Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமோசா, ஜிலேபிக்கு தடையா!

நன்றி குங்குமம் டாக்டர்

மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் சமோசா, ஜிலேபிக்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. இது, உணவு பிரியர்களின் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியது. இதுஒருபுறம் இருக்க, சாலையோரம் விற்கப்படும் இந்திய உணவுப் பொருட்களை குறிவைத்து இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவதாக ஒருசாரார் விமர்சிக்கவும் தவறவில்லை.

எனவே, இச்செய்தி வெளியான மறுநாளே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், மறுப்பு வெளியிடப்பட்டது. இந்த உணவுகள் ஆரோக்கியமற்றவை என்று நாங்கள் அறிவிக்கவில்லை; அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு கலந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை மட்டுமே அனுப்பப்பட்டது. இந்திய பாரம்பரிய, கலாசார உணவுப் பொருட்களை தடை செய்யும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை” என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இப்படியொரு அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட முக்கிய காரணம், சமீபத்தில் இந்திய மக்களின் உடல்பருமன் குறித்து ‘லான்செட்’ மருத்துவ இதழ் நடத்தப்பட்ட ஆய்வுதான். இந்த ஆய்வில், குறுகியகாலத்தில் பெரும்பாலான இந்திய மக்களின் உடல்எடை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் உடல்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை வரும் 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமையே ஆகும். இதே காரணத்தினால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையை கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் உடல்பருமன் குறித்தும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை இந்திய உணவுகள் குறித்து பட்டியல்களை தயாரித்துள்ளது. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

நாம் தினமும் உண்ணும் அன்றாட உணவு மற்றும் சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்களை தயாரித்து வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் முதல்கட்ட முயற்சியாக நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், அனைவரும் அன்றாடம் விரும்பி சாப்பிடும் சமோசா, ஜிலேபி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாகவும் இவற்றை தினமும் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே, சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களிலும் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார்.நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் லட்டு, பக்கோடா போன்ற பல உணவுகளும் சேர உள்ளன.

இந்த உணவுகள் இந்திய மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படுபவை என்பது உண்மை என்றாலும், ஆரோக்கியமற்றதா என்பது விவாதத்திற்குரியதே. எந்த உணவுப் பண்டமாக இருந்தாலும் குறைந்த அளவில் எப்போதாவது ஒருமுறை உண்ணும்போது உடல்நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. இந்த விவாதத்திற்கு மத்தியில் இந்தியர்களின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் விமர்சனம் எழுந்து வருகிறது.

குறிப்பாக, சமீப காலமாக இளம் வயதுடையவர்கள் இதயக் கோளாறு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை தொடர்புப்படுத்தி இத்தகைய விவாதம் நடைபெறுகிறது. வரும் 2050-ம் ஆண்டில் 44.9 கோடி இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உடல் நலன் மீது நாம் இன்னும் சற்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

எனவே, இந்திய மக்களின் ஆரோக்கியம் தொடர்பாக நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் தேசிய அளவில் சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி உடல் பருமன், இதயக் கோளாறு, உயரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.அலுவலக லாபிகள், கேன்டீன்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் கூட்ட அறைகள் போன்ற பணியிடங்களில் எண்ணெய் மற்றும் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை எடுத்துக்காட்டும் பலகைகளை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை பரிந்துரைக்கிறது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த பலகைகள் தனிநபர்கள் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய ஊக்குவிக்கும் நடத்தை தூண்டுதல்களாக செயல்படுகின்றன, குறிப்பாக நாட்டில் உடல் பருமன் மற்றும் தொடர்புடைய வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருவதால்.

இந்த ஆலோசனை குறிப்பிட்ட இந்திய சிற்றுண்டிகள் அல்லது தெருவோர உணவை குறிவைப்பது பற்றியது அல்ல என்பதை அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். மாறாக, அனைத்து உணவு வகைகளிலும் மறைக்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் பற்றிய பொது விழிப்புணர்வை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்களை வைத்திருக்க விற்பனையாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடவில்லை என்பதையும் அமைச்சகம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

சிகரெட் பாக்கெட்டுகளில், ‘புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எனவும், மது பாட்டில்களில், ‘மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு’ போன்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன. இதே அளவுக்கு, இனிப்புகளும் நொறுக்குத்தீனிகளும் நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன்முதற்கட்டமாக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட உள்ளதாம். இதேபோல் மற்ற உணவகங்கள் முன் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘இது வெறும் எச்சரிக்கை தான். இந்த உணவுகளுக்கு தடை விதிக்கவில்லை.

தொகுப்பு: ஸ்ரீ