Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புறத் தமனி நோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!

இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது

புற தமனி நோய் (Peripheral Artery Disease - PAD -பிஏடி) என்பது கால்களுக்கும் பாதங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள், பிளேக் [plaque] எனப்படும் கொழுப்புப் படிவுகளால் [fatty deposits] சுருங்கும் ஒரு நிலை ஆகும். தசைகளுக்கும் கால்களின் தோல் பகுதிக்கும் குறைவான ரத்தமே சென்றடைவதால், எந்தவொரு செயலையும் செய்யும்போது தனிநபர்கள் வலியால் பாதிக்கப்படுகின்றனர். லேசான காயம் ஏற்பட்டாலும் குணமடைய கால தாமதம் ஆகும்.

மேலும் இது கடுமையாகும் சூழலில் மூட்டு ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமையும். குறிப்பாக புகைபிடிப்பவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சிறுநீரக நோய் அல்லது குடும்பத்தில் ஆரம்பகால இதய நோய் பாதிப்பு இருக்கும் பிரச்னை [diabetes, high blood pressure, high cholesterol, kidney disease, family history of early heart disease] போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு 50 வயதிற்குப் பிறகு, பிஏடி (PAD) எனப்படும் புற தமனி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

கால் வலி ஒரு பொதுவான அறிகுறியாக இருந்தாலும், பிஏடி என்பது உடலின் வேறு இடங்களில் உள்ள பிரச்னைக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் கால் தமனிகளைச் சுருக்குவது போலவே இதயத்தையும் மூளையையும் அது பாதிக்கும். இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

மிகவும் பொதுவான அறிகுறி தசைகள், தொடை அல்லது பின் பகுதியில் பிடிப்புகள் அல்லது இறுக்கம் ஏற்படுவதாகும். நடந்து செல்லும்போது இது ஏற்படும். ஆனால் நடப்பதை நிறுத்தி ஓய்வெடுத்த சில நிமிடங்களுக்குள் இது குறைகிறது. இது ‘கிளாடிகேஷன்’ [claudication] அதாவது ‘நொண்டுதல்’என்று அழைக்கப்படுகிறது. சிலர் கால்களில் உணர்வின்மை, பலவீனம், குளிர்ந்த பாதங்கள் போன்றவற்றை உணர்வதாகவும் கால்களில் பளபளப்பான, முடி இல்லாத தோல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். கால் விரல்களில் காயங்கள், வெட்டுக்கள் அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் குணமடையத் தாமதமாவது மற்றொரு அறிகுறியாகும்.

கீழ் மூட்டுகளில் உள்ள துடிப்பு

களைச் சரிபார்க்கும் வகையில் நோய் கண்டறிதலுக்கு ஒரு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கணுக்கால்-பிராச்சியல் இண்டெக்ஸ் [ankle-brachial index] எனப்படும் ஒரு சோதனை கணுக்காலில் உள்ள ரத்த அழுத்தத்தை கையில் உள்ள அழுத்தத்துடன் ஒப்பிடுகிறது. குறைந்த அளவீடுகள் பிஏடி இருப்பதைக் குறிக்கின்றன. அல்ட்ராசவுண்ட், ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது, எங்கு அடைப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிய உதவும். பொருத்தமான சிகிச்சையைத் திட்டமிட சிடி அல்லது எம்ஆர் ஆஞ்சியோகிராம் சோதனையும் [CT, MR angiogram] பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு நன்மை என்னவென்றால், பிஏடி பாதிப்பை நிர்வகித்து சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்பகாலத்திலேயே நோய் கண்டறிதல் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது மிகவும் சிறந்த நடவடிக்கையாகும். ஒவ்வொரு சிகரெட்டும் தமனிகளை மேலும் சுருக்கி, பிளேக் (Plaque) உருவாவதை துரிதப்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தினசரி பாத பராமரிப்பு என்பது பிஏடி உள்ளவர்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு சிறிய பழக்கமாகும்.

கால்களைக் கழுவி உலர்த்துதல், சருமத்தை ஈரப்பதமாக்குதல், நகங்களை கவனமாக வெட்டியபடி பராமரித்தல், வெட்டுக்கள், காயங்கள், கொப்புளங்கள் அல்லது நிற மாற்றங்களைக் கண்காணித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல், கால்களின் அளவுகளுக்கு பொருந்துகிற காலணிகள், சாக்ஸ் அணிதல் போன்றவை கால்களைப் பராமரிப்பதில் நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டியவை. புண் அல்லது கொப்புளங்கள் சில நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரைச் சந்தித்து தகுந்த ஆலோசனைகளைப் பெற வேண்டியது அவசியம்.

நடைப் பயிற்சியின் போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் நடக்கும் தூரத்தை அதிகரிப்பது ஒரு எளிய செயல்முறையாகும். மிதமான அசௌகரியத்தை நாம் உணரும் வரை நடைப்பயிற்சியை தொடரவேண்டும். பிறகு கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின் நடைப்பயிற்சியை மீண்டும் தொடரவேண்டும். வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது மொத்தம் 30 முதல் 45 நிமிடங்கள் இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்வதால் சில வாரங்களுக்குள், பெரும்பாலானவர்களுக்கு வலி குறைவதுடன் மேலும் அதிக தூரம் நடக்க முடியும் என்ற சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் புதிய சிறிய நாளங்கள் உருவாகி தசைகள் மிகவும் திறன் வாய்ந்தவையாக மாறுகின்றன.

தமனி ஆரோக்கியத்திற்காக அதிக காய்கறிகள், பழங்கள், விதை கொண்ட காய்கறிகள், தானியங்கள், உலர் விதைகள் (Nuts) ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது; உப்பு, சர்க்கரை, வறுத்த உணவுகளைக் குறைப்பது போன்றவை உடல் எடை, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது கால்களில் உள்ள சிறிய நாளங்களைப் பாதுகாப்பதுடன், புற தமனி நோய் (பிஏடி) வளர்ச்சியைக் குறைக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய ரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க, மருத்துவர்களால் ஒரு ஆன்டிபிளேட்லெட் (Aantiplatelet) மருந்து பரிந்துரைக்கப்படலாம். ஸ்டேடின்கள் [Statins], எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து பிளேக்கை (Plaque) அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்த உதவுகின்றன. உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் இதயத்தையும் சிறுநீரகங்களையும் அதிகரித்த ரத்த அழுத்தத்தின் நீண்டகால விளைவுகளிலிருந்து பாதுகாக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், நடக்கும் தூரத்தை மேம்படுத்தும் வகையிலான மருந்துகளை முயற்சிக்கலாம். இருப்பினும், இவை எதுவும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஈடு ஆகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மருந்துகள் உரிய முறையில் வேலை செய்ய வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியம்.

பாதிப்பு கடுமையாக இருக்கும் சூழல்களில், நல்ல மருத்துவ பராமரிப்பு இருந்தபோதிலும் சில அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்போது ​​அல்லது குணமடையாத புண்கள் அல்லது அதிக வலி இருக்கும்போது, ​​ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்குக் குறைந்தபட்ச ஊடுருவும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையைப் [minimally invasive angioplasty] பயன்படுத்தப்படலாம். இதில் தமனியைத் திறக்க ஒரு சிறிய பலூன் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அதைத் திறந்து வைத்திருக்க ஒரு ஸ்டாண்ட் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட அல்லது மிகவும் சிக்கலான அடைப்புகள் உள்ள சூழலில், பைபாஸ் அறுவைசிகிச்சை செய்து ஒரு நரம்பு ஒட்டு (Vein Graft) முறையைப் பயன்படுத்தி அடைப்பைச் சுற்றி ரத்தத்தை செலுத்த முடியும். இந்த சிகிச்சைகள் வலியைக் குறைத்து கைகால்களைப் பாதுகாக்கும். ஆனால் இவை முழுமையாக குணமடைய உத்திரவாதம் அளிப்பதில்லை. எனவே நாம் தொடர்ந்து நடைப் பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, சரியான நேரத்தில் சரியான மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்றவை மிக மிக அவசியம்.

சரியான நேரத்தில் நோயைக் கண்டறியும் பரிசோதனைகள், வாழ்க்கை முறையில் அவசியம் பின்பற்ற வேண்டிய மாற்றங்கள், சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை ஆகியவை மூலம் நம்முடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவற்றின் மூலம் பெரும்பாலானோர் அதிக தூரம் நடக்கும் சக்தியைப் பெறுவதுடன், பாதிப்புகளைக் குறைத்து, ஒட்டுமொத்தமாக இதயத்திற்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.