Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும். சதகுப்பை கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.சதகுப்பையின் தாவரவியல் பெயர் - Anethum graveolens.தமிழில் பரவலாக அறியப்படும் இந்தக்கீரை, நமது பாரம்பரிய தமிழ் சமையல் மற்றும் சித்த வைத்தியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கொத்துமல்லி இலைகளைப் போன்ற தோற்றம் கொண்டது. சீரக செடியைப் போன்று காட்சியளிக்கும் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. சதகுப்பை கீரைக்கு சோயிக் கீரை, மதுரிகை என்று வேறு பெயர்களும் உண்டு. இலைகள் இனிப்பு சுவையும் கார்ப்பு சுவையும் கலந்தும் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் சதகுப்பை கீரையின் இலைகள் மென்மையானதாகவும் சிறியதாகவும் இருக்கும். குறிப்பாக 40-60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

சமையலில் சுவையினை அதிகரிக்க நமது முன்னோர்களால் சதகுப்பை கீரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இலைகள் நல்ல வாசனையை கொண்டிருக்கும். கீரையின் பெயரில் பின்பகுதி குப்பை என இருந்தாலும் ஏராளமான மருத்துவப் பலன்களைத் தரக்கூடிய அற்புதமான மூலிகைகளில் ஒன்று சதகுப்பை. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவத்தன்மை கொண்டது. சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.

சதகுப்பையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி உள்ளன. மேலும், உடல் வலிமைக்கு உதவும் தாதுக்களான கால்சியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் சதகுப்பையில் அடங்கியுள்ளன. இதுமட்டுமில்லாமல் பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சதகுப்பையில் உள்ளன. குறிப்பாக அண்டோல், கார்வோன், பிளேவோனாய்டுகள், டெரிபினாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் போன்ற பல்வேறு தாவர மூலக்கூறுகள் உள்ளன.

சதகுப்பையின் மருத்துவ குணங்கள்

*மூச்சுதிணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக சதகுப்பை திகழ்கிறது.

*முதுகுவலி மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.

*செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யக்கூடிய தன்மை சதகுப்பை கீரைக்கு உண்டு.

*பசியை தூண்டக்கூடியது.

*சைனஸ், தலைவலி, காதுவலி போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கக் கூடியது.

*ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து சதகுப்பையில் உள்ளதால் உடல் ஆரோக்கிய மேம்பட உதவுகிறது.

*நுரையீரலில் தேங்கியுள்ள மாசுக்களை நீக்கி சுவாச மண்டலச் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகிறது.

*நார்ச்சத்து மிகுதியாக கீரைகளில் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு உகந்தது.

*வைட்டமின் சி மற்றும் பி சதகுப்பையில் இருப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செல்களின் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸை குறைக்கவும் உதவுகிறது.

*குறிப்பாக கருப்பை சார்ந்த நோய்களை தீர்ப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

*ரத்த அழுத்தத்தை குறைத்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

*நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

சதகுப்பை கீரையை சூப், பொரியல் மற்றும் சாலட் போன்ற உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆக சாதாரண ரசத்துடன் சிறிது சதகுப்பை இலையினைக் சேர்க்கலாம். வெந்தயக்குழம்பு, காரக்குழம்பு செய்யும்பொழுது கடைசியாக சிறிது சதகுப்பை இலை தூவினால் வாசனை மிகுதியாக இருக்கும். வாயுத் தொல்லையால் அவதிபடுபவர்கள் சதகுப்பையை நீரில் கொதிக்க வைத்து சூடாக பருகலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.

குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும். பிரசவித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும். ஜீரணமும் சீராகும்.

மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும். இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பையும் பலமடையும்.இன்றைய வேகமான வாழ்க்கையில் இயற்கை வழிகள் மறைக்கப்பட்டு போகும் நிலையில் சதகுப்பை போன்ற பாரம்பரிய மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.