Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரத்தப் புற்றுநோய்... அறிகுறிகள் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

செல்லுலார் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்திரன்

பொதுவான அறிகுறிகள் கூட ரத்தப் புற்றுநோயைச் சுட்டிக்காட்டும் என ரத்த-புற்றுநோயியல் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மற்றும் செல்லுலார் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெயச்சந்திரன் கூறுகிறார். இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நாம் வாழும் காலத்தில் மிகப்பெரிய உடல்நலம் சார்ந்த சவால்களில் ஒன்றாகப் புற்றுநோய் விளங்கி வருகிறது. சிறந்த மருத்துவ வசதிகள் இல்லாததனால் தாமதமாக நோய்கண்டறியப்படுவதால் சிகிச்சை பாதிக்கப்படுகிறது. இருந்தாலும் விழிப்புணர்வு இல்லாததும் இவற்றிற்கு இணையான அழுத்தம் அளிக்கும் பிரச்சினை ஆகும். அறிதலில் இருக்கும் இந்த இடைவெளியால் பெரும்பாலும் நோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இதனால் உயிர் இழப்புகள் நேரிடக்கூடும்.

பல வகையான புற்றுநோய்களில் அக்யூட் மைலாய்டு லுகேமியா (AML) என்பது ரத்தப் புற்றுநோய்களுக்குள் ஒரு தீவிரமான வடிவமாகும். இதைப் பெரும்பாலும் எளிதில் அறிந்துகொள்ள முடிவதில்லை. அதன் தீவிரத்தன்மை ஒருபுறம் இருந்தாலும் எப்போதும் அது உரிய கவனத்தைப் பெறுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் ஏஎம்எல் பாதிப்பைப் பார்க்கும்போது 1990 களில் 9,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் என்ற நிலையில் இருந்து 2021 இல் கிட்டத்தட்ட 1.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதே காலகட்டத்தில் சுமார் 74,000 என்ற நிலையில் இருந்து 1.3 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஏஎம்எல் புற்றுநோயின் சிக்கலும் அதனால் நிகழும் அதிக இறப்பு விகிதமும் விழிப்புணர்வைப் பரப்புதல், தொடக்கநிலை கண்டறிதலை ஊக்குவித்தல் மற்றும் சரியான நேரத்தில் நோய்ப் பராமரிப்புக்கான அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை அவசரத் தேவைகள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அப்போதுதான் இந்த நோயால் உலகளவில் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளின் மீது தொடர்ந்து ஏற்படும் சுமையைக் குறைக்கும் முயற்சிகளைத் தொடங்க முடியும்.

அக்யூட் மைலாய்டு லுகேமியா (ஏஎம்எல்) என்பது எலும்பு மஜ்ஜையில் தொடங்கும் ஒரு வகை இரத்தப் புற்றுநோயாகும். இந்த மஜ்ஜை இரத்த அணுக்களை உருவாக்கும் நமது எலும்புகளுக்குள் காணப்படும் ஒரு மென்மையான பஞ்சு போன்ற திசு. மஜ்ஜைக்குள் மைலாய்டு செல்கள் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகின்றன. இந்த வெள்ளை அணுக்கள் கிருமி தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன.

ஏஎம்எல் ஆல் பாதிக்கப்படும்போது, இந்த மைலாய்டு செல்களில் ஒரு மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அவை கட்டுப்பாடில்லாமல் பெருகத் தொடங்கி, பிளாஸ்ட்கள் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான முதிர்ச்சியற்ற செல்களை உருவாக்குகின்றன. இந்த அசாதாரண செல்கள் செயல்பட வேண்டிய அளவுக்கு செயல்படாமல் எலும்பு மஜ்ஜையில் உள்ள ஆரோக்கியமான இரத்த அணுக்களின் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கத் தொடங்குகின்றன. இது இயல்பான இரத்த உற்பத்தியை சீர்குலைத்து, சோர்வு, தொற்றுகள் ஏற்படும் அபாயம் மற்றும் எளிதில் இரத்தப்போக்கு நிகழ்தல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

பொதுவான அறிகுறிகளில் அடங்குவன:

*எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல்

*தொடர் கிருமி தொற்று

*எலும்பு வலி

*பலவீனம்

*ரத்தச் சோகை

*மூச்சடைப்பு.

பல சூழல்களில் நோயாளிகளுக்கு எந்த அறியப்பட்ட ஆபத்து காரணிகளும் இல்லாமல் இருக்கலாம்.இந்தியாவில் ரத்தப் புற்றுநோய் நிகழ்வு விகிதம் 49,883 ஆகும். மொத்த ரத்தப் புற்றுநோய் நோயாளிகளில் ஏஎம்எல்-லின் பாதிப்பு 10.5% க்கும் அதிகமாக உள்ளது. ஏஎம்எல் பற்றி ஒவ்வொரு நோயாளியும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய உண்மைகள் பின்வருமாறு:

ஏஎம்எல் பற்றிய முக்கிய உண்மைகள்

1.ஏஎம்எல் அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது: ஏஎம்எல் என்பது பெரியவர்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான இரத்தப்புற்று நோய் வடிவமாகும். சராசரியாக 66 வயது முதல் 71 வயதுடையவர்கள் வரையில் இந்த நோய் கண்டறியப்படுகிறது. இருந்தாலும், ஓர் ஆய்வின்படி இந்தியாவில், பெரியவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னரே பாதிக்கப்படுகின்றனர். மேலும் நோய் கண்டறிதலின் சராசரி வயது 40 ஆண்டுகள் ஆகும். குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து இரத்தப்புற்று பாதிப்பிலும் ஏஎம்எல் கிட்டத்தட்ட 15 முதல் 20% வரை உள்ளது.

2.ஏஎம்எல் சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடியது: இந்நோயாளிகளை 60 முதல் 70% வரை சரியான சிகிச்சை அளித்து முழுமையாகக் குணப்படுத்த முடியும். இருந்தாலும், ஐந்து ஆண்டு உயிர்வாழும் விகிதம் 31.7% ஆகும். இந்நாளில் கீமோதெரபி, இலக்கு நோக்கு சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை/ ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் ஏஎம்எல் நோய்க்குப் பல வழிகளில் சிகிச்சையளிக்கலாம். தீவிரமாக கீமோதெரபி செய்ய முடியாதவர்களுக்கு மற்ற புதிய சிகிச்சைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிகிறது.

3.ஏஎம்எல் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் தீவிர கீமோதெரபி அளிக்க முடிவதில்லை: பொதுவாக நோயாளிகளுக்கு சிகிச்சையின் முதல் தேர்வு தீவிர கீமோதெரபி ஆகும். இருந்தாலும் புதிதாக கண்டறியப்படும் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏஎம்எல் இன் துணை வகை, மோசமான உடல்நலம் அல்லது முதுமை காரணமாக இந்த வகையான தீவிர சிகிச்சைக்குத் தகுதியற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்த நோயாளிகளில் பலருக்கு விளைவுகளை மேம்படுத்த புதிய மருந்துகள் (குறைந்த தீவிரம்) உள்ளிட்ட பிற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏஎம்எல் நோயைக் கண்டறியும்போது அது தனிநபர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தருவதாக இருக்கலாம். இருந்தாலும் புதிய மாற்று சிகிச்சை முறைகள் தொடங்கப்பட்டு நோயைப் பற்றிய புரிதல் வளரும்போது ​​நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் சிகிச்சையின் விளைவுகளையும் உயிர்பிழைத்தலையும் மேம்படுத்த இந்த முன்னேற்றங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். நோயைப் பற்றிய முக்கிய உண்மைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும். சிகிச்சை நீண்டதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம்; இருந்தாலும் துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களைப் பெற்று நோயாளிகள் இந்தச் சிக்கல்களை நம்பிக்கையுடன் கடந்து செல்ல முடியும்.