நன்றி குங்குமம் தோழி
ஆரோக்கியத்தைத் தாண்டி உடல் சார்ந்த அழகு என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருப்பது. அழகுக்காக நாம் நிறைய விஷயங்கள் செய்வோம். அதிலும் குறிப்பாக பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். நகம், முடி என ஆரம்பித்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வார்கள். அது இன்றைய நவீன காலத்தில் ஒரு மடங்கு கூடுதலாக சென்று ‘ஜீரோ சைஸ் உடம்புதான் அழகு மற்றும் ஆரோக்கியம்’ என நம்பி நம்மில் பல பெண்கள் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பூதாகரமாக பெருகியிருக்கும் இந்தப் பார்வை உண்மையில் ஆரோக்கியம் சார்ந்து சரியானதுதானா? இதில் இயன்முறை மருத்துவம் சொல்வது என்ன என்பது பற்றி இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
பி.எம்.ஐ...
நம் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து அதில் 100ஐ கழித்தால் அதுதான் நம் உடல் எடை. இது ஒரு எளிமையான முறையில் நமது உயரத்திற்கு ஏற்ப நாம் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பதற்கான கோட்பாடு.உதாரணமாக, 170 செ.மீ உயரம் ஒருவர் இருந்தால், அதில் 100ஐ கழித்துவிட்டால் 70தான் அவர் சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடை. இதைவிட துல்லியமாக நாம் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும், உடலில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது, எந்த அளவுகளில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்குதான் இந்த பி.எம்.ஐ கோட்பாடு.உதாரணமாக, ஒருவரின் உடல் எடை:70, அவரது உயரம் (மீட்டரில் கணக்கிட வேண்டும்) 1.75 என்றால், என்பதே அவரின் பி.எம்.ஐ.
இதன்படி...
*பி.எம்.ஐ 19 கீழ் இருந்தால்: குறைவான உடல் எடை
*19 முதல் 25 வரை: சரியான உடல் எடை
*25 முதல் 29 வரை: அதீத உடல் எடை
*30 முதல் 35 வரை: உடல் பருமன் முதல் நிலை
*35 முதல் 40 வரை: உடல் பருமன்
இரண்டாம் நிலை
*நாற்பதுக்கும் மேல்: உடல் பருமன்
மூன்றாம் நிலை. (இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலை).
இதுவே போதுமானது நாம் எந்த எடையில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வதற்கு. இதனை விட இன்னும் கூடுதலாக ஒரு படி மேலே துல்லியமாக தெரிந்துகொள்ள இயன்முறை மருத்துவ மையம், உடற்பயிற்சிக்கூடம், உணவு ஆலோசகர் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இருக்கும் பிரத்யேக எடை மிஷின்களை பயன்படுத்தலாம்.
இதில் நம் எடை, நம் உடலில் உள்ள நீரின் அளவு, நம் தசைகளின் அடர்த்தி, நம் கை, வயிறு, தோளுக்குக் கீழ் உள்ள கொழுப்பின் அளவு என தனித்தனியாக காண்பித்துவிடும். இதனை வைத்து
முற்றிலும் நம் எடையைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
தசைகளின் முக்கியத்துவம்...
நம் உடலுக்கு நீர் எவ்வளவு முக்கியமானதோ அதேபோலதான் தசைகளும். தசைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தால் நமக்கு வலிமை அதிகமாக இருக்கும். இதனால் வேலைகளை எளிதாய் செய்ய முடியும். இதற்காக அர்னால்டு போல நாமும் பெரிய அளவில் தசைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை. நம் தினசரி வேலைகளில் சோம்பல் மற்றும் களைப்பு இல்லாமல் செய்ய, வீட்டில் உள்ள சிறு எடைகளை தூக்க பிறர் உதவியை நாடாமல் இருக்க எவ்வளவு தசை வலிமை தேவையோ அந்தளவு உடற்பயிற்சிகள் மூலம் நம் தசைகளின் அடர்த்தியையும், வலிமையையும் கூட்ட முடியும்.மேலும், நமக்கு வயதாகும் போதும் கீழே விழாமல் இருக்க, மூட்டுகள் வலிக்காமல் இருக்க, ஆக்டிவாக இருக்க என நம்மை காப்பது தசைகள் மட்டுமே.
கொழுப்புச்சத்தின் முக்கியத்துவம்...
நாம் அன்றாடம் இயங்க மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் என அனைத்தும் தேவையான ஒன்று. எனவே அதிக கொழுப்புள்ள உணவை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முற்றிலும் தவிர்க்கக் கூடாது. மேலும், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரு வகை உள்ளது. கொள்ளு, மீன், முட்டை, நல்லெண்ணெய் என இதிலெல்லாம் இருப்பது நல்ல கொழுப்புச்சத்துகள்.
நம் உடலில் எல்லா சத்துகளும், எல்லா வேலைகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. உதாரணமாக, நம் கருப்பை ஹார்மோன்கள் சரியாக சுரந்து, இயங்க கொழுப்புச்சத்து அவசியமானது. போதுமான கொழுப்புச்சத்து இல்லையெனில் சாதாரண வறண்ட சருமம் முதல் கரு தரிப்பதில் தாமதம் வரை நிகழும்.
நடிகைகளின் ஜீரோ சைஸ் உடம்பு...
தங்களின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடிகைகள் அவ்வப்போது உடல் எடையை மாற்றிக்கொண்டே இருப்பர். சில நேரங்களில் தடாலடியாக இருபது கிலோ குறைக்க, ஏற்ற என
குறுகிய மாதங்களுக்குள் மாற்றுவர். இதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சில மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்வது, அறுவை சிகிச்சை செய்துகொள்வது, விலை உயர்ந்த உணவுகளை உண்பது என அவ்வப்போது அவர்களின் உடல் எடை சார்ந்த உலகத்தில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.எனவே, அவர்களை நாம் உதாரணமாகக் கொண்டு நம் உடலையும் மாற்ற வேண்டியதில்லை. மேலும், அழகு மற்றும் ஆரோக்கியம் இந்த இரண்டின் அடிப்படையிலும் ஜீரோ சைஸ் என்பது அவசியமில்லாத ஒன்று.
நம் தவறான கருத்துகள்...
*கொஞ்சம் கூட கொழுப்புப் படிவம் சேராமல் இருந்தால்தான் ஆரோக்கியம் என நினைப்பது.
*வயிற்றைச் சுற்றி கொழுப்புப் படிவம் இல்லாமல் இருந்தால்தான் அழகு என நினைப்பது.
*50 கிலோ தாஜ்மஹால் போன்று குறைந்த எடையில்தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் ஆரோக்கியத்திற்கு தீங்கு என நினைப்பது.
நாம் செய்யும் தவறுகள்...
*கொழுப்புச்சத்துகளை உணவில் தவிர்ப்பது.
*இட்லி, தோசை போன்ற மாவுச் சத்துகளை உணவில் தவிர்ப்பது.
*பி.எம்.ஐ விதிமுறைப்படி சரியான எடையில் இருந்தாலும் அதனை விட குறைவாக இருக்க வேண்டும் என அதிக உடற்பயிற்சிகள் செய்வது, வயிற்றை பட்டினி போடுவது.
*ஜீரோ சைஸ்தான் சிறந்தது என நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்து தசை அடர்த்தியையும் குறைப்பது.
*நாம் பி.எம்.ஐ-யின் விதிமுறைப்படி சரியான எடையில் இருந்தால் கூட பார்க்கக் கொஞ்சம் பருமனோடு இருப்பது போல் தெரியும். ஏனெனில் நம் உடலுக்கு கொஞ்சம் சேமித்து வைத்த கொழுப்புச்சத்தும் அவசியத் தேவையாகிறது. இதனை நாம் தவறாகப் புரிந்துகொண்டு முற்றிலும் கொழுப்புச் சத்து உடலில் இருக்கக் கூடாது என நினைத்து முழுச் சத்துகளை எடுத்துக்கொள்ளாமல் வெறும் காய்கள், பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்வது.
இயன்முறை மருத்துவம்...
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உணவியலும், உடற்பயிற்சிகளும் தேவைப்படுகிறது. எனவே, சரியான பி.எம்.ஐ-யினை கண்டுபிடித்து என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.மேலும், ஆன்லைன் வழியாகவும், உடற்பயிற்சிக்கூடத்திலும் இயன்முறை மருத்துவர்களிடமும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். பி.எம்.ஐ-க்குள் நம் எடையினைக் கொண்டு வந்து, அதே எடையை பராமரிக்க இயன்முறை மருத்துவர்கள் உடற்பயிற்சி வாயிலாக உதவி செய்வர். மேலும், சரியான உணவு முறையை கடைபிடிக்க உணவு ஆலோசகரின் அறிவுரையும் தேவைப்படும்.
மொத்தத்தில் உடலுக்கு தினசரி முறையில் கொழுப்புச்சத்து என்பது இன்றியமையாதது. மேலும், கொஞ்சம் சேகரித்த கொழுப்புச் சத்தும் உடலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இதனை இயற்கையே தீர்மானிக்கிறது. எனவே, சரியான பி.எம்.ஐ-யில் இருந்தாலே போதும், ஜீரோ சைஸ் என்பது கொஞ்சமும் அவசியமில்லாத ஒன்று என்பதை நாம் புரிந்துகொண்டு போதிய விழிப்புணர்வோடு செயல்படுதல் அவசியம்.
கோமதி இசைக்கர் : இயன்முறை மருத்துவர்