Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தையின்மைக்கு ஆண்களுக்கும் 50% பங்குள்ளது!

நன்றி குங்குமம் தோழி

குழந்தை பேறு... ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் உறவினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பயணம். ஆனால், இன்று குழந்தைபேறு கிடைக்க பல தம்பதிகள் அதற்கான சிறப்பு மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். பெரும்பாலும் குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி வந்த காலம் மறைந்து ஆண், பெண் இருவருக்குமே அதில் சம்பந்தம் என்றாகிவிட்டது. தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்றால் பெண் மட்டுமில்லை ஆண்களும் அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஆண்ட்ரோலஜிஸ்ட் மற்றும் சிறுநீரக மருத்துவரான டாக்டர் சஞ்சய் பிரகாஷ்.

‘‘பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்பட்டால் மகப்பேறு நிபுணரை சந்திப்பது போல் ஆண்கள் ஆண்ட்ரோலஜிஸ்ட் நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அது பலருக்கு தெரிவதில்லை. தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஆண் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைக்கு என தனிப்பட்ட நிபுணர்கள் உள்ளனர். ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து வெளியேறுவதில் சிக்கல், உணர்வின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனை மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மேலும், இதில் காஸ்மெடிக் மற்றும் எமர்ஜென்சி ஆண்ட்ரோலஜி என்ற ஒரு பிரிவும் உள்ளது.

சில ஆண்களுக்கு உறுப்புகள் வளைந்து மற்றும் தடிமன் குறைந்து காணப்படும். இவர்களால் சரியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. தன்னம்பிக்கை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அதனை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். உடலுறவின் போது உறுப்புகளில் பிராக்சர் ஏற்பட்டு தசைக்குள் ரத்தக்கசிவு நிகழும். இதனால் வலி மற்றும் விறைப்புத்தன்மை ஏற்படாது. விந்து வெளியேறினாலும் விறைப்பு குறையாமல் இருக்கும்.

ஆனால், இன்று குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஆண்களும் அதில் சம பங்கினை வகிக்கிறார்கள். கடந்த 40 வருடமாக ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தொற்று, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் குறைபாடு, வெரிகோசெல் போன்றவற்றை காரணங்களாக குறிப்பிடுகிறார்கள். இதனை சரி செய்தால் அவர்களின் பிரச்னை தீரும். ஆனால், எல்லாவற்றையும் விட நம்முடைய வாழ்க்கை முறை, சாப்பிடும் உணவு, மது, புகை போன்ற பழக்க வழக்கங்கள், வேலை பளு, அதனால் ஏற்படும் மன உளைச்சல், உடல் பருமன், சுற்றுப்புற மாசு, லேப்டாப், செல்போன் பயன்பாடு அனைத்தும் விந்தணு உற்பத்தி பிரச்னைக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

மறுபக்கம் தாமதமாக திருமணம் செய்வது. இன்று 30 வயதினை கடந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை கருத்தரிப்பதும் தாமதமாகிறது. அடுத்து இரவு நேர வேலையில் ஈடுபடுவது. நம்முடைய உடல் இரவு நேரம் தூங்கத்தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வேலை பார்க்கும் போது, ஹார்மோன் குறைபாடு ஏற்படும். மேலும், நினைக்கும் போது சாப்பிடுவது, மன உளைச்சலுக்கான மருந்துகள் உட்கொள்வது, நீரிழிவு இவையும் குழந்தையின்மைக்கு மறைமுக காரணங்களாக கருதப்படுகிறது. பெண்களின் மாதவிடாயின் முதல் நாள் முதல் 12 நாட்களுக்குப் பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது கரு உருவாக வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் கணவன், மனைவி அன்யோன்யமாக இருக்க வேண்டும். சினிமாவில் வருவது போல் ஒரே நாள் இரவில் எதுவுமே மாறிடாது.

இவை அனைத்திற்கும் தீர்வு வாழ்க்கை முறையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். இன்று வயதிற்கு மீறிய எடையில் உள்ளனர். அதை குறைக்க உடற்பயிற்சி, சரியான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள், புரதங்கள், விதைகள், உலர் பழங்கள், நல்ல கொழுப்புள்ள உணவுகள் என சரிவிகிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தயிரில் புரோபயாடிக் இருப்பதால், கட்டாயம் அதனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். நம்முடைய தென்னிந்திய உணவில் இவை அனைத்தும் உள்ளன.

அதை யாரும் பின்பற்றுவதில்லை. அடுத்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அதற்காக ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்றில்லை. ஸ்விமிங், நடனப் பயிற்சி, சைக்கிளிங், ஷட்டில் போன்ற விளையாட்டுகள், நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகை மற்றும் மதுப் பழக்கத்தினை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலர் உடல் குறைப்புக்காக சப்ளிமென்டுகளை உட்கொள்வார்கள். அதையும் தவிர்ப்பது நல்லது. ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். அதன் பிறகும் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்’’ என்றவர், உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவரித்தார்.

‘‘அசூஸ்பெர்மியா, விந்தணுக்கள் இருக்காது. ஸ்பர்ம் டோனர்தான் இவர்களுக்கு ஒரே தீர்வாக இருந்தது. இப்போது மருத்துவ முன்னேற்றம் காரணமாக சிகிச்சை முறையால் மாற்றத்தினை கொடுக்க முடியும்.மைக்ரோஸ்கோப் மூலம் ஆக்டிவாக உள்ள விந்தணுக்களை சேகரித்து IVF சிகிச்சை பெறலாம். இதில் மற்றொரு வகை உள்ளது. விந்தணு உற்பத்தி நன்றாக இருந்தாலும், அவை வெளியேறும் பாதையில் அடைப்பு இருக்கும். அதனை மைக்ரோசர்ஜிக்கல் முறையில் குணப்படுத்தலாம்.

பொதுவாக ஆண்களுக்கு XY குரோமோசோம் இருக்கும். அதனுடன் கூடுதலாக Y குரோமோசோம் (XYY) இருந்தால் அவர்களை சூப்பர் மேல் என்று சொல்வோம். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு 13 முதல் 18 வயதில் குரல் உடையும், தோற்றத்தில் மாற்றம் ஏற்படும், மீசை முளைக்கும். ஆண் உறுப்பில் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த மாற்றங்கள் ஏற்படாது. இவர்களுக்கு விந்தணுக்களை சேமித்து IVF சிகிச்சை அளிக்க வேண்டும்.

வெரிகோசெல், விரைப்பையில் உள்ள நரம்புகள் சுற்றிக் கொள்ளும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இதற்கும் மைக்ரோ சர்ஜிக்கல் நல்ல தீர்வினை அளிக்கும். எரைக்டைல் டிஸ்ஃபங்ஷன், 55 வயது நிரம்பிய ஆண்களுக்கு ஏற்படும். இன்று 40 வயதிற்கு கீழ் உள்ள 32% ஆண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இது நாளடைவில் அதிகரிக்கும் என்று WHO அறிவித்துள்ளது.

காரணம், சிறுவயதில் டயபெட்டிக், உடல் பருமன். ரத்த அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம் காரணமாக கூறப்படுகிறது. இவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தங்களை தரக்குறைவா நினைப்பார்கள். சிலர் குடும்ப வாழ்க்கையில் விரிசல்களையும் சந்திப்பார்கள். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். அனைத்துப் பிரச்னைகளுக்கும் தகுந்த சிகிச்சைகள் உள்ளன. அதனை கண்டறிந்து நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டால், தீர்வினை காணமுடியும்’’ என்றார் டாக்டர் சஞ்சய் பிரகாஷ்.

தொகுப்பு: நிஷா