். இதனால் சில பெண்களுக்கு தன்னம்பிக்கை குறையலாம். ஆனால் பல பெண்கள் இந்த வயதில் மனப் பரிபக்வத்துடன் தங்கள் திறமை, அனுபவம், உணர்ச்சி சமநிலை ஆகியவற்றை அதிக மதிப்பிடத் தொடங்குகிறார்கள்.

குடும்ப சூழலிலும் பெண்கள் பெரும்பாலும் “சாண்ட்விச் ஜெனரேஷன்”(Sandwich generation) ஆக இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு ஒருபக்கம் வளர்ந்துவரும் குழந்தைகளின் தேவைகள், மறுபக்கம் வயதான பெற்றோரின் மருத்துவ மற்றும் உணர்ச்சி தேவைகள். இதனால் அவர்கள் “எல்லோருக்கும் நான் இருக்கிறேன்; ஆனால் என்னக்காக நான் யார்?” என்ற மனச்சுமையை அனுபவிக்கிறார்கள். சமூகத்தில் பெண்களுக்கு “நீ பொறுத்துக்கொள், நீ தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு அதிகம். இதனால் பெண்கள் தங்கள் தேவைகளைக் குறைத்து, ஓய்வில்லாமல் செயல்படுவார்கள். இது மனஅழுத்தத்தையும் சோர்வையும் அதிகரிக்கும்.

இந்த வயதில் தோழிகளின் துணை மிக முக்கியம். உணர்வைப் பகிரக்கூடிய நண்பர்கள் உள்ள பெண்களுக்கு மனநலம் அதிக பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம், வேலை, குடும்பம், பொறுப்பு காரணமாக பல பெண்கள் தனிமையாக உணர்கிறார்கள்.ஆன்மீக மற்றும் வாழ்க்கை அர்த்த தேடலும் இந்த வயதில் அதிகரிக்கும். “என்ன என் வாழ்க்கையின் நோக்கம்?” “நான் எவ்வாறு அமைதியாக வாழலாம்?” என்ற கேள்விகள் மனதில் எழும். இதுவே தன்னை அறிய, தன்னை கவனிக்க, மனஅமைதி வழிகளை தேட வழிவகுக்கும்.

சில பெண்களுக்கு இந்த காலத்தில் மனச்சோர்வு, கவலைக்கோளாறு, தூக்கக்குறைவு, சோர்வு போன்ற பிரச்னைகள் உருவாகலாம். இது “பலவீனம்” அல்ல. இது கவனிக்க வேண்டிய நிலை. தேவையான போது மருத்துவ ஆலோசனை, உளவியல் ஆலோசனை, குடும்ப ஆதரவு உதவிகரமாக இருக்கும்.இவ்வயது பெண்களின் மிகப்பெரிய வலிமை - அவர்களுடைய அனுபவம், உணர்ச்சி நுண்ணறிவு, பொறுமை, சவாலை சமாளிக்கும் திறன். அவர்கள் வாழ்க்கையை ஆழமாக புரிந்து கொள்ளும் வலிமையைக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில், 40-45 வயது பெண்களின் உளவியல் மாற்றங்கள் இயல்பானவை. அவற்றை ஏற்றுக்கொள்வதும், “நான் என்னுடைய உணர்வுகளை கவனிக்க வேண்டும்” என்ற உணர்வை வளர்ப்பதும் முக்கியம். தனக்காக நேரம் எடுத்துக்கொள்வதும், உதவி கேட்பதும், உடல்-மனம் ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் இந்த காலத்தை ஒரு புதிய, அமைதியான, சுயத்தால் நிரம்பிய கட்டமாக மாற்றும்.