நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
- ஒரு நுட்பமான பார்வை!
கடந்த இதழில் ஹிஸ்ட்ரியோனிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களைக் கவனிப்போம்.சில சமயங்களில் நாமும்கூட சிலரை அவர்கள் உண்மையில் நம்மிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களோ அதைவிட அதிக அளவில் நெருக்கமாக இருப்பதாகக் கற்பனையாகக் கணித்துக்கொள்கிறோம்.
அப்போது பல ஆபத்தான சிவப்பு அறிகுறிகளை ( Red flags) கவனிக்கத் தவறி விடுகிறோம். அவரும் நம்மை அதே அளவு நேசிக்கிறார் என்று நாமாகவே முடிவு செய்து அதைத் தீவிரமாக நம்புகிறோம். சில காலத்திற்குப் பிறகு அவரின் உண்மையான முகம் அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். ஆனால், உண்மையில் அவர் முகத்தை மாற்றவில்லை. எதிரில் இருப்பவர் எப்பொழுதும் ஒரே நிலையில்தான் இருக்கிறார். நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லையோடு அவர் நிற்க வைத்து இருக்கிறார். நாம்தான் உண்மை புரியாமல் அவரை அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று எண்ணி விட்டோம். இது பலருக்குப் புரிவதில்லை.
இப்படி எளிதில் பிறர் வசப்பட்டு பிறகு அழுகையோடு புலம்புபவர்கள் HPD யின் முதல் நிலை பாதிப்பு கொண்டவர்களே. நாடகத்தனமாக அதிக நெருக்கமென நம்பி ஏமாந்து விடும் பரிதாபத்திற்கு உரியவர்கள் HPD பாதிப்பு கொண்டவர்கள். இந்தத் தன்மையே இதர ஆளுமை கோளாறுகளிலிருந்து HPD - யை வெகுவாக வேறுபடுத்தி அடையாளம் காட்டக் கூடியதாகும்.
அடுத்ததாக, வரலாற்று ஆளுமைக் கோளாறு பாதிப்பு கொண்டவர்கள் பெயருக்கு ஏற்ற வகையில் மிகப் பழமையான மத நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் , பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகள் சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளின் மீது அதிக பிடிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் ஒரு மாற்றுப் பார்வை வைக்கப்பட்டது. உலகளாவிய உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் பலவும் இதனை சரியென உறுதிப்படுத்துகின்றன.
மேலும், உறுதியான தீர்மானங்களை (Strong opinions) வைத்துக்கொண்டு அவற்றை நிரூபிக்க கடுமையாக அதிக உணர்ச்சிவசப்பட்டுப் போராடும் குணமும், எளிதில் மற்றவர்களால் ஆளுமை செலுத்தி கட்டுப்படுத்தி விடக்கூடிய பலவீன மனநிலையில் இருப்பதும், தனது புற அழகு குறித்து அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதிர்பால் இனத்தைக் கவர கவர்ச்சிகரமாக தூண்டும் விதமான நடந்து கொள்வதும் HPD பாதிப்பின் அறிகுறிகளாக நவீன உளவியல் குறிப்பிடுகிறது.
HPD பாதிப்பு தீவிரமடையும்போது பிறர் தன்னிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாவிட்டாலும் அவர்களிடம் தான் பாலியல் ஈர்ப்பு கொண்டு தகாத முறையில் நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இதனால் உறவுகளைப் பராமரிப்பதில் சிக்கலும் இருக்கும். இவர்கள் ஆழமாக நம்புகின்ற உறவு நிலை உண்மையில் மேலோட்டமானதாகவோ, போலியானதாகவோ இருக்கும்.
HPD உளவியல் சிக்கல்களோடு உடலிலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். .உடலில் எந்த பாதிப்பும் இல்லாத போது HPD காரணமாக நினைவுத்திறன் குறைவு, Paralysis போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வாழ்க்கைச் சூழல், வளர்ப்பு முறை, உணவு முறை மற்றும் மரபு காரணிகள் என பல்வேறு காரணங்களால் உருவாகும் இந்த வரலாற்று ஆளுமை கோளாறு வாழ்வைக் குலைத்து சமூகத்தில் நற்பெயரையும் கெடுத்து விடக்கூடியது.
எல்லோரிடத்தும் குறைகள் போலவே நிறைகளும் இருக்கும் என்பதற்கேற்ப HPD நபர்களிடமும் உயரிய சில நற்குணங்கள் உண்டு.இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவே இருப்பார்கள் என்பது ஒரு நேர்மறையான பண்பு. கூடுதலாக நிறையவே அனுதாபகுணமும் (Empathy இவர்களுக்கு ) உண்டு. அதோடு, நல்ல சமூக இணக்கத் திறன்கள் (Social skills) இருக்கும். நன்கு கலந்து யதார்த்தமாகப் பழகுபவர்களாக இருப்பதால் நெருங்கிய உறவுகளில் மட்டுமே இவர்களுக்கு அதிக சிரமங்கள் தோன்றும். எனவே, அவ்வளவு சீக்கிரம் உளவியல் சிகிச்சைக்குச் செல்ல மாட்டார்கள். அதாவது, உறவுகளை இழந்த பிறகு, மிக தீவிரமான விளைவுகளைச் சந்தித்த பிறகுதான் இவர்கள் தன் நிலையை உணர்கிறார்கள்.
வெளிநாட்டுப் பிரபலங்களான Maria carey, Kim Kardashian, Lady gaga போன்றோர் தமக்கு வரலாற்று ஆளுமை கோளாறுகள் இருப்பதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். நம் நாட்டில் எந்த மனச்சிக்கல் இருந்தாலும் அதனை வெளிப்படையாக கூறுவது பழங்காலத்தில் இருந்தே வழக்கமில்லை. தான் சரியாகத்தான் இருக்கிறோம் என்று நம்புவதாலேயே மனநலக் கோளாறுகளை சரி செய்வதில் நீண்ட தாமதங்கள் ஏற்படுகின்றன.
Psycho dianomic therapy HPD பாதிப்பு கொண்டவரின் துயரத்தின் வேர்களை கண்டறிய உதவும். அதோடு உளவியல் ஆலோசகர் / வல்லுநர் CBT மூலம் இலக்கு சார்ந்து பயனாளி தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உன்னிப்பாக பார்க்கவும் உதவி செய்வார். இதன் மூலம் தன் எண்ணங்கள் செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன? அதன் நீட்சியாக எதிர்மறை எண்ணங்கள் நடத்தைகளின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படும். Talk Therapy, Group Therapy, Dilectical Therphy மற்றும் Emotional Regulation Theraphy போன்றவை HPD -க்கான சிகிச்சைகளாக வழங்கப்படுகின்றன.
நாம் விரிவாக பேசும் எல்லா உளவியல் கோளாறுகளையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை எல்லாமே நமக்கு இருக்கிறதோ என்று தோன்றுவது மனித இயல்பு. ஆரம்பக் கட்ட அறிகுறிகள் அனைத்தும் ஒரே தன்மையைக் கொண்டிருப்பதால் நுட்பமாக நம்முடைய ஆளுமையை, நடத்தையை, வெளிப்படுத்தும் பண்புகளை நாமே உற்றுக் கவனிக்க துவங்குவதே உண்மையான உளவியல் தெளிவின் முதல் படி. எனவே, நமக்கு நெருங்கிய உறவுகள், நலன் விரும்பிகள், நண்பர்கள் ஆகியோர் நம்மிடம் இருக்கும் குறையாக அடிக்கடிக் குறிப்பிடுவனவற்றை காது கொடுத்து உள்வாங்க வேண்டும். அவற்றை ஏற்கும் மனநிலையின் தரத்தை (Mind Acceptance Level) கூட்ட வேண்டும். அதன் பிறகு உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே நல்லது.
நம்மைக் குறை சொல்லி விட்டார்களே என்று உடனடியாகக் கோபமோ, வருத்தமோ, எதிர்ப்புணர்வோ கொண்டு, எதிர் சிந்தனையோ செயலோ மேற்கொள்ளாமல் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ என்ற சிந்தனை புள்ளியைத் துவங்கும்போது நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்.வேதனையை வெளிப்படுத்தும் அழுகை எனும் ஆயுதம் அளவுக்கு மீறினால் தன்னையே அழிக்கும். பழங்காலச் சிந்தனைகளையே முழுதும் பற்றிக் கொண்டிருந்தால் வருங்காலம் வளர்ச்சியின்றித் தொய்ந்து விடும் என்பதை உணர்வோம்.


