Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஜாதிக்காய்!

நன்றி குங்குமம் டாக்டர்

உங்களுடைய வளர்சிதை மாற்றம் பலவீனமாக இருந்தால் ஜாதிக்காயை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவும். மேலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கூட்டும்.

வீட்டுக்குள் தனித்து இருப்பது, வெளியே செல்வதைத் தவிர்ப்பது, கஷாயம் போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது, நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது, தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்துவிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். மேற்கூறிய விஷயங்கள் யாவும் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவினாலும் சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மூலிகைகளை எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அந்த வகையில் ஜாதிக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சரும அழகு சார்ந்த நன்மைகளையும் வழங்குகிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த ஜாதிக்காய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த தகவல்களை தெரிந்துகொள்வோம்.செரிமானத்துக்கு உதவுகிறது. ஜாதிக்காய் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள மகத்தான குணங்கள் வாத மற்றும் கபதோஷங்களை சமநிலைப்படுத்தவும், சிறந்த செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் பித்த தோஷத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

மேலும், ஜாதிக்காயில் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை உறுதிசெய்கிறது. அதோடு நோய்த் தொற்று ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது. குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இருக்க, ஜாதிக்காய் சேர்த்த உணவுகளை அவ்வப்போது சாப்பிடக் கொடுக்கலாம்.நார்ச்சத்து நிறைந்தது ஜாதிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரைப்பைப் பிரச்னைகள், அசிடிட்டி, வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளிலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.ஜாதிக்காய் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாகும். இவை ஃப்ரீ ரெடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

இதயநோய், நீரிழிவு, கீல்வாதம் உள்ளி்ட்ட பல தீங்கு விளைவிக்கும் உடல் நலப் பிரச்னைகள் நாள்பட்ட அழற்சியுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஜாதிக்காயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் அவற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும் வாயு தொந்தரவால் ஏற்படும் அழற்சி எதிர்வினைகள் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகின்றன.ஜாதிக்காயில் வலியைக் குறைக்கும் திறன், அஜீரணத்தை எளிதாக்குதல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வாய்வழி பிரச்னைகளை நீக்குதல், அறிவாற்றல் செயல்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் போன்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.

பயன்படுத்தும் முறை

சூடான ஒரு கப் பாலில், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த கலவையானது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும். இதனை அளவோடு எடுத்துக்கொண்டு பயன்பெறுங்கள்.ஜாதிக்காயைச் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்த நிவாரணம் கிடைக்கும்.

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் சிறிதளவு உரசி தாய்ப்பாலில் கலந்து கொடுக்கும் பழக்கம் இன்றளவும் கிராமப்புறங்களில் உண்டு. அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ்