Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணம் இனி செல்லுபடியாகுமா..?

மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நம் பண்பாடு சொல்கிறது. இல்லை திருமணம் இருவருக்குமான ஒப்பந்தம் என்று நமது சட்டம் சொல்கிறது. பண்பாட்டுக்கும், சட்டத்துக்கும் இடையில் நிற்கும் மனிதன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அவனது மூளையில் நடக்கும் அனைத்து விதமான சிந்தனைகளுக்கும் ஆட்பட்டு இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறோம்.

தற்போதைய மனிதனிடம் சட்டத்தை மதிக்கிறாயா அல்லது பண்பாட்டை மதிக்கிறாயா என்று கேட்டால், என்னை மதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பான். தனி மனித சுதந்திரம் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கும் கலாச்சார மாற்றத்தில் நாம் இருக்கின்றோம் என்பதே நிதர்சனம்.

திருமணம் தொடர்பான பிரச்னை

களில், பெரும்பாலும் பெண்களே ஆணித்தரமான முடிவுகளை முன்னறிவிப்பு செய்ய முயற்சிக்கிறார்கள். இதுவே புதிய பண்பாட்டு இலக்கணமாக மாறிக் கொண்டிருப்பதை சமூகம் அமைதியாக வேடிக்கைப் பார்க்க பழகிக் கொண்டு வருகிறது.ஏன் இப்படி மாறிவிட்டது என்று கேட்டோமானால், உடனே பெண்கள் அதிகமாக படித்ததாலும், அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் இருப்பதாலும்தான் திருமண பந்தத்தில் பிரச்னைகள் எழுகிறது என்கிறார்கள். உண்மையில் மனநல ஆய்வாளர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவரும் மிக இயல்பாகத் திருமண உறவின் வகைகள் பற்றியும், அதில் இருக்கும் முரண்கள் குறித்தும் காலம் காலமாக சமூகத்தில் நிலவியதை சாட்சிகளுடன் நமக்கு கூறுவார்கள்.

நாம் அனைவரும் நாகரீக சமூகம் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்கிறோம். உண்மையில் நாகரீகம் என்பது நாம் பயன்படுத்துகிற பொருட்களில் மட்டுமே இருக்கிறதே தவிர, மனித உணர்வுகளில் எந்தவித மாற்றமும் பெரிதாய் நிகழவில்லை. மனித மூளை இன்னும் காட்டுமிராண்டித் தனமாகவே இருக்கிறது. குறிப்பாக ஆண், பெண் உறவில் விரிசல் விழும் போது... ஒருவரை ஒருவர் அடிப்பது, துன்புறுத்துவது, கொலை செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது, தற்கொலைக்குத் தூண்டுவது, ஆசிட் ஊற்றுவதென தொடர்வதைப் பார்த்து வருகிறோம்.

எது மனிதர்களுக்கிடையே இத்தனை விதமான குழப்பத்தை, காதல் மற்றும் காமத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். தம்பதியர் இருவர் சேர்ந்து வாழும்போது ஏற்படும் தேவைகள் மற்றும் ஆசைகள், கனவுகளை ஒருவருக்கொருவர் நிறைவேற்றுவதை காதலிலும், காமத்திலும் சேர்த்தே சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கு தனி மனித தேவையையும், ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு பல்வேறு வழிகள் வந்துவிட்டது.

நவீன சமூகம், வளர்ந்த நாடுகள் அனைத்திலும் மக்களுக்கு பலவித சவுகரியங்களை உருவாக்கிவிட்டது. அதில் மிகவும் முக்கியமானது, பெண்கள் ஆண்களுக்காக காத்திருந்து செய்யப்பட்ட விஷயங்கள் அனைத்துமே, சமூகத்தால் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப்படுகிறது. இதனால் ஆணும் பெண்ணைச் சார்ந்து நிற்க வேண்டியதுமில்லை, பெண்ணும் ஆணைச் சார்ந்து நிற்க வேண்டியதுமில்லை என்ற நிலையை நாம் வாழும் சமூகமே நமக்கு அமைத்துக் கொடுத்து விட்டது.

நான் அடிக்கடி பார்க்கும் படங்களில் இரண்டு மிகவும் முக்கியமான இடம் பிடிக்கும். ஒன்று Eat Pray Love. மற்றொன்று Queen ஆகும். Eat Pray Love படமானது ஒரு பெண் எழுதிய நாவலாகும். கதாநாயகி திருமணமாகி சில வருடங்கள் கழித்து, கணவரிடமிருந்து விவாகரத்து கேட்பாள். கணவருக்கும் ஒன்றும் புரியாது. அவர்கள் இருவருக்கும் எவ்வித சண்டைகளும் வந்ததில்லை. இருவருக்கும் இடையில் காதலில்லை என்று விவாகரத்து கேட்பாள். மற்றொரு திரைப்படமான Queen படத்தில் காதலித்த ஹீரோ, திருமணத்துக்கு முதல் நாள், தனது காதலியிடம் திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறி விடுவார். அவர்கள் இருவரும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் செல்வதற்கு பாரிசுக்கு டிக்கெட் பரிசாக கொடுத்திருப்பார்கள். அந்த மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவதற்கு, ஹீரோயின் உடனே அந்த டிக்கெட்டை எடுத்து அவள்மட்டும் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவாள்.

இரண்டு படங்களிலும் பெண்கள் தனக்கான காதல் இல்லையென்று தெரிந்தவுடன், அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லத் தொடங்குவார்கள். இந்த இடத்தைத்தான், பெண்களுக்கு முதல் முதலில் சமூகம் பண்பாட்டு ரீதியாக தடை செய்த இடமாக பார்க்கிறேன்.ஒரு பெண் தனியாக வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால் மூன்று இடங்களுக்கு மட்டுமே குடும்பம் மற்றும் சமூக அனுமதியுடன் செல்ல முடியும். அதில் ஒன்று கோவில், மற்றொன்று வேலை செய்யுமிடம் அல்லது உறவினர்கள் வீடு.

இதில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே அனுமதியோடு ஒரு பெண் செல்ல முடியும் என்கிற இலக்கணம் இருந்தது. இன்றைக்கு அந்த இலக்கணத்தை சமூகமே மாற்றிவிட்டது. ஒரு பெண் தனியாக சினிமாவுக்கு போகலாம், பிடித்த ஊர்களுக்கு போய் வரலாம், ஹோட்டலில் தனியாக சாப்பிடலாம், ஹோட்டலில் தனியாக ரூம் எடுத்து தங்கலாம். இப்படி ஆண், பெண் பாரபட்சமில்லாமல் அனைத்தையும் செய்யுமளவிற்கு நம் கலாச்சாரம் மாறிவிட்டது.

அதனால் பெண்களுக்கு கொடுத்த வளர்ச்சி மற்றும் சுதந்திரம் மட்டுமே திருமண உறவு முறியக் காரணமில்லை.அப்ப இந்தக் கலாச்சார மாற்றங்கள் கடந்து, திருமண பந்தம் நிலைப்பதற்கு என்னதான் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்? இவை அனைத்தும் கடந்து ஒரு ஆண், பெண் சேர்ந்து வாழ என்ன தேவையென்றால், அன்பும், அரவணைப்பும், ஒருவருக்

கொருவர் செய்யும் செயலுக்குத் தேவையான ஒத்துழைப்புமே தேவைப்படுகிறது.

இந்த உணர்வுகள்தான் பூர்த்தியாகவில்லை என்று, தம்பதியர்களிடையே காதலில்லை என்று பல இடங்களில் கூறுவதைப் பார்க்கிறோம். இங்கு ஒருவர் மற்றொருவர் மீது காதலில்லை என்று கூறினாலே, சோசியல் மீடியா மற்றும் யூ டியூப்களில் வேறொரு நபருடன் தொடர்பு, கள்ளக்காதல் இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடுகிறார்கள்.

ஆனால், உண்மை வேறொன்றாக இருக்கிறது. இங்கு காதலும் பலவிதங்களில் பிரிந்து கிடக்கிறது. காதலில் ஆண், பெண் யாரோ ஒருவருக்கு வேறொரு நபரிடம் மட்டும் ஈடுபாடு வரவேண்டுமென்ற அவசியமில்லை. காதல் என்கிற உணர்வு தொழிலில் வரலாம், புதுமையாக செய்யும் விஷயங்களில் வரலாம், தனிமை மீது வரலாம், இப்படி விதவிதமாக காதலின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடுகிறது. அந்த அளவிற்கு வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கிறது.

இப்போதெல்லாம் காதலர்கள் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமின்மை ஏற்பட்டுவிடுகிறது. மனிதன் என்றுமே பசியுள்ள மிருகம். தேடல் மட்டுமே அவனை வாழவும், வளரவும் வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் தேடல் வேறொரு இடத்தில் கிடைக்கும் வாய்ப்பும் அமையும் போது, காதலில் பிரிவுகள் ஏற்படுகிறது.

இவற்றையும் சரி செய்ய வேண்டுமானால், இங்கு யார் யார் காதலில், திருமண உறவில் இருக்கிறார்களோ, அவர்கள் இருவருமே, யார் யாருக்கு என்ன தேவையோ அதைச் செய்யப் பழக வேண்டும். அவரவர் காதலின் மொழியை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வைத்தான் இந்த சமூகம் செய்ய வேண்டும். அதுவே காதலையும், திருமணத்தையும் பாதுகாக்கும்.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்