Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்டர்நெட் மயம் to நோய் மயம்!

நன்றி குங்குமம் தோழி

‘எல்லாம் சிவமயம்’ என்பது போல இன்று எல்லாம் இன்டர்நெட் மயம் ஆகிவிட்டது. காலை தூங்கி எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை கைப்பேசியே கதி என நம்மில் முக்கால்வாசிப் பேர் கைப்பேசிக்கு அடிமையாகி இருக்கிறோம். இதில் குழந்தைகளையும், மாணவர்களையும் தவிர்த்து... இருபத்தி ஐந்து வயது முதல் நம்மில் பலருக்கு இருக்கும் நம்பிக்கை ‘கைப்பேசியில் கிடைக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் உண்மைகள். கற்றுக் கொடுப்பவர்களை போலவே நாமும் செய்தால் நமக்கும் அதே பலன் கிடைக்கும்’ என நம்பி நாம் செய்யும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நம்மை பிரச்னையில் தள்ளுவதுதான்.

அதிலும் முக்கியமாக உடற்பயிற்சிகள் செய்வது, எடையை குறைக்க நினைப்பது, உணவுப் பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது என பலர் இதற்கெல்லாம் கைப்பேசியில் வரும் காணொளிகளையே நம்பி இருக்கிறோம். ஏன் இவ்வாறு செய்வது கூடாது, செய்வதால் என்னென்ன பாதிப்புகள் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் வரும், இதில் இயன்முறை மருத்துவப் பயன்கள் யாது என்பது பற்றி இங்கே சற்று விரிவாகவே பார்ப்போம், வாருங்கள்.

சமூக வலைத்தளம்...

இன்று ஒவ்வொரு வீட்டிலும், ஏன் ஒவ்வொருவரிடமும் கைப்பேசி இருக்கிறது. அதனால் யார் வேண்டுமானாலும் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம், கற்பிக்கலாம், பேசலாம்

என்னும் நிலை உருவாகி இருக்கிறது. ஆகையால் யார் முறையாக பயின்றவர்கள், யாருக்கு ஒரு துறையின் மொத்த சூட்சுமமும் தெரியும், யார் நேர்மையாக கற்றுக் கொடுக்கிறார்கள் என நாம் சிந்திப்பது இல்லை. நமக்கு ஒன்றை பிடித்துவிட்டால் போதும் முழுவதுமாக நம்பி அப்படியே பின்பற்றுகிறோம்.

இதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு உணவுப் பொருளை மட்டும் பார்த்தாலே போதும். அதனை வெவ்வேறு ஊர்களில் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், சமைக்கிறார்கள் என்பது தெரியும். உண்மை இவ்வாறு இருக்க நாம் நமக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத நாடுகளில் உள்ளவர்கள் சொல்லும், பயன்படுத்தும் உணவுப் பட்டியலை நமக்கானதாக நம்பிப் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு நம்மைச் சுற்றி ஆரோக்கியம் சார்ந்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் நிறைய பிழைகளை செய்வதால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறோம்.

உடலியல் உண்மைகள்...

இங்கு உடற்பயிற்சிகளை மாத்திரை மருந்துக்கு ஒப்பாக வைத்து பார்ப்போம்.

* ஒருவருக்கு ஒத்துப்போகும் மாத்திரை இன்னொருவருக்கு ஒத்துப்போகாது. எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம்.

* குழந்தைக்கு கொடுக்கும் காய்ச்சல் மருந்தின் அளவு பெரியவர்களுக்கு கொடுப்பதில்லை. ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும்.

* குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் திரவ வடிவில் இருக்கும். அதுவே பெரியவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் திட நிலையில் இருக்கும். எனவே ஒவ்வொரு நபருக்கும்

மருந்துகள் என்பது பொதுவான ஒன்றாக இருக்காது.

* டெங்கு என்பது ஒரே நோய்தான். ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒரே மாதிரியான மருந்துகள் தருவதில்லை.

* ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு இன்னொருவருக்கு ஒத்துக்கொள்வது இல்லை.

* ஒருவருக்கு சிறு வயதில் ஒத்துக் கொள்ளாத உணவு பிற்காலத்தில் ஒத்துக்கொள்கிறது.

இப்படி நாம் நம்மைச் சுற்றி நடக்கும் மருத்துவ விஷயங்களை கவனித்தாலே பல எளிய உண்மைகள் புரிய வரும். எனவே நம் ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு ரகம் என்பதால், பொத்தாம் பொதுவாக அனைவருக்கும் அனைத்து வழிகளும் பொருந்தும் என்பது மூடநம்பிக்கை ஆகும்.

இயன்முறை மருத்துவம்...

உடலினை வலிமையோடு ஆரோக்கியமாக இருக்க முடிவு செய்த பின் முறையாக அருகில் உள்ள பொது மருத்துவரையும், இயன்முறை மருத்துவரையும், தேவைப்பட்டால் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்களையும் அணுகி உரிய ஆலோசனையோடு உடற்பயிற்சிகளை தொடங்க வேண்டும்.நம் ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா, ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா, வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருக்கிறதா என முற்றிலும் சோதித்து மருத்துவர் உடற்பயிற்சிகளை தொடங்கலாம் எனக் கூறிய பின், இயன்முறை மருத்துவர் முழு உடல் தசைகளையும் சோதித்து, உடற்பயிற்சிகளை அந்தந்த நபருக்கு ஏற்ப வடிவமைத்துத் தருவர். மேலும் அதனை அருகில் இருந்து நமக்கு தெளிவாக புரியும் வரை கற்றும் கொடுப்பர்.

உடற்பயிற்சி விதிகள்...

* எப்படி மருந்து மாத்திரைகளை அனைவரும் ஒன்று போல எடுத்துக்கொள்ள முடியாதோ(ஏனெனில் அளவு, நேரம் என எல்லாம் மாறுபடுமோ) அதுபோலவே உடற்பயிற்சிகளும்

என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சிகளில் பல வகைகள் உள்ளது. எனவே ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

* ஒரே உடற்யிற்சியை வெவ்வேறு எண்ணிக்கையில் செய்யும் போது வெவ்வேறு பலன் கிடைக்கும்.

* உடற்பயிற்சி செய்யும் முன் பின் என நாம் சாப்பிட வேண்டிய உணவுகளும், தவிர்க்க வேண்டிய உணவுகளும் உள்ளன.

* எடை குறைக்க, எடை கூட்ட, எடையை பராமரிக்க என ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடலுக்கும் உடற்பயிற்சிகள் மாறுபடும்.

* ஒரு நபருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வேறு ஒரு நபருக்கு ஒத்துக்கொள்ளாது.

* ஒவ்வொரு நாட்டினர் பயன்படுத்தும் பால், தயிர், வேறு உணவு பொருட்கள் என அதன் தரம் மாறுபடும் என்பதால், நாமாக உணவு முறைகளை தேர்வு செய்வது பெரும் சிக்கலை உண்டாக்கும்.

* இந்த இடத்தில் எலும்பினை அசைக்க வேண்டும், இந்த இடத்தில் தசையினை அழுத்த வேண்டும், இவ்வளவு வலிமையை தந்து இந்தப் பயிற்சியை முடிக்க வேண்டும் என பல நுண்ணிய விதிகள் உள்ளன. இவற்றை முழுமையாக பின்பற்றினால்தான் அந்தந்த உடற்பயிற்சியின் பலன்கள் கிடைக்கும்.

* ஒவ்வொரு வகை உடற்பயிற்சிகளுக்கும் அதற்குத் தக்க உணவு, தண்ணீர் அருந்துதல் என எல்லாம் மாறுபடும் என்பதால், நாம் உரிய நிபுணரின் அறிவுரையின்றி கைப்பேசி பார்த்து

உடற்பயிற்சி செய்வது, எடை குறைப்பது என செய்தால் பாதிப்புகள் மட்டுமே மிஞ்சும்.

நிகழ்கால பாதிப்புகள்...

* உடலில் உள்ள கொழுப்பு படிவம் குறைவதற்கு பதிலாக தசை அடர்த்தி குறையலாம். இதனை தவறுதலாக எடை குறைந்துவிட்டது என நாம் நினைப்போம்.

* தசை அயற்சி, தசை காயம், தசைப் பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

* சவ்வு கிழிவது, சவ்வில் காயம் ஏற்படுவது, சவ்வில் சுளுக்கு பிடிப்பது என சவ்வு சார்ந்த பிரச்னைகள் வரலாம்.

* உணவுக் கட்டுப்பாடு என நாம் புரிதல் இன்றி உணவில் கறாராக இருந்தால், அன்றைய தினத்திற்கு தேவையான அனைத்து வகை சத்துகளும் கிடைக்காமல் இருப்போம்.

* நாமாக இதுதான் சரி என தேர்வு செய்து உணவு உண்ணும் இடைவெளிகளை அதிகரிப்பது, விரதம் இருப்பது, உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுப்பது என சில நேரம்

தவறுதலாக முடிவுகள் எடுக்க நேரலாம். இதனால் தூக்கப் பிரச்னை, சத்துக் குறைபாடு, சோம்பலாக, அயற்சியாக உணர்வது என தினசரி பாதிப்புகள் வரலாம்.

* ரத்தத்தில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது, ரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது, இதய ஆற்றல் எப்படி இருக்கிறது என்று கவனிக்காமல் நாமாக பயிற்சிகள் செய்வதால் திடீர் மாரடைப்பு, மயங்கி விழுதல் என அபாயங்கள் உண்டாகலாம்.

எதிர்கால பாதிப்புகள்...

* சத்துக் குறைபாடு ஏற்படும். அதிலும் முக்கியமாக இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து குறையும் அபாயம் உள்ளது.

* தொடர்ந்து கொழுப்புச்சத்து குறைந்து கொண்டே வருவதால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

* தொடர்ந்து அதீத உடற்பயிற்சிகள் செய்யும் பலர் அதற்கான ஓய்வினை உடலுக்குக் கொடுக்காமல் இருப்பர். மேலும் தூக்கமும், உணவும் குறைவாகவும் இருக்கும். இது பிற்காலத்தில்

உடல் வலி, மன அழுத்தம், எடை அதிகரித்தல் என்று பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

* அதேபோல தொடர்ந்து தவறான எண்ணிக்கையில் பயிற்சிகள் செய்வதால் மூட்டு வலி, உடல் அசதி ஏற்படும் அபாயம் உள்ளது.

* உடம்பிற்கு தேவையில்லாத பயிற்சிகள் செய்யும் போது பலன் ஏதும் இல்லாமல், ஏதோ நாமும் செய்தோம் என செய்வோம். இது ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி உடற்

பயிற்சிகளை நிறுத்தி விடுவோம்.

தவறுகளை அறிவோம்...

மொத்தத்தில் நமக்கு உணவியல் மற்றும் உடலியல் சார்ந்து விருப்பம் இருந்தால் கைப்பேசி துணைக்கொண்டு மேலோட்டமாக நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டு இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதனை கண்மூடித்தனமாய் பின்பற்றுவது அபாயத்தில்தான் முடியும்.இது கைப்பேசியில் காணொளிகளை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல... நம்மில் பலர் நம் உடலியல் சார்ந்து பல மூடநம்பிக்கைகளை வைத்திருப்போம். அதனால் சிறிய பிரச்னைகளைக் கூட குணப்படுத்தாமல் விட்டுவிடுவோம்.

பின் அது அறுவை சிகிச்சையில் சென்று முடியும்.எனவே, ஆடம்பரமாக அதிகம் தேவை இல்லாத விஷயங்களுக்காக செலவு செய்வதை இனியாவது விடுத்து, நம் உடல் நலனுக்காக சற்று மெனக்கெட்டு முறையான வழியில் ஆரோக்கியத்தை அணுகினாலே போதும், பூரண ஆரோக்கியம் விரைவில் நமக்குக் கிட்டும். இதனை இப்போதே நாம் ஒவ்வொருவரும் மனதில் ஆழப் பதித்து, ஆரோக்கியம் நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்; நோயற்ற வாழ்வை வாழ்வோம்.

இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்