Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சக்கரவர்த்திக் கீரை மருத்துவ குணங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

சக்கரவர்த்திக் கீரை (celosia argentea) நமது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடத்தை கொண்டுள்ள கீரை வகைகளில் ஒன்று. கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. இது இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது.

இது வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் கீரையாகும். சுமார் 30 செ.மீ. முதல் 60 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. இதில் வெள்ளை, ஊதா மற்றும் கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் பூக்கள் காணப்படும். குறிப்பாக, ஒரு செடியிலிருந்தே நூற்றுக்கணக்கான விதைகள் கிடைக்கப் பெறும். இதை உணவில் சேர்க்கும் பொழுது அவை மட்டுமின்றி நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக்கூடியது. மேலும் இதன் இலைகள், பூக்கள் மற்றும் விதைகள் என அனைத்தும் மருத்துவ தன்மை கொண்டது.

சக்கரவர்த்தி கீரையின் நன்மைகள்

சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் விட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. இது தவிர தாவர மூலக்கூறுகளான பிளேவானாய்டுகள், சாப்போனின்கள், ஆல்கலாய்டுகள், டெரிபினாய்டுகள் பீட்டானலன், டானின்கள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் சக்கரவர்த்தி கீரையில் உள்ளன. இதன் காரணமாகவே பல்வேறு மருத்துவ பண்புகளை இக்கீரை கொண்டுள்ளது.

மருத்துவ குணங்கள்:

*ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுவதினால் உடல் செல்களின் சிதைவை தடுக்கிறது. மேலும் செல்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

*ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தவும், உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

*கல்லீரலை பாதுகாக்க பயன்படுகிறது.

*வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

*இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை தடுக்கவும் பயன்படுகிறது.

*வயிற்றுப்புண், செரிமானம் தொடர்பான பிரச்னைகளுக்கும் சக்கரவர்த்தி கீரை உதவுகிறது.

*சிறுநீரகக் கல்லை கரைப்பதற்கு உதவுகிறது.

*வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சருமம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் நன்மையளிக்கிறது.

*கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்களை சக்கரவர்த்தி கீரை கொண்டுள்ளதால் உடல் வலிமையை அளிக்கிறது.

பயன்படுத்தும் முறை:

சக்கரவர்த்திக் கீரை கூட்டு: சக்கரவர்த்திக் கீரையை நன்கு வெந்த பாசிப்பருப்புடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதிய

ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது.

சக்கரவர்த்தி கீரை தொக்கு: சக்கரவர்த்தி கீரையை நன்கு வதக்கி மிளகாய், மஞ்சள் மற்றும் சீரகம் சேர்த்து தொக்காக பயன்படுத்தலாம்.

நமது இன்றைய வழக்கத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறியிருந்தாலும் இன்னும் இயற்கை உணவுகளுக்கும், பாரம்பரிய உணவுகளுக்கும் தனிச்சிறப்பு நாம் அனைவரின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ நன்மைகள் கொண்ட கீரைகளை உணவில் தவறாமல் சேர்ப்பது நீண்ட ஆயுளைத் தரும்.

வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது. ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும். சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி மறையும்.

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்கக் கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக் கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்கக் கூடியதும், ரத்த சோகையை சரிசெய்யக் கூடியது. பாடல் அன்ன கீரை அல்லாமல், அருள் தரும் சக்கரக் கீரை உணவில் சேர்க்கும் நரகமே ஓடி மறையும்