Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் கணைய அழற்சி!

நன்றி குங்குமம் தோழி

கணையம் நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்பு. வயிற்றின் மேல் பகுதியிலும் இரைப்பைக்கு கீழே அமைந்திருக்கும் இந்த உறுப்பு உணவை செரிக்க வைப்பதற்கான நொதிகளை சுரக்க உதவுகிறது. மேலும், சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ‘‘கணையம் சேதமடைந்தால் செரிமானப் பிரச்னை மட்டுமில்லாமல் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். ஆனால், கணையத்தில் அழற்சி ஏற்பட்டால் அது உயிருக்கே பாதிப்பினை ஏற்படுத்தும்’’ என்கிறார் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வத்சன்.

‘‘கணையம் நம்முடைய வயிற்றின் பின்பகுதியில் இருக்கும் ஒரு உறுப்பு. இது இன்சுலின் சுரக்கவும், உணவுகளை செரிமானம் செய்யவும் உதவும். பொதுவாக கணையத்தில் சுரக்கக்கூடிய திரவங்கள் குடலில் உள்ள உணவில் இருக்கும் கொழுப்பினை செரிமானம் செய்ய உதவும்.

ஆனால், கணையத்தில் அழற்சி ஏற்பட்டால் இந்த திரவங்கள் கணையத்தில் இருந்து கசிந்து, அது கணையத்தை முழுமையாக பாதிப்படைய செய்யும். இது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் உள்ள மற்ற உறுப்புகளை முற்றிலும் செயலிழக்க செய்யும். அதாவது, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கும். இந்த அழற்சி லேசான, மிதமான மற்றும் கடுமையாக பாதிப்பினை ஏற்படுத்தும். 100 பேர் லேசான அழற்சியால் பாதிப்படைந்தால் அதில் 10% முதல் 20% மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்னை ஏற்பட்டால் மேல் வயிறு பகுதியில் அதிக வலி ஏற்படும். அந்த வலி முதுகு வரை பரவும். வாந்தி மற்றும் கடுமையான ஜுரம் இருக்கும். இதய துடிப்பு அதிகமாக இருக்கும். வியர்வை ஏற்படும். வயிறு உப்புசம் இருக்கும். இதை பலர் வாயு பிரச்னை என்று நினைத்துக் கொண்டு, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். இதில் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று பிரச்னை என்னவென்று கண்டறிய வேண்டும்.

காரணம், பலருக்கு கணையத்தில் ஏற்படும் பாதிப்பு என்று தெரியாது. பக்கவாதம் அல்லது இதய பிரச்னை ஏற்பட்டால் அதற்கான அறிகுறி என்னவென்று தெரியும். ஆனால், வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்னை ஏற்பட்டால் அது சாதாரண வாயுத் தொல்லை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அது கணையத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்று தெரியாது.

கணைய அழற்சி ஏற்பட முக்கிய காரணம் பித்தப்பை அல்லது பித்தநாணல்களில் உருவாகும் கற்கள். பித்தப்பையில் ஏற்படும் கற்கள் கீழே இறங்கி கணையம் மற்றும் பித்தப்பை இணையும் பகுதியில் சிக்கிக் கொள்ளும். விளைவு கணையத்தில் அழற்சி. ஆண்களுக்கு அதிகளவு மது அருந்தும் பழக்கம் இருந்தால் இந்தப் பிரச்னை ஏற்படும். உடலில் கொழுப்பு அளவினை கணிக்க ஆய்வு செய்யும் போது அதில் டிரைகிளைசரைட் (triglyceride) அளவு அதிகமாக இருந்தாலோ, கால்சியம் அளவு அதிகமானாலோ இந்தப் பிரச்னை ஏற்படும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் செய்தாலே கணையத்தில் பாதிப்பினை கண்டறிய முடியும். அதன் பிறகு அவர்களின் அழற்சியின் அளவிற்கு ஏற்ப சிகிச்சையினை மேற்ெகாள்ள வேண்டும்.

அழற்சி லேசாகவும், மிதமாக இருந்தால் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படைய ஆரம்பிக்கும். சிலருக்கு டயாலிசிஸ், வென்டிலேட்டர், இதயம் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் தேவைப்படும். இந்தப் பிரச்னைக்கான தீர்வு நம்முடைய கையில்தான் உள்ளது.

பித்தப்பையில் உள்ள கற்களால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் பித்தப்பையினை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். இல்லை என்றால் திரும்ப கற்கள் உருவாகி மீண்டும் கணையத்தை பாதிக்கும். மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கணைய அழற்சி ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று தெரிந்து கொண்டு அதற்குரிய மருத்துவ சிகிச்சையினை கடைபிடிக்க வேண்டும். கடுமையான அழற்சி ஏற்பட்டிருந்தால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பித்தப்பையில் கற்கள் ஏற்பட நிறைய காரணம் உண்டு. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படும். பித்தப்பையினை நீக்குவதால், எந்த வித பிரச்னையும் ஏற்படாது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து சாதாரண உணவு முறைகளை கடைபிடிக்கலாம். அதே சமயம் பித்தப்பையினை நீக்குவது போல் கணையத்தினை நீக்க முடியாது. காரணம், இன்சுலின் சுரக்க கணையம் அவசியம். அதனால் அதில் ஏற்படும் அழற்சியை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும். சில சமயம் கணையத்தை சுற்றி ஒரு நீர்கட்டிப் போல் உருவாகும். அதை லேப்ரோஸ்கோபி மூலம் நீக்கலாம்.

மிகக் கடுமையான அழற்சி பாதிப்பு இருந்தால் 24 மணி நேரத்தில் ஒருவரின் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட துவங்கும். அந்த நிலையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து அதற்கான சிகிச்சையினை மேற்கொள்வது அவசியம். சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் மீண்டும் இந்தப் பிரச்னை

ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்படும் போது கணையம் சுறுங்கிவிடும். இதனால் அதன் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். விளைவு கணைய புற்றுநோய் ஏற்படும். அதனால் தங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். உடல் எடையினை கட்டுப்பாட்டில் வைத்து, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்’’ என்று ஆலோசனை அளித்தார் டாக்டர் வத்சன்.

தொகுப்பு: நிஷா