Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் கொத்தமல்லி கீரை!

நன்றி குங்குமம் தோழி

கொத்தமல்லியை வெறும் வாசனைக்கு என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். கொத்தமல்லி இலை மற்றும் சாறு சிறுநீரகத்தை சுத்தப்படுத்த மிகவும் உதவுகிறது. சிறுநீரக குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும் இது மிகவும் பக்கபலமாக உள்ளது. கிரேக்க மற்றும் ரோமன் நாடுகளில் கொத்தமல்லி கீரை பற்றிய குறிப்புகள் வரைபடங்களாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இடம்பெற்று இருக்கின்றன. வணிகத்தில் தங்கத்தை கொடுத்து கொத்தமல்லியை வாங்கின சரித்திரமும் இருக்கிறது.

கொத்தமல்லியை பச்சைக் கீரையாகவும், உலர்ந்த விதைகளை தனியாவாகவும் சமையலில் நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். சமையலுக்கு குறிப்பாக குழம்பிற்கான மிளகாய் பொடியினை அரைக்கும்போது மிளகாயின் கார குணத்தைக் குறைக்க தனியாவை சேர்த்து அரைக்கும் வழக்கம் இன்றும் நம் வீட்டில் அம்மாக்கள் பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட கொத்தமல்லியில் பல நற்குணங்கள் உள்ளன. குறிப்பாக வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு கொத்தமல்லி சிறந்த மருந்து.

வயிறு அல்லது நெஞ்சு எரிச்சல் குணமாக, கொத்தமல்லிக் கீரையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ நேரடியாக மருந்தாக பயன்படுத்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும்போது ஏற்படுகின்ற எரிச்சல் குணமாகும்.

செரிமானத்தை தூண்டும் கொத்தமல்லி!

கொத்தமல்லி கீரை செரிமானத்தை தூண்டுவதற்கு உதவுகிறது. சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கிறது. சிறுநீர் கழிக்கும்போது உடலுக்கு தேவையான புரோட்டீன் போன்ற சத்துக்களும் வெளியேறிவிடும். இதற்கு ஒரு தீர்வாக இருக்கிறது கொத்தமல்லி கீரை. இதனை சாறாக எடுத்து தினம் பருகி வந்தால் இது போன்ற பிரச்னைகள் தீரும். சிறுநீரகப் பையில் தசை மாற்றங்கள் விரிவுத் தன்மையை குறைத்து அங்கு சிறுநீர் தங்குவதால் யூரினரி டிராக் இன்ஃபெக்ஷனால் அவதிப்படுவார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லிக் கீரையில் சாறு எடுத்து தினமும் 48 நாட்கள் பருகி வந்தால் சிறுநீரக அழற்சி, சிறுநீரில் புரதம் வெளியேறுவது, சிறுநீரகப்பை சுருக்கம், சிறுநீரக அடைப்பு ஆகிய பிரச்னைகள் குணமாகும்.