நன்றி குங்குமம் டாக்டர்
தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வரும் இளம் கதாநாயகிகளில் கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர். இவர், திரைப்பிரபலங்களான பிரியதர்ஷன் மற்றும் லிசி தம்பதியரின் மகள் ஆவார். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் களம் இறங்கிய இவருக்கு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படமே தமிழில் அறிமுகம் தந்தது. இவர் ஹிந்தியில் வெளிவந்த க்ரிஸ்ஸ் 3 திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.
மேலும், விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான லோகா அத்தியாயம் 1: சந்திரா திரைப்படம் இவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. தற்போது தமிழில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கல்யாணியின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
வொர்க்கவுட்ஸ்: உடற்பயிற்சி என்பது நமது தினசரி வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்காக தினமும் ஜிம்மிற்குச் சென்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்பதில்லை. தினசரி அரைமணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தாலே கூட போதுமானதாக இருக்கும். அது அதிகாலை நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி, மாலை நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி, உடல் செயல்பாடு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் என நான் நம்புகிறேன். அதனால் தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறேன். இது தவிர்த்து ஜிம் சென்று செயல்பாட்டு வலிமை பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.
இந்த வகையான பயிற்சிகள் நமது அன்றாட அசைவுகளை உடற்பயிற்சிகளில் இணைத்து, அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, நம்பமுடியாத அளவிற்கு நெகிழ்வாகவும் மாற்ற உதவுகின்றன. மேலும், பிளஞ்ச்ஸ், ஸ்குவாட்கள் மற்றும் லஞ்ச்ஸ் போன்ற சில செயல்பாட்டு பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இதைத் தவிர எனக்கு கோல்ஃப் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோல்ஃப் விளையாடுவேன். கோல்ஃப் விளையாட்டும் ஒருவகையான உடற்பயிற்சிதான். இதில் உடலை வறுத்தி விளையாடவில்லை என்றாலும், மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவதால் ஒரு நல்ல இருதய பயிற்சியாகவும் இருக்கிறது, மேலும் அரை மணி நேரத்தில் சுமார் 200 கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர நடனப் பயிற்சிகளும் உண்டு. மேலும், விடுமுறை நாட்களில் மலையேற்றமும் செய்கிறேன்.
டயட்: ஃபிட்னெஸில் உடற்பயிற்சியும் உணவு முறையும் சரிசமமான பங்கு வகிக்கிறது. எனவே, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய ஆரோக்கியமான உணவைச் சேர்ப்பது உடற்பயிற்சிக்கான திறவுகோலாகும். எனவேதான் நான் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், காலை உணவை ஒருபோதும் தவிர்க்க மாட்டேன். காலையில் ஒரு ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை நாம் உட்கொண்டால் அன்றைய நாள் முழுவதும் வளர்சிதை மாற்றத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. எனவே, காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது.
மற்றபடி புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான மற்றும் சத்தான உணவை சார்ட்டை நான் தினசரி பின்பற்றுகிறேன். அதுபோன்று ஒருபோதும் உணவை நேரம் கடந்து நான் சாப்பிடுவதில்லை. என்ன சாப்பிட்டாலும் சரியான நேரத்தில் சரியான அளவே சாப்பிடுவேன்.
பிடித்திருக்கிறது என்பதற்காக அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் எனக்கில்லை. அதுபோன்று வாரத்தில் ஒருநாள் விரத நாளாக பாவித்து உணவு உட்கொள்வதை தவிர்த்து பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். உணவு நமது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோன்று ஒருநாளுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதும் முக்கியமானது. சிலர் வேலை பளு காரணமாக அவ்வப்போது தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகின்றனர். தினசரி நமது உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்தினால்தான் உடல் நீரேற்றத்துடன் சருமமும் பொலிவாக இருக்கும்.
பியூட்டி: எனக்கு பொதுவாக அதிகமாக மேக்கப் போடுவது பிடிக்காது. மிக எளிமையாக சன் ஸ்க்ரீன், மாய்ச்சரைஸர், கண்ணுக்கு காஜல், ஐ லைனர், உதட்டை நீரேற்றமாக வைக்க லிப் பாம். இவ்வளவு தான் என்னுடைய மேக்கப். லிப்ஸ்டிக் கூட லைட் கலரில் மிக அரிதாகத்தான் போடுவேன்.
அதுவே படங்களுக்கு மேக்கப் போடுவதாக இருந்தால், அதற்கு முன்பு, முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அசுத்தங்களை நீக்க, மென்மையான, ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தை கழுவி விடுவேன். பின்னர், ஐஸ் ஒத்தடம் கொடுத்தல், ஈரப்பதமூட்டி (moisturizer) மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். இதுவே, சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும், இயற்கையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
