Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதுகெலும்பைப் பாதுகாப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடல் இயக்கத்துக்கு ஆதாரமான ஒன்று, முதுகெலும்பு. ஆனால், இன்றைய காலச் சூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் அவதிப்படும் ஒரு விஷயம் முதுகுவலிதான். இதற்குக் காரணம், மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்குக் கொடுப்பதில்லை. எனவேதான், நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

முதுகெலும்பில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன?

முதுகெலும்புப் பிரச்னையைப் பொருத்தவரை, பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த பிரச்னை ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், வயதைப் பொருத்துக் காரணங்கள் மாறக்கூடும். பொதுவாக, முதுகெலும்புப் பிரச்னை வயதானவர்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உள்ளது. காரணம் வயதாகும்போது எலும்புகள் தேய்மானம் ஆவதால் இது நிகழ்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் மத்திய வயதில் உள்ளவர்களும் முதுகெலும்பு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், ஃலைப்ஸ்டைல் மாற்றமே. உதாரணமாக, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, சரியான முறையில் உட்காராமல் கண்டபடி வளைந்து, நெளிந்து உட்காருவது போன்றவற்றினாலும் முதுகுவலி ஏற்படுகிறது.

முதுகுவலிப் பிரச்னை பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு வயதாக வயதாக உடலில் உள்ள கால்சியம் அளவு குறைந்து எலும்புகள் பலவீனமாகிவிடுகிறது. இதனை ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்வார்கள். அது போன்று பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகு உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதனால், எலும்பில் உள்ள கால்சியம் மிக வேகமாகக் குறைந்து, எலும்புகள் பலவீனமாகி பெண்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது.

இதனால், அவர்கள் கால்தவறி லேசாக விழுந்தால்கூட உடனே எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை உருவாக்கவே, ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று உலக முதுகெலும்பு தினம் அனுசரிக்கப்படுவது போல், ஆண்டுதோறும் அக்டோபர் 20 அன்று உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமும் அனுசரிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவில் மில்லியன் கணக்கான பெண்கள் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேல்தான் ஏற்படுகிறது. இதில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், எலும்புகள் பலவீனம் ஆவதால், முதுகெலும்பு வளைந்து சிலருக்கு கூன் விழுந்துவிடும் அபாயமும் உண்டு.

இது தவிர, சாலை விபத்து அல்லது மரத்தில் ஏறும்போது தவறி விழுவது, கட்டட வேலை செய்யும்போது தவறி விழுவது என்று உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்துவிடுவது, தொழில் நிறுவனங்களில் அதிகப் பளு தூக்குவது போன்றவற்றினால் முதுகெலும்பில் முறிவு ஏற்படலாம். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், விபத்துகள் நேரிடும்போது, முதுகெலும்பில் உள்ள ஸ்பைனல்கார்ட் சேதமடைந்தால், அவர்களுக்கு கை, கால் செயலிழந்துவிடும் அபாயமும் உள்ளது. இந்த ஸ்பைனல்கார்ட் சேதமடைந்துவிட்டால், அதை மீண்டும் சரிசெய்வது இயலாத காரியம். அதன்பின்னர், அவர்கள் வாழ்க்கை முழுதும் எழுந்து நடமாடக்கூட முடியாமல் போய்விடும்.

அடுத்ததாக, முதுகெலும்பில் தொற்றுகள் ஏற்படலாம். அதன் காரணமாக, முதுகெலும்பில் காசநோய்கூட வரலாம். அதுபோன்று முதுகெலும்புப் பிரச்னைகளில் புற்றுநோயும் ஒன்று. இது உடலில் எங்கு புற்றுநோய் ஏற்பட்டாலும், உதாரணமாக, கல்லீரல், நுரையீரல், வயிறு, மார்பகப் புற்றுநோய் என எந்தப் புற்றுநோயாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பரவும். அப்படி முதுகெலும்புக்குப் பரவுவதால் முதுகெலும்பு புற்றுநோய் ஏற்படுகிறது.

அடுத்ததாக, குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்புப் பிரச்னைகள். இவை, குழந்தையின் பிறப்பிலிருந்தே வரலாம். உதாரணமாக, முதுகெலும்பு வளைந்து போவது. சில குழந்தைக்கு முதுகெலும்பில் ஒருபுறம் எலும்புகள் சரியாக வளராமல் இருக்கும்,. இதனால், குழந்தை வளர வளர முதுகெலும்பு சரியான வளர்ச்சியில்லாமல் போகும். இவையெல்லாம் முதுகெலும்பில் ஏற்படும் பிரச்னைகள். இது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

முதுகெலும்புப் பிரச்னைகளுக்கு என்ன காரணம்?

நான் ஏற்கெனவே, சொன்னது போல், நவீன வாழ்க்கைமுறை மாற்றம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, கண்டபடி வளைந்து அமர்ந்திருப்பது, மரங்கள் ஏறும்போது தவறி விழுவது, சாலை விபத்துகள், உயரமான கட்டடங்களில் இருந்து தவறி விழுவது போன்ற காரணங்களால் முதுகெலும்புக்கு பிரச்னை வரலாம். இதுதவிர, புகைபிடித்தலும் ஒரு காரணம். நீண்ட நாட்களாகப் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எலும்புகள் பலவீனமாகி அதனால் முதுகெலும்பு பிரச்னைகள் வரலாம்.

அது போன்று உடல் பருமன் மூட்டுவலிக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதிக பளு தூக்குதல் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சீரற்ற மனநிலை, போதைப்பழக்கம், சில நேரங்களில் பரம்பரை ரீதியாகவும் இந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அறிகுறிகள்

பொதுவாக முதுகெலும்பு சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதன் அறிகுறி முதுகுவலிதான். உதாரணமாக, நரம்புகளில் ஏதேனும் பிரச்னை என்றாலும் முதுகில் வலி வரலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் முதலில் முதுகில் வலி ஏற்பட்டு பின்னர் வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கல் உள்ளவர்களுக்கு முதுகில் வலி ஆரம்பித்து முன் வயிற்றுக்குச் செல்லும். அதுபோன்று கொஞ்ச தூரம் நடந்தால் கால் மரத்துப்போதல், பக்கவாதம் இவையெல்லாம் கூட முதுகெலும்புப் பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகும்.

சிகிச்சைகள்

முதுகெலும்பு எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகள் மாறுபடும். இதில் பெரும்பாலும், அறுவைசிகிச்சையின்றிதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், ஃலைப்ஸ்டைல் மாற்றம், பிசியோதெரபி, உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவையும்கூட முதுகெலும்புப் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது.

இது தவிர, முதுகெலும்பு தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும், என்டோஸ்கோபி, கீ ஹோல் சர்ஜரி என நிறைய நவீனமுறை சிகிச்சைகள் தற்போது வந்துவிட்டன. முதுகெலும்பு சிகிச்சை முறையை பொருத்தவரை, இப்போது ரொம்பவே சுலபமாகிவிட்டது. அதனால், பயப்பட வேண்டிய தேவையில்லை. பெரும்பாலான அறுவைசிகிச்சைகள் முடித்தவுடன் ஒரே நாளில் வீடு திரும்பி விடலாம். அந்தளவு நவீன சிகிச்சைமுறைகள் வந்துவிட்டது.

முதுகெலும்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.

*நாம் அன்றாட வாழ்வில் ஒரு சில வழிமுறைகளைக் கடைபிடித்தாலே முதுகெலும்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

*முதலில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ஆரோக்கியமான வாழ்க்கை முறை.

*அடுத்து உட்காரும்போது வளைந்து, நெளிந்து உட்காராமல் ஒழுங்கான முறையில் அமர்வது.

*அடுத்து, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது கூடாது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது எழுந்து நடக்க வேண்டும்.

*முதுகெலும்புக்கு பலம் சேர்க்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். பிசியோதெரபிஸ்ட்டை அணுகினால் அவர்கள் இதற்கான பயிற்சிகளைக் கற்றுத்தருவார்கள்.

*கால்சியம் வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி யையும் பெறலாம்.

*தினமும் 6-7 மணி நேரம் சரியான தூக்கம் வேண்டும். அப்போதுதான் முதுகெலும்புக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

*புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

*ஆபத்துள்ள வேலைகள் மேற்கொள்ளும்போது, உரிய பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.

*வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் முதுகெலும்பில் பிரச்னை ஏற்பட்டால் சரி செய்து விடலாம். அதுவே, ஸ்பைனல் கார்ட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சரி செய்யவே முடியாது. பின்னர், வாழ்நாள் முழுதும் சுமையாகிவிடும். அதனால் பாதுகாப்பு மிக முக்கியம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்