Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஸ்லெக்சியாவை வெல்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

டிஸ்லெக்சியா இன்று பரவலாகக் குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகைக் கற்றல் குறைபாடு. நன்றாகப் பேசக்கூடிய திறன் உள்ள குழந்தைகள் எழுதும் போது எழுத்துகளை முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு எழுதுவதும், ஓரிரு எழுத்துகளைத் தவறவிட்டு எழுதுவதும் டிஸ்லெக்சியா பிரச்சனை எனப்படுகிறது.

இந்தக் குறைபாடு குழந்தைகளின் கற்றல் திறனைப் பாதிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூராலஜிக்கல் டிசீஸ்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கைப்படி, உலக மக்களில் 17 சதவிகிதம் பேர், இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைப் பார்க்கையில், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளையே இந்தக் குறைபாடு அதிகமாகத் தாக்குகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

டிஸ்லெக்சியா என்றால் என்ன?

‘லெக்சியா’ என்றால் மொழியின் அமைப்பு எனலாம். டிஸ்லெக்சியா என்பது மொழி அமைப்பைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் பிரச்னை. மூளையில் செயல்படும் நியூரான்களின் செயல்திறனில் ஏற்படும் குறைபாடு, டிஸ்லெக்சியா என்றழைக்கப்படுகிறது. இது பிறக்கும்போதே ஏற்படும் நரம்பியல் மற்றும் மரபணுக் (Neurological and Genetic Disorder) குறைபாட்டால் ஏற்படுகிறது.

குழந்தைகள் கண்களால் காணும் ஒரு மொழியின் எழுத்துக்கள், மூளை நரம்புகள் வழியாகச் செல்லும்போது அதற்கு ஏற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த புரிதலில் மாற்றம் ஏற்படும் போது, உதாரணமாக ‘d’ என்ற எழுத்து ‘b’ என்ற எழுத்தாக புரிந்துகொள்ளப்படும்போது வாசிப்பதில் பிழை ஏற்படுகிறது. இந்தக் குறையையே நாம் டிஸ்லெக்சியா

என்கிறோம்.

காரணம் என்ன?

டிஸ்லெக்சியா யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது. இந்தக் குறைபாடு ஏற்படக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது மருத்துவ உலகில், இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. முன்னோர்களின் மரபணுவில் கோளாறு இருந்தால் இது குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்புள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

அறிகுறிகள்

இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள், பொதுவாக மூன்றில் இருந்து நான்கு வயதுள்ளபோதுதான் கண்டறியப்படுவர். எப்போதும் தனிமையில் இருப்பது, வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது, எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, எப்போதும், சுறுசுறுப்பாக எதையாவது செய்துகொண்டே இருப்பது (Hyperactive child) போன்ற செயல்கள் இவர்களை மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.

இந்த ஆரம்ப அறிகுறிகளை வைத்து மட்டும் குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளதென்று முடிவுக்கு வந்துவிட முடியாது. முதலில் குழந்தைக்குப் பார்வை மற்றும் கேட்கும் திறன் சரியாக உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால், மூளை மற்றும் நரம்பியல் நிபுணரிடம் காட்ட வேண்டும். அவர் கீழ்கண்ட

சோதனைகளைச் செய்வார்.

* வயதுக்கேற்ற ஐக்யூ பரிசோதனை

* பேசும் திறன்

* வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் வேகம்

* வார்த்தை உச்சரிப்பைப் புரிந்துகொள்ளும் திறன்

* எழுத்துக்கள் மற்றும் ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்களைப் புரிந்து கொள்ளும் திறன்

* தாய்மொழியை சரளமாகப் பேசும்திறன் / வேகம்

* புத்தகத்தில் படிக்கும் சொற்களைப் புரிந்துகொள்ளும் திறன்

* பாதிக்கப்பட்ட குழந்தையின் முன்னோர்களின் தகவல்

இந்த சோதனைகளின் அடிப்படையில் குழந்தை எந்தளவு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டறிய முடியும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

* தாய்மொழியையும் கணித எண்களையும் கற்கச் சிரமப்படுவர்.

* எழுத்துக்களில் இருக்கும் வேறுபாடுகளை அறிய முடியாமல் திணறுவர்.

* சொற்றொடர்களைச் சரளமாகப் படிக்க முடியாது.

* நோட்டுப் புத்தகத்தில் அதிக எழுத்துப்பிழைகளுடன் எழுதுவர்.

டிஸ்லெக்சியாவை வெல்ல…

இந்தக் குறைபாட்டை, மருந்து மாத்திரைகளாலோ, மருத்துவ சிகிச்சைமுறையின் மூலமாகவோ குணப்படுத்த முடியாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தக் குறைபாட்டை எதிர்கொள்ள வேண்டும். குறைபாட்டின் தாக்கத்தை மட்டும், இவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சி வகுப்புகள் மூலம் குறைக்கலாம்.

தமிழகத்தில் பல பெற்றோர்களுக்குத் டிஸ்லெக்சியா பாதித்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இருப்பதே தெரியவில்லை. இந்த மாணவர்களுக்கு ஆரம்பப் பள்ளியில் இருந்தே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்குப் பாடம் நடத்த, முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.

டிஸ்லெக்சியா மாணவர்கள் புத்தகக் கல்வியில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எந்த விஷயத்தையும் நேரடியாகப் பார்த்து, தொட்டு உணர்ந்து தெரிந்துகொள்ளவே விரும்புவர். டிஸ்லெக்சியா சிறப்புப் பள்ளிகளில் மாதம் ஒருமுறை தொழிற்சாலைகள், பட்டறைகள் என மாணவர்களை அழைத்துச் செல்வதால் இவர்களால் நேரடியாக உலகத்தைப் பார்த்து, எளிதில் கற்க முடிகிறது. டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள குழந்தைகளை சிறு வயதிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி ஊக்குவித்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு விருப்பமான ஒரு துறையில், அவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வாய்ப்பு உள்ளது. அவர்களுக்குத் தேவை எல்லாம் நமது அரவணைப்பும் ஊக்கமும் மட்டுமே.

தொகுப்பு: சரஸ்