‘உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?’ என்பது போல... உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?’ என்பதை அறிவியலாளர்கள் கேட்கிறார்கள். அது ஏன் என்பதோடு... புரதச்சத்து என்றால் என்ன? ஏன் அவை அத்தனை அவசியமாக இருக்கிறது? எந்தெந்த உணவுகளில் புரதச்சத்து உள்ளது? முதலானவற்றை தெரிந்துகொள்வோம்.
புரதச்சத்து...
மாவுச்சத்தினை போல புரதச்சத்தும் (Protein) மிக முக்கியமான ஓர் ஊட்டச்சத்து. தினசரி கட்டாயம் மூன்று வேலை உணவிலும் இருப்பது அவசியம். ஏனெனில், இது உடலில் செல்களை உருவாக்கவும், பழுது பார்க்கவும் உதவியாய் இருக்கும். அதோடு, சில வகை ஹார்மோன்களின் உற்பத்தியில் பங்கு கொள்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கவும் உதவும்.
புரதம் ஆற்றலை வழங்குகிறது என்பதால், நாம் நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் உற்சாகமாக வேலை செய்ய முடியும். கூடவே, நம் தசைகளுக்கு போதுமான ஆற்றலை வழங்குவதால், தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.
என்னென்ன உணவுகள்..?
* அசைவ உணவுகளில் முட்டை, கோழிக்கறி இதில்தான் முதன்மையாக புரதம் அதிகம் இருக்கிறது. இதைத் தவிர மீன், ஆட்டுக்கறி மற்றும் பிற கறிகளிலும் இருக்கிறது.
* சைவத்தில் பருப்பு வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், பனீர், சீஸ். மேலும், சோயா, சோயாவின் வேறு வடிவமான டோஃபூ (Tofu), கடலை வகைகளிலும் உள்ளது.
* அசைவத்தைக் காட்டிலும் சைவத்திற்கு குறைவான மதிப்பெண்கள்தான். ஏனெனில், அசைவத்தில் கொஞ்சம் சாப்பிட்டாலே எளிதில் அன்றைய நாளுக்கான புரதம் கிடைத்துவிடும்.
காலை உணவு...
புரதச்சத்து நிறைந்த காலை உணவு என்றால் அதில் எழுபது சதவீதம் புரதச்சத்து மட்டுமே இருக்க வேண்டும். மீதமுள்ள முப்பது சதவீதம்தான் கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, நார்ச்சத்து என மற்றவை இருக்க வேண்டும்.
நம் உணவுத் தட்டில் முதலில் நாம் சாப்பிட வேண்டிய உணவு புரதச்சத்துதான். பின்னரே மற்ற வகை உணவுகளை நாம் உண்ண வேண்டும். இப்படி செய்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள்.
பலன்கள்...
* புரதச்சத்து செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகுமென்பதால் நமக்கு நான்கு மணி நேரம் பசி உணர்வு என்பது இருக்காது (வயிறும் காலியாக இருக்காது).
* மேலும், வயிறு முழுக்க உண்டது போல் ஒரு எண்ணம் இருக்காது. அதாவது, உண்ட மயக்கம் இருக்காது.
* புரதச்சத்து செரிமானமாகி நமக்கு ரத்தத்தில் சர்க்கரை சத்தாக மாறி வருவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், தடாலடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் வாய்ப்பு இல்லை. எனவே, ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இதனால் நமக்கு உண்ட மயக்கமோ, அதனால் ஏற்படும் சோர்வும் இருக்காது.
* தொடர்ந்து இவ்வகை உணவு முறையினை பழக்கத்தில் வைத்துக் கொண்டால் நமக்கு சர்க்கரை நோய், உடற்பருமன், மாரடைப்பு, பக்கவாதம், தைராய்டு பிரச்னை, பி.சி.ஓ.டி., முறையற்ற மாதவிடாய், எப்பொழுதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்க நினைப்பது என எல்லாவற்றையும் தடுக்கலாம்.
* சருமம் மினுமினுப்பாக மாறும். முழு நாளும் ஆற்றலுடன் வேலை செய்ய முடியும்.
மற்ற நாடுகளில்...
இதற்கு முன்பு பல மேலை நாடுகளில் காலை உணவாக மாம்பழச் சாறும், வெண்ணெய் தடவிய பிரெட் துண்டுகளும் உண்பர். சில இடங்களில் கேலாக்ஸ் (Kellogg’s) போன்ற உணவுகளோடு பழங்களை எடுத்துக்கொள்வர். இவை எல்லாம் முற்றிலும் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. ஆனால், இப்போது போதிய விழிப்புணர்வு இருப்பதால், காலை உணவாக முட்டை, காய்கள், கறி, மீன் துண்டுகள் என மாற்றம் வந்துள்ளது.
நம்மூரில்...
நம் காலை உணவு என்பது சரிவிகித உணவு வகை. உதாரணமாக, பொங்கலுடன் சாம்பார், சட்னி என எடுத்துக்கொண்டால் மூன்றிலும் புரதச்சத்து இருக்கிறது. ஆனாலும், போதுமான அளவில் இல்லை. மேலும், மாவுச்சத்து நிறைய உள்ளது என்பதால், நம் உணவில் மாற்றம் கொண்டு வருவது அவசியம்.நாம் நான்கு இட்லிகளை தேங்காய் சட்னியோடு சாப்பிடுகிறோம் என்றால், அதனை இரண்டு இட்லி, இரண்டு முட்டைகளாக மாற்றிச் சாப்பிட வேண்டும். அதிலும் முதலில் முட்டைகளை உண்டபின் இட்லிகளை சாப்பிட வேண்டும். இதில் உப்புமா, பூரி என்பதில் எல்லாம் புரதம் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
வீண் விளைவுகள்...
* இந்த முறையில் உண்ணத் தவறினால் என்ன ஆகுமெனில், காலை உணவாக நாம் அதிக மாவுச்சத்து நிறைந்த உணவினை எடுக்கும்போது நமது ரத்தத்தில் எளிதாய், விரைவாய் குளூகோஸ் வந்துவிடுகிறது. இது காலப்போக்கில் நீரிழிவு நோயை உண்டாக்கவல்லது.
* நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கு சாட்சி நம் சருமம்தான். நம் சருமத்தில் சுருக்கம், தெளிவான சருமம் இல்லாமல் இருத்தல் போன்ற சருமப் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
* நாம் மாவுச்சத்து நிறைந்த உணவினை அதிகம் எடுத்துக்கொண்டால், இரண்டு மணி நேரத்திற்கு பின் நமக்கு மீண்டும் பசி உணர்வு ஏற்படும். நம் உடம்பில் போதுமான ஆற்றல் இருந்தாலும் மூளையில் உணவு உண்ண வேண்டும் என சிக்னல் சென்று நமக்கு மீண்டும் சாப்பிட வேண்டும் போல ஒரு பொய் பசியை உண்டாக்கும். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நாம் தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை கொறித்துக் கொண்டே இருப்போம். இது அந்த நாள் முழுவதும் தொடரும்.இதனால்தான் காலை உணவு என்பது முக்கியமான உணவு. அதிலும் குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த உணவு என்பது முக்கியமான உணவு. ஆகவே ஆரோக்கியம்தான் நமக்கான அஸ்திவாரம் என்பதில் நாம் உறுதியாய் தெளிவாய் இருக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த காலை உணவினை எடுத்துக் கொள்வோம், ஆரோக்கியமாய் வாழ்வோம்.