நன்றி குங்குமம் தோழி
உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரவல்லது கீரை வகைகள். சாதாரணமாக தோன்றினாலும் கீரைகள் பல சத்துக்கள் கொண்டவை. குறிப்பாக சில கீரைகள் உடலுக்கு பலவித சத்துக்களை வழங்கி, உடல் நலத்தை காக்க வல்லதாகும்.
முளைக்கீரை: வைட்டமின் ஏ, பி யுடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ேபான்ற சத்துக்கள் நிறைந்தது. கண் பார்வையும், நரை முடி ஏற்படாமலும் உதவும். பலம் பொருந்திய எலும்புகளைப் பெறவும், சரும நோயிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவக் கூடியது.
அகத்திக்கீரை: புத்தி மந்தம், நினைவாற்றல் குறைவு, சோம்பல், அறிவு தடுமாற்றம் போன்றவைகளை மாற்றக் கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. கால்சியம் சத்தை தந்து எலும்புகளை பலம் பொருந்தியதாக்கும்.
அரைக்கீரை: உணவில் சேர்ப்பதால் உடலில் உயிரணுக்கள் கூடும். நரம்பு தளர்ச்சியைப் போக்கி உடல் பலம் பெறச் செய்யும். வாயுத் தொல்லையை நீக்கும்.
புளிச்ச கீரை: உடலில் உஷ்ணம் இயற்கையான அளவில் இருக்க உதவக் கூடியது. சொறி, சிரங்குகளை நீக்கி சருமத்தை காக்கக் கூடியது.
பொன்னாங்கண்ணி: உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கண் சம்பந்தமான நோய்களை அகற்றக் கூடியது. உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும். புரத சத்து அதிகம் கொண்டதால், ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தக் கூடியது.
முருங்கைக்கீரை: அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ சத்தும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்தது. ஆதலால் நோய் எதிர்ப்பு சக்தி தருவதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, இதயத்துடிப்பை சீராக வைப்பதுடன் நரம்புகளுக்கும், பற்களுக்கும் பலம் தரக்கூடியது.
புதினா: வாந்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குறிப்பாக கருவுற்ற பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்தும். சமையலில் மணத்தையும், ருசியையும் அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.தினசரி உணவில் தவறாமல் ஒரு கீரையை சேர்த்து உண்போம். நலமுடன் வாழ்வோம்.
தொகுப்பு: எஸ்.ஆஷாதேவி, சென்னை.