Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!

நன்றி குங்குமம் தோழி

மதுரை சத்யா, இளங்குழந்தைகளின் கல்வியாளர்.

இணையதளத்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று அரங்கேறியது. அதில் ஒரு குழந்தை கடையில் நின்றபடி பொம்மை வேண்டுமென அடம்பிடித்து அழுகிறது. அதனைக் கவனித்த அக்குழந்தையின் தாயும் அடம்பிடித்து தரையில் உருண்டு புரண்டு நடிக்கிறார். அதைப்பார்த்த குழந்தை தன் பிடிவாதத்தை கைவிட்டு அம்மாவின் கைப்பிடித்து செல்வதாக அக்காட்சி முடிகிறது.

இந்தக் காட்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது என்றாலும், இன்றைய பெற்றோர்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது அவரவர் குழந்தைகளின் அதிகப்படியான அடம்பிடிக்கும் அணுகுமுறை ஆகும். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர். சரியாக சொன்னால் குழந்தைகளின் பிடிவாதம் கண்டு பயப்படுகின்றனர் என்பதுதான் உண்மை.

மனிதர்களின் இயல்பான குணாதிசயமான ஈகோ எனும் ஆணவத்தன்மையின் ஆரம்பக்கட்ட செயல்பாடுதான் வளரும் பிள்ளைகளிடம் பிடிவாதமாக மலரத் தொடங்குகிறது. பிடிவாதத்தை கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாத குழந்தைகள் பின்னாளில் அதிகப்படியான ஈகோ நிறைந்த மனிதர்களாக சமூகத்தில் வாழத் துவங்கி விடுகின்றனர்.

குழந்தைகள் அடம்பிடித்தலை கையில் எடுக்க காரணமென்ன?

*குழந்தைகள் தங்கள் சூழலை பாதுகாப்பின்மையாக கருதுகையில் பிடிவாதத்தை கையில் எடுக்கிறார்கள்.

*சில குழந்தைகள் புதிய இடத்திற்கு சென்றாலோ அல்லது புதிய பள்ளியில் சேர்ந்தாலோ புது மனிதர்கள் தங்கள் வாழ்விற்குள் நுழைவதை உணர்ந்தாலோ பிடிவாதமாக நடந்து கொள்ள பழகுகின்றனர்.

* பெற்றோர்கள் இரண்டாம் குழந்தைக்கு தங்கள் கவனத்தையும் அன்பையும் தருகையில் முதல் குழந்தை தங்கள் மீதான கவனத்தை ஈர்க்க பிடிவாதம் செய்கிறார்கள்.

*வளமான பொருளாதார சூழலில் எல்லாவற்றையும் எளிதாக பெற்றுப் பழகிய பிள்ளைகள் பிடிவாதத்தை தொடர்ந்து கையில் எடுக்கிறார்கள்.

* தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத குழந்தைகளும் பிடிவாதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.

*அதிகத் தண்டனை பெறும் குழந்தைகளும் பிடிவாதத்தன்மை மிகுந்து காணப்படுகிறார்கள்.

பிள்ளைகளின் பிடிவாதத்தைக் கையாளும் முறைகள்

குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கையில் பெரும்பாலான பெற்றோர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதன் காரணமாக பிடிவாதத்திற்கு சரியானத் தீர்வு தண்டனை என்றும் முடிவிற்கு வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து தண்டனை பெரும் குழந்தைகள் அதனை மாற்றத்திற்கான மருந்தாக எடுத்துக்கொள்வதை விட அனுதாபத்தை சம்பாதித்துக் கொள்ளும் தந்திரமாகவே நினைத்து தொடர்ந்து அடம்பிடித்து தண்டனையை பெற்றுக் கொள்கிறது.

குழந்தைக்கு தண்டனைக் கொடுத்துவிட்டு அதன் அழுகை பொறுக்க முடியாமல் அப்பிள்ளை மீதான கரிசனம் உடனடியாக ஏற்பட மீண்டும் அக்குழந்தையை கொஞ்சத் துவங்குகையில் பெற்றோர்களின் இக்கருணையை பெறுவதற்காகவே தண்டனையை மீண்டும் மீண்டும் அடைய பிடிவாதம் எனும் சேட்டையை தனது குணாதிசயமாகவே மாற்றிக்கொள்கிறது.

*குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கையில் நேரடியாகவும், தெளிவாகவும், அதற்கெதிரான பிடிவாதத்தை பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டும்.

*அடம் பிடித்து அழும் குழந்தையோடு கண் தொடர்பு கொண்டு பேசுவதும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும்.

*தண்டனைக்குப் பதிலாக பிரச்சனையைத் தீர்க்க அவர்களுக்கு உதவலாம். அதாவது நம் பொருளாதார மற்றும் இன்னபிற சூழலை முன்கூட்டியே சொல்லிப் பழக்கலாம்.

*அதிகப்படியான பொருளாதார வளம் இருப்பினும் அதனை பிள்ளைகள் உணராத அளவிற்கு உழைப்பின் மகத்துவத்தை விளக்குதல் நன்று.

*சிறு சிறு செயல்களுக்காக அவர்களைப் பாராட்டுவதை தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்களுக்குள் ஒரு மேன்மைத்தனம் உருவாக வழிவகுக்கும்.

*ஒவ்வொரு பொருளையும் அவர்கள் கேட்கையில் அதற்கு ஈடான உழைப்பை அவர்களிடமிருந்து பெறுவதை பெற்றோர்கள் வழக்கமாக்கி கொள்வதும் நல்ல பலனைத் தரும். உதாரணமாக, வீட்டுவேலை செய்தால் நோட்டு புக், விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தரப்படும் என்ற நிபந்தனையை விதிக்கலாம். பொதுவாக பிடிவாதமானக் குழந்தை தான் விரும்புவதைச் செய்வதில் உறுதியாக இருக்கும். மற்றும் வேறு எதையும் செய்ய மறுக்கும். பெற்றோர் கொடுத்த வேலையை செய்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதால் வாக்குவாதத்தையும் கையில் எடுக்கும்.

* பிடிவாதத்தோடு பிள்ளைகள் பேசுகையில் அவர்களிடம் வாதம் புரிவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் அழுகைக்கு மரியாதை தருவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரம் எந்த செயலையும் செய்தே ஆகவேண்டும் என வற்புறுத்துவதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகளை ஏதோவொன்றில் கட்டாயப்படுத்தினால், அவர்கள் செய்யக்கூடாத அனைத்தையும் செய்வார்கள். உதாரணமாக: நடனம் விரும்பாத குழந்தையை நடன வகுப்பில் சேர்ப்பது. விரும்பாத உணவை உண்ண வைப்பது, பிடிக்காத பொருளை திணிப்பது போன்ற கட்டாயத்தன்மையை பெற்றோர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களை கண்காணிப்பில் வைத்துக்கொண்டு அவர்களாக பிடிவாதத்தை சரிசெய்து கொண்டு வரும் அவகாசத்தை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.

*அடுத்தவர்களின் கருத்துக்கு பயந்து பிள்ளைகளின் பிடிவாதத்திற்கு செவி சாய்க்க தொடங்கிவிட்டால் அக்குழந்தையை அடத்திலிருந்து மீட்பது கடினம்.

* பிள்ளைகள் மாறுவதற்கான வழிமுறைகளை சுருக்கமாகக் கொடுத்துப் பழகலாம். உதாரணமாக தொடர்ந்து அலைபேசியை விரும்பும் பிள்ளையிடம் குறிப்பிட்ட நேரத்தைக் கெடுவாக கொடுக்கலாம். விலையுயர்ந்த பொருளை விரும்பும் குழந்தைக்கு விலை குறைவான பொருள் வாங்கிக்கொள்ளும் சலுகையை தரலாம்.

*குழந்தைகளிடம் நேர்மறையான செயல்களை பின்பற்றுவதே நல்லதாகும். அடிப்பது, வசைச் சொற்களை கையாள்வது போன்றவை தவிர்த்து அவர்கள் என்ன செய்யக்கூடாது என்பதைவிட என்ன செய்ய விரும்புகிறார்கள் அல்லது பெற்றோர்களின் விருப்பம் என்ன என்பதையெல்லாம் பிள்ளைகளோடு அமர்ந்து பேசினாலே அவர்களின் பிடிவாதமான குணத்தைக் கலைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

*குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறப்பாக நடந்துகொள்ளும்போது பாராட்டுகளையும், வெகுமதிகளையும் வழங்குவதன் மூலம் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தவும் முடியும். பிடிவாதத்தை பிடிவாதத்தால் மாற்றுவது என்பதை ஒரு கலையாக பெற்றோர்கள் பின்பற்றத் துவங்கினால் பிள்ளைகளின் மாற்றம் எளிதில்

சாத்தியப்படும்.