நன்றி குங்குமம் டாக்டர்
வலியை வெல்வோம்
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
சென்ற இதழில் இடுப்பு முதுகெலும்பான லம்பார் எலும்புகளின் உடற்கூறு இயல், நோய்கூறுவியல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அதனுடன் தொடர்புடைய ‘சயாடிக்கா’வைப் பற்றி அறிந்து கொள்வோம்.சயாட்டிக் நரம்பு மனித உடலில் மிக நீளமான மற்றும் அகலமான நரம்பாகும், இது சுமார் 2 செ.மீ விட்டம் கொண்டது. இது L4 முதல் S3 வரையிலான முதுகெலும்பு நரம்பு வேர்களால் (nerve roots) உருவாகிறது, இவை இடுப்பு பகுதியில் ஒன்றிணைந்து ‘சயாட்டிக்’ நரம்பை உருவாக்குகின்றன.
இது கீழ் முதுகில் (lower back) தொடங்கி, இடுப்பு, பின்புறம், தொடை, கால் மற்றும் பாதம் வரை செல்கிறது.இது பைரிஃபார்மிஸ் எனும் ஒரு தசை (piriformis muscle) வழியாகச் செல்கிறது, இதுவும் சில நேரங்களில் நரம்பை அழுத்துவதால் சயாட்டிகா என்று புரிந்து கொள்ளப்படும் ஆனால் இது ‘பைரிஃபார்மிஸ் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படும்.
செயல்பாடுகள்
1. இது தொடை பின்புற தசைகள் (hamstrings), கால் தசைகள் மற்றும் பாதத்தின் உள்ளார்ந்த தசைகளுக்கு மறைமுகமாக இயக்கத்தை வழங்குகிறது.
2. இது கால் மற்றும் பாதத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுக்கு உணர்வை வழங்குகிறது.
சயாட்டிகா, சயாட்டிக் நரம்பு (sciatic nerve) அல்லது அதனுடன் தொடர்புடைய இடுப்பு முதுகெலும்பு நரம்பு வேர்களில் (lumbosacral nerve roots) ஏற்படும் எரிச்சல் அல்லது அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. இந்த வலி பொதுவாக ஒரு காலில் மட்டும் கீழ்முதுகு, இடுப்பு, பின்புறம் மற்றும் கால் வரை பரவுகிறது, சில நேரங்களில் இரண்டு பக்கங்களிலும் வலி பரவும். இது ஒரு தனித்த நோய் அல்ல, மாறாக முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறியாகும்.
அறிகுறிகள்
*கீழ் முதுகு, இடுப்பு அல்லது காலில் எரியும் அல்லது மின்சார அதிர்ச்சி போன்ற வலி.
*உணர்வின்மை (numbness), கூச்ச உணர்வு (tingling) அல்லது தசை பலவீனம்.
*முதுகை வளைத்தல், திருப்புதல், இருமல் அல்லது நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் போன்றவற்றால் வலி அதிகரிக்கலாம்.
காரணங்கள்
*ஹெர்னியேட்டட் டிஸ்க்: முதுகெலும்பு டிஸ்க் நழுவி நரம்பை அழுத்துதல்.
*ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் அதாவது முதுகெலும்பு கால்வாய் குறுகுதல்.
*பைரிஃபார்மிஸ் சிண்ட்ரோம்
*பிற காரணங்கள்: முதுகெலும்பு எலும்பு முள் (bone spur), கர்ப்பம், உடல் பருமன் அல்லது நீரிழிவு நோய்.
காரணங்களை சற்று விரிவாகக் காண்போம்.
1. முதுகெலும்பு இயக்கவியலில் மாற்றங்கள் (Alterations in Spinal Biomechanics):
ஹெர்னியேட்டட் டிஸ்க் (Herniated Disc):
முதுகெலும்பு டிஸ்குகள் (intervertebral discs) உடைந்து அல்லது ஜவ்வு விலகி (protrusion/extrusion) நரம்பு வேர்களை அழுத்தும். இது பொதுவாக L4-L5 அல்லது L5-S1 முதுகெலும்பு பகுதிகளில் ஏற்படுகிறது.இந்த மாறுதல், முதுகெலும்பு இயக்கத்தை (spinal mobility) கட்டுப்படுத்துகிறது, குறிப்பாக முன்னோக்கி வளைதல் (flexion) மற்றும் திருப்புதல் (rotation). இது முதுகெலும்பு மீதான அழுத்தத்தை அதிகரித்து, நரம்பு அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இதனால் முதுகு வளைவு (lumbar lordosis) குறைவது, அசாதாரண தோரணை (postural deviation) மற்றும் இயக்கங்களின் போது வலி அதிகரித்தல் போன்றவை ஏற்படும்.
ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் (Spinal Stenosis)
நரம்பு வெளியேறும் பகுதி துவாரங்கள் (neural foramina) குறுகி, நரம்பு வேர்களை அழுத்தும். இதனால் முதுகெலும்பு இயக்கத்தை மேலும் கட்டுப்படுத்துகின்றது, குறிப்பாக நீட்டல் (extension) இயக்கங்களில், இது நரம்பு மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது, குறிப்பாக நிற்கும்போது அல்லது நடக்கும்போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.நடக்கும் முறையில் மாற்றங்கள் (altered gait), நீண்ட நேரம் நிற்க இயலாமை மற்றும் இடுப்பு முன்னோக்கி வளைந்த தோரணையை (forward tilt posture) உருவாக்கும்.
2. பைரிபார்மிஸ் தசை இறுக்கம் (Piriformis Muscle Dysfunction):
பைரிபார்மிஸ் தசை (piriformis muscle) இறுக்கமடையும்போது அல்லது அழற்சி ஏற்படும்போது, சயாட்டிக் நரம்பை அழுத்துகிறது. பைரிபார்மிஸ் தசை இறுக்கம் இடுப்பு மூட்டு இயக்கத்தை (hip joint mobility) குறைக்கிறது, குறிப்பாக வெளிப்புற சுழற்சி (external rotation) மற்றும் கால் அகட்டுதல் (abduction) போன்ற இயக்கங்களில் தாக்கத்தை உண்டாக்குகின்றன.
மேலும், இது இடுப்பு மற்றும் கீழ்முதுகு தசைகளுக்கு இடையே இயக்கவியல் ஏற்றத்தாழ்வை (biomechanical imbalance) உருவாக்குகிறது, இதனால் முதுகெலும்பு மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.இதனால் அமர்ந்திருக்கும்போது வலி, இடுப்பு இயக்கத்தில் கட்டுப்பாடு, மற்றும் நடையில் மாற்றங்களை (limping gait) உண்டாக்கும்.
3.நரம்பு இயக்கவியல் குறைபாடு (Neurodynamic Dysfunction):
சயாட்டிக் நரம்பு இயல்பாக உடல் இயக்கங்களுடன் (sliding and gliding) தொடர்புடையது. ஆனால், அழுத்தம் அல்லது அழற்சி காரணமாக இந்த நரம்பின் இயக்கம் குறைகிறது.நரம்பு இறுக்கமடையும்போது, அது நீட்சி (tension) மற்றும் இயக்கத்தில் (mobility) குறைபாட்டை உருவாக்குவதால், கால் உயர்த்துதல் (leg raising) அல்லது முதுகு வளைத்தல் (lumbar flexion) போன்ற இயக்கங்களில் வலியைத் தூண்டுகிறது.
இந்நரம்பானது உணர்வு மற்றும் இயக்க செயல்பாடுகளிலும் (sensory and motor functions) மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இதனால் உணர்வின்மை (numbness), கூச்ச உணர்வு (tingling), மற்றும் தசை பலவீனம் ஏற்படுகிறது. இந்த அடிப்படையில் தான் மருத்துவர்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்வர்.
4. தசை ஏற்றத்தாழ்வு மற்றும் இயக்கவியல் பாதிப்பு (Muscular Imbalance and Biomechanical Compensation):
சயாட்டிகா வலியைத் தவிர்க்க, நோயாளிகள் உடலமைப்பு அல்லது தோரணையை மாற்றி நடக்கவோ உட்காரவோ செய்வர் (அசாதாரண தோரணை-compensatory posture and altered gait) இவ்வாறு தோரணையை மாற்றுவதால் core muscles எனப்படும் மைய தசைகள் மற்றும் இடுப்பு தசைகள் (gluteal muscles) பலவீனமடையலாம், இதனால் முதுகெலும்பு மீதான அழுத்தம் அதிகரிக்கும்.
தொடை பின்புற தசைகளிலும் (hamstrings) அல்லது பைரிஃபார்மிஸ் தசையிலும் இறுக்கம் ஏற்பட்டு இடுப்பு மூட்டு இயக்கவியலை பாதிக்கும். இதனால் முதுகு வளைவில் மாற்றம் (altered lumbar curvature), இடுப்பு சமநிலையின்மை (pelvic asymmetry), மற்றும் நீண்டகால மூட்டு அழுத்தம் ஆகிய விளைவுகளை உண்டாக்கும்.
5. இயக்கங்களால் வலி தூண்டுதல் (Movement-Induced Pain):
குறிப்பிட்ட இயக்கங்கள் அதாவது முதுகு வளைதல் (flexion), திருப்புதல் (rotation), அல்லது நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் போன்றவை நரம்பு அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
இது நரம்பு வேர்களை மேலும் அழுத்துகிறது, குறிப்பாக ஹெர்னியேட்டட் டிஸ்க் இருந்தால்.அமர்ந்திருக்கும்போது, இடுப்பு மற்றும் முதுகெலும்பு மீதான அழுத்தம் அதிகரிப்பதால், பைரிபார்மிஸ் தசை அல்லது டிஸ்க் பாதிப்பை மேலும் மோசமாக்கும்.
இதனால் இயக்கங்களை கட்டுப்படுத்தி (restricted range of motion), வலியைத் தீவிரமடையச் செய்வதோடில்லாமல், செயல்பாடற்ற தன்மையையும் உண்டாக்கும் (functional disability). சிலர் முதுகு மற்றும் தொடைகளில் வலி என்றாலே உடனே தனக்கு சயாட்டிக்கா என்று அவர்களாகவே ஒரு முடிவெடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக வருவர். சில நேரங்களில் ‘பைரிஃபார்மிஸ் சிண்ட்ரோம்’ எனப்படும் தசை இறுக்கம் ‘சயாட்டிகா’ என்று தவறாக புரிந்து கொள்ளப்படும்.
சயாட்டிகா வலியானது புட்டங்களில் மட்டுமின்றி கால் பாதம் வரை பரவக்கூடியது. எரிச்சல், ஷாக் அடித்தல் போன்ற உணர்வை ஏற்படுத்தும். நிற்பதிலும் நடப்பதிலும் சிரமத்தை உண்டாக்கும். இதுவும் நரம்பு அழுத்தம் பாதிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த அறிகுறிகள் தோன்றும்.பைரிஃபார்மிஸ் சிண்ட்ரோமில் இடுப்பு பகுதியில் ஆழமான, மந்தமான வலி, தொடை வரை பரவும்.
நீண்ட நேரம் இடுப்பில் அழுத்தம் கொடுத்து உட்கார்ந்திருக்கும் போது பைரிபார்மிஸ் தசையை அழுத்துவதால் வலி (tenderness) மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் அல்லது இடுப்பு மூட்டு இயக்கங்களில் வலியை அதிகரிக்கச் செய்யும். சயாட்டிக்காவைப் போன்றே கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மையை ஏற்படுத்தும். ஆனால் கால் வரை பரவுவது என்பது இதில் குறைவு.
மருத்துவ பரிசோதனைகள்
SLR எனப்படும் ஸ்ட்ரெய்ட் லெக் ரெய்ஸ் டெஸ்ட் (Straight Leg Raise Test) :
இது சயாட்டிக் நரம்பு வேர் அழுத்தத்தை (nerve root compression) கண்டறியும் எளிய பரிசோதனை.
மேல் நோக்கி பார்த்த வண்ணம் நேராக கட்டிலில் படுத்திருக்கும் போது ஒரு காலை முட்டியை மடக்காமல் 30-70 டிகிரி கோணத்தில் நேராக உயர்த்த வேண்டும். கால் உயர்த்தும்போது இடுப்பு, தொடை அல்லது கால் பகுதியில் வலி பரவினால், இது சயாட்டிகா அறிகுறியாக இருக்கலாம்.வலி அல்லது கூச்ச உணர்வு 30-70 டிகிரி கோணத்தில் தோன்றினால், நரம்பு வேர் அழுத்தத்தைக் (எ.கா., ஹெர்னியேட்டட் டிஸ்க்) குறிக்கிறது.
Crossed SLRT, Lasegue Test, Slump test போன்றவை நரம்பின் அழுத்தம் மற்றும் எரிச்சலை உறுதி செய்ய மேற்கொள்ளும் பல்வேறுபட்ட எளிய பரிசோதனைகள்.இவை தவிர்த்து கால் தசை பலவீனம் மற்றும் உணர்வின்மையையும் சில பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.இந்த எளிய பரிசோதனைகள் மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளால் மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்படும்.
இவை தவிர்த்து நோயின் தீவிரத்தை அறிந்து கொள்ள...
*MRI ஸ்கேன், முதுகெலும்பு டிஸ்க் நழுவுதல் (herniated disc), ஸ்பைனல் ஸ்டீனோசிஸ் அல்லது கட்டிகளை கண்டறியவும்
*CT ஸ்கேன், முதுகெலும்பு குறுகல் அல்லது எலும்பு மாற்றங்களை ஆய்வு செய்யவும்
*எக்ஸ்ரே, முதுகெலும்பு அமைப்பு மாற்றங்கள் (எ.கா., ஸ்பாண்டிலோலிஸ்டீசிஸ்) கண்டறியவும்.
பரிசோதனைக் கூடங்களில் செய்யப்படுகின்றன.
சிகிச்சை முறைகள்
நீண்ட காலம் நோய் பாதித்திருந்தால் நரம்பியல் அல்லது எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களால் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் மிகவும் அவசியமானது.
சிலர் வலி குறைந்தவுடன் சிகிச்சையை பயிற்சியை நிறுத்தி விடுவர். இது சில நாட்களுக்கு பிறகு மீண்டும் வலியை உண்டாக்கும்..சில நேரங்களில் நீண்ட கால பயிற்சிகள், சிகிச்சைகள் மற்றும் ஓய்வு மட்டுமே இதற்கு நிரந்தர பலனளிக்கும்.