Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மரவகைகளில் விலை உயர்ந்தது சந்தனமரம். குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை. இதன் காரணமாக, சந்தன மரங்கள் வளரும் இடங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும். சந்தன மரத்தில் அதிகம் பயன்தருபவை அதன் மரக்கட்டைகள்தான். சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு துணைபுரிகின்றன.

அரோமா தெரபியில் சந்தன எண்ணெய் மன அமைதிக்கும் மன அழுத்த பாதிப்புகளை போக்கவும், உடல் சரும வியாதிகளைப் போக்கவும் பயன்படுகின்றன. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கருத்த சருமத்தை சரி செய்யவும், தோலுக்கு இறுக்கத்தையும் தருகிறது. சந்தனத்தை அரைத்து தலையில் வேர்க்காலில் தடவ, தலையில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள், தலைவலி, மூளை இதய பாதிப்புகளை சரி செய்கிறது. உடல் நிலையை சமநிலையில் வைக்கும்.

தூய சந்தனத்தை நீரில் கலந்து அருந்தி வர, ரத்தத்தை தூய்மையாக்கி, உடலை குளிர்விக்கும். மனதை உற்சாகப்படுத்தி சுறுசுறுப்பைத் தரும் சந்தனத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரிப்பு, தேமல், வீக்கம் உள்ள இடங்களில் தடவ அவை குணமாவதோடு, சகல சருமவியாதிகளையும் போக்கும். சந்தனத்தூளை தண்ணீரில் கரைத்து கொதிக்கவிட்டு பருகிவர சிறுநீர் எரிச்சல் குணமாகும். சூட்டினால் உண்டாகும் கண்கட்டி மறையும்.

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிதளவு சந்தனத்தை சேர்த்து தினமும் தொடர்ந்து அருந்திவர நீரிழிப்பு பிரச்னைகள் தீரும். இதயபடபடப்பு, ஜுரம், உடல்மந்தம் அனைத்தையும் குணமாக்கும். சந்தனத்தை மருதாணி விதைகளோடு கலந்து, தூபம் போட வீடுகளில் நறுமண காற்று வீசுவதுடன் மனம் தெளிவாகும். சந்தன எண்ணெய் உடல் நலனுக்கு பயனாகிறது.

சந்தன எண்ணெய் பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப் பூச்சு எண்ணெய்யாகவும் உள் மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு சந்தனம் பலவிதங்களில் பயன் தந்து உடலை மேம்படுத்துகிறது.

தொகுப்பு: மகாலட்சுமி