Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிர்வாணமே விடுதலை என்பது சரியா?

நன்றி குங்குமம் தோழி

மூளையின் முடிச்சுகள்

மனிதனின் நிர்வாண நிலை என்பது தத்துவ ரீதியாக பல்வேறுவிதமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில்தான், அகோரிகள் முதல் சில சாமியார்கள் வரை தங்களை நிர்வாணமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தத்துவங்களில் நிர்வாணம் என்பது மோட்ச நிலை அடைவதைக் குறிக்கும். சில நேரங்களில் அனைத்திலிருந்தும் விடுதலை அடைவதைக் குறிக்கும் எனச் சொல்லப்பட்டாலும், மனிதர்களின் நிர்வாணம், பொது ஒழுக்கம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி தண்டனைக்குரியது என்கிறது நமது இந்தியச் சட்டம்.

சமூக வலைத்தளங்களில் ஆணோ, பெண்ணோ தங்களது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவது மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இது சரியா, தவறா என்ற விவாதங்களுக்குள் செல்வதற்கு முன், ஏன் தற்போது இம்மாதிரியான விஷயங்கள் அதிகமாகின்றன என்பதை முதலில் பார்ப்போம். இன்றைய உலகமயமாக்கலில், கலாச்சார ரீதியான உடையில் தொடங்கி மாடர்ன் உடைகள் வரை விதவிதமாய், ரகரகமாய் ஆன்லைன் விற்பனைகள் வாயிலாகவே மிக எளிய முறையில் நம்மால் அவற்றை வாங்கிவிட முடிகிறது.

ரிச் அண்ட் லுக் உடைகளை பெரும்பாலும் திரைப்படத் துறைக்குள் பயணிப்பவர்கள் மட்டுமே அணிந்து வந்த நிலையில், இன்றைய சோசியல் மீடியா வருகைக்குப் பின்னால், தங்களின் ரீல்ஸ் மற்றும் குட்டி குட்டி ஷாட்ஸ்களிலும், இம்மாதிரியான உடைகளை அணிந்து தங்களை ஊடகங்களில் வெளிப்படுத்துபவர்களை அதிகம் காண முடிகிறது. தங்களை இவர்கள் கவர்ச்சியாகவும், அதே நேரம் கூடுதல் அழகுடனும் வெளிப்படுத்த ரொம்பவே பிரயத்தனப்படுகிறார்கள். இதற்கென ஆடைகள் மட்டுமல்ல, அழகு சாதனப் பொருட்களும் கடை விரிப்பது சமூக ஊடகங்களில்தான்.

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த தொடக்க நிலையிலேயே, தான் காதலித்த அல்லது நட்புடன் பழகிய பெண்ணை பழிவாங்க நினைப்பவர்கள், குறிப்பிட்ட அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்தோ அல்லது தவறாக சித்தரித்தோ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வைரலாக்க முயன்றார்கள். இந்த பாதிப்பில் சிலர் தற்கொலைக்கும் முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

சமூகப் போராளிகளும், பெண்ணிய சிந்தனையாளர்களும் ‘உடலை வைத்து மிரட்டும் நபர் யாராக இருந்தாலும், பெண்கள் அதனைக் கடந்து வாருங்கள்’ என்கிற விழிப்புணர்வுகளை ஊடகங்கள்

வாயிலாக தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த விழிப்புணர்வுகளை எல்லாம் கடந்து, இன்றைய இளம் தலைமுறையினர் சிலர் செய்யும் அத்துமீறிய செயல்களும் நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கிறது.

மிகச் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழெட்டு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து இளம் மாணவி ஒருவரை மனநல ஆலோசனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். என்னவென்று விசாரித்த போதுதான் தெரிந்தது, மாணவியின் கைபேசியில் அவரின் முழு அளவு நிர்வாண புகைப்படத்தை அவர் பதிவேற்றி வைத்திருப்பது. குடும்பத்தினர் குறிப்பிட்ட அந்த படத்தைப் பார்த்து பயந்திருக்கிறார்கள்.

மாணவியிடம் விசாரித்த போது, அவர் கூறிய பதில்தான் நமக்கு அதிர்ச்சி ரகமாக இருந்தது. அதாவது, தங்களின் நிறம் மற்றும் மார்பக அளவு சார்ந்த உருவக்கேலி மற்றும் கிண்டலைத் தடுப்பதற்காகவே நண்பர்கள் இணைந்து செய்தோம் என்று, மாணவி தான் செய்த செயலுக்கான குற்ற உணர்வு ஏதும் இன்றி மிக இயல்பாகக் கூறினார். அதாவது, நண்பர்கள் வாட்ஸப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் தங்களுக்குள் சவாலாக, தங்கள் முழு அளவு நிர்வாண புகைப்படத்தை தாங்களே எடுத்து ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்வந்து குரூப்பில் பதிவேற்ற வேண்டும் என்று முடிவானதாம். குறிப்பிட்ட குரூப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் தங்களின் நிர்வாண புகைப்படங்களை தாங்களாகவே குரூப்பில் பகிர்ந்திருக்கிறார்கள். இதை அந்த மாணவியின் பதிலாகக் கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

மாணவர்கள் உடலை வைத்து நடத்தப்படும் புல்லிங்கில் இருந்து மீள்வதற்காக அவர்கள் செய்யும் விபரீதங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பள்ளிகளில் அதிலும் வளரிளம் பருவ வயதில் இருக்கும் மாணவ, மாணவிகளிடத்தில் அவர்களின் உடல் எடை, நிறம், உடற்பாகங்களின் வளர்ச்சி குறித்த உரையாடல்கள் அதிகமாக இருக்கும். இதில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தில், மாணவர்கள் தங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடு இருக்க இது வழிவகுக்கிறது. இந்த விஷயத்தில் மாணவர்களுக்கான புரிதல் என்பது மிகமிகக் குறைவாகவும் இருக்கும்.

இந்தளவு முழு நிர்வாணத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் எதற்காக என்ற கேள்வியை முன்வைத்தால், சிலர் இது பெண்களின் சுதந்திரம் மற்றும் தனது உடல் தனது உரிமை என்றும், இன்னும் சிலர் மீடியா வெளிச்சத்தில் கிடைக்கும் வாய்ப்புக்காகவும் இம்மாதிரியான செயல்களில் இறங்குகிறார்கள் என்றும் அவரவர் கருத்துக்களை விவாதங்களாக முன்வைக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு சாரார், பெண்களுக்கான கருத்தியல்கள் தவறாக கற்பிக்கப்பட்டதன் விளைவால்தான், அதீத விடுதலை என்ற பெயரில் சமூகத்தை கெடுக்கிறார்கள் என்றும், மற்றொரு சாரார் பெண்ணின் உடலை விற்பனைப் பொருளாகவும், போகத்திற்கான பொருளாகவும் மட்டுமே இச்சமூகம் பார்க்கிறது என்றும் விவாதங்களை வைக்கிறார்கள்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளும், குற்றச் செயல்களும் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், பெண்ணின் உடல் மீதான உரிமையும், பெண்ணை வெறும் போகப்பொருளாய் பயன்படுத்துவதும், அந்த பெண்ணைத் தவிர யாருக்கும் அவள் உடல் மீது ஆதிக்கம் செலுத்த உரிமையில்லை எனவும் ஊடகங்கள் மூலம், சமூக ஆர்வலர்களும், பெண்ணிய சிந்தனையாளர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

நிற வேறுபாடு மற்றும் உடலின் அளவை வைத்து கிண்டல் செய்யும் மற்றொரு சம்பவமும் இந்த இடத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் தனது நிர்வாண புகைப்படத்தை பத்திரிகை ஒன்றில் வெளியிட, அந்தப் பத்திரிகையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில், பாலியல் சார்ந்த எந்தவொரு புகைப்படமும் ஆபாசத்தை தூண்டுவதாய் இருந்தாலும், பாலியல் ரீதியாக தவறான சிந்தனையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது கண்டிப்பாக குற்றமாகக் கருதப்படும். ஆனால், நிறவெறியை எதிர்த்து வெளியிட்ட இந்தப் பெண்ணின் புகைப்படம் ஆபாசம் அல்ல என்று தீர்ப்பு வெளியானது.

வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றிலும், சமூகத்தில் நடக்கும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நடக்கும் சமூக அநீதிகளுக்கு எதிராக சிலர் கூட்டமாக நிர்வாணமானார்கள். இன்றைய நவீன உலகிலும் சிலர், பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறை தாக்குதல்களை எதிர்த்து, தங்களை நிர்வாணப்படுத்தி படங்களை வெளிப்படுத்துகிறார்கள்.சில நேரங்களில் மனிதன் நிர்வாணமாவது தனிநபர் பிரச்னையல்ல, சமூகத்தின் பாதிப்பு என்பதையும் கூடுதலாக இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்