Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செவித் திறனை பாதிக்கும் அதிக ஒலி!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாளும் நாம் பலவிதமான சத்தங்களை கேட்டு வருகிறோம். இதன் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு, அது நமது செவித்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் நமது வேலை, கல்லூரி அல்லது பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும், ஓய்வு நேரத்தில் இசை கேட்கும்போதும், நமக்குப் பிடித்த திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்கும்போதும், அல்லது நமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் பலவித வழிகளில் அளவுக்கு அதிகமான சத்தங்கள் நம்மைச் சுற்றி ஏற்படுகிறது.

இதுபோன்று தொடர்ச்சியாக ஏற்படும் அதிக சத்தத்தின் காரணமாக நமது உள்காதில் உள்ள மென்மையான உறுப்புகள் சேதம் அடைந்து நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம். இது போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் காலப்போக்கில் செவிப்புலனில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக இளம் வயதிலேயே செவிப்புலன் கருவிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, காது கேட்கும் திறன் சரியாக இருந்தால் மட்டுமே நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர் ஆண்ட்ரூ தாமஸ் குரியன். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு சமீபத்தில் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, அதில் நமது ஒலி வெளிப்பாட்டை 50dB-க்குக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கிறது. நாம் நம்மைச் சுற்றி ஏற்படும் சத்தத்தின் அளவை கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லை. இருப்பினும் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் ஒலி அளவை 50 முதல் 60 சதவீதம் அல்லது அதன் மையப்பகுதியில் வைத்திருப்பதன் மூலம் 50dB என்ற அளவீட்டை கடைபிடிக்க முடியும். சத்த அளவை குறைவாக அளிக்கும் ஹெட்போன்களையும் நாம் பயன்படுத்தலாம், இது சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தங்களை குறைக்க உதவும், இதனால் குறைந்த ஒலி அளவில் நாம் நமக்கு விருப்பமான இசையைக் கேட்க முடியும்.

இன்றைய குழந்தைகள் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்கள் பார்க்கும் வீடியோக்களும் விளையாடும் விளையாட்டுகளும் அதிக சத்தம் நிறைந்தவையாக உள்ளன. அவர்கள் பயன்படுத்தும் சாதனத்தின் ஒலியளவில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களின் மென்மையான காதுகளைப் பாதுகாக்க, அவர்களின் இந்த பயன்பாட்டை ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்வது என்பது நமது கடமையாகும். அவ்வாறு செய்தால் மட்டுமே அவர்களின் செவித்திறன் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பொது நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கிகளை நாம் வழக்கமாக பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு நீங்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உங்கள் உறவினரையோ அல்லது நண்பரையோ சந்திக்கும்போது, இதுபோன்ற சத்தம் நிறைந்த ஒலிபெருக்கிகள் காரணமாக உங்களால் நிம்மதியாக அவர்களுடன் பேச முடிந்ததா என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

அந்த ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு உண்மையில் அதிகமாக இருக்க வேண்டுமா? ஒலி அளவு பாதியாக இருந்தாலும் அதை நம்மால் தெளிவாகக் கேட்க முடியாதா? பிறகு ஏன் இவ்வளவு அதிகமாக ஒலி அளவை வைக்கிறோம்? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். ஏதேனும் விழாவில் ஒலிபெருக்கி அருகே ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பது கூட நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தும். ஒரு வருடத்தில் நீங்கள் எத்தனை விழாக்களில் கலந்து கொள்கிறீர்கள்? அதன் அடிப்படையில் காது கேளா தன்மை நிச்சயமாக அதிகரிக்கும்.

மேலும், இது குறித்து நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே விழிப்புணர்வைப் ஏற்படுத்துவது என்பது நமது பொறுப்பு ஆகும். நம்மைச் சுற்றி ஒலியின் அளவு அதிகம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகள் அதிக நேரம் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தாமல் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளும்போது அதிக ஒலி காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், ஒலி பெருக்கியின் சத்தத்தை குறைவாக வைப்பது குறித்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை கேட்கும் திறனை இழந்தால், அதை மீண்டும் பெற முடியாது என்பது குறித்து அவர்களிடம் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

இறுதியாக நான் கூறுவது என்னவென்றால், உங்கள் செவித்திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைப்பவர்கள், அதை பியூரிடோன் ஆடியோகிராம் எனப்படும் எளிய சோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் அருகிலுள்ள காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகி, அவர் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.

உங்கள் செவித்திறனின் அளவை அறிந்துகொள்வது என்பது எதிர்காலத்தில் உங்கள் செவித்திறனைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். காது தெளிவாக கேட்டால் மட்டுமே நாம் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனவே இது காது கேட்பதைப் பற்றியது மட்டுமல்ல; புரிதலும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்