Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருதாணியின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருதாணியின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்ற முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, கைக்கு அழகையும் சேர்க்கிறது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும். மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் மருதாணி இலைகளில் மட்டுமே உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவற்றை சரிசெய்யலாம். உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.மருதாணி இட்டுக் கொண்டால் சிலருக்கு சளி பிடிக்கும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இதன் இலையை அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலைகளை மைய அரைத்து வடை போல் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு தலையில் தேய்த்து வர இளநரை மறையும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி தீக்காயங்கள் கொப்புளங்கள் மீது பூசினால் குணமாகும்.

மருதாணி இலையை சுடுநீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வாயில் ஊற்றி கொப்பளித்து வர வாய்ப்புண் இரண்டே நாளில் குணமாகும்.

மருதாணி இலையை, மஞ்சள் வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து கரும்படை, வண்ணான்படை, தொடை இடுக்கு அரிப்பில் தடவி குளித்து வந்தால் குணமாகும்.

சொரி, சிரங்குக்கும் இதனை செய்து வந்தால் அரிப்பு நீங்கும்.

தொகுப்பு: எம்.வசந்தா