Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தூக்கமின்மை வியாதி கிடையாது!

நன்றி குங்குமம் தோழி

இரவு 11 மணி ஆனாலும் தூக்கம் வருவதில்லை. அப்படியே தூக்கம் வந்தாலும் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவதில்லை என்பது இன்று பல பெண்களின் குறையாக உள்ளது. தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்... தூக்கமின்மையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் நிபுணரான டாக்டர் ஸ்ருதி டெகாபுடி.

‘‘ஆண், பெண் யாராக இருந்தாலும் இரவு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியம். இதில் ஒருவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, டயட் குறித்து ஒவ்வொருவரின் தூங்கும் நேரமும் மாறுபடும். ஆனால், ஒருவர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்னை இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்களாக கூட இருக்கலாம். சரியான தூக்கம் இல்லை என்றால் நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அனைத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு மூளை. அது சொல்வதைத்தான் நம்முடைய உடல் செயல்படுத்தும். தூக்கமின்மையால் ஒருவரின் நினைவுகளில் பாதிப்பு ஏற்படலாம். வேலையில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகும். நமக்குத் தெரிந்த விஷயத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும். அடுத்து பிரச்னைகளை கையாளுவதற்கான திறனும் பாதிக்கப்படும். உதாரணமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துமோ அதே போல் சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றாலும் அது நம்முடைய உடலில் பெரிய அளவில் பாதகத்தினை கொடுக்கும்.

குறிப்பாக பெண்களுக்கு இதனால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். காரணம், அவர்களுக்கு மாதம் தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியுடன் தூக்கமின்மையும் சேரும் போது உடலில் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும். டிப்ரெஷன் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுவார்கள். ஹார்மோன் குறைபாடு காரணமாக குழந்தையின்மை, மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, PCOD ஏற்படும். மெனோபாஸ் காரணமாகவும் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். இவற்றுக்குத் தீர்வு நிலையான தூக்கத்தை கடைபிடித்தாலே

போதுமானது.

சிலர் நீண்ட வருடமாக தினமும் நான்கு மணி நேரம்தான் தூங்குவதாக கூறுவார்கள். அவர்களுக்கு ரிஸ்க் ஆப் டிமென்ஷியா... அதாவது, அல்சைமர்ஸ் டிமென்ஷியா ரிஸ்க் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு அது மேலும் அதிகமாகும். நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதால், சர்க்கரையின் அளவு கூடும். இதனால் மறைமுகமாக இதய பிரச்னை, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது அவர்கள் உடலில் கொலஸ்ட்ராலின் அளவும் கூடும்’’ என்றவர் தூங்கும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவரித்தார்.

‘‘நம்முடைய மூளை ஒரு சாஃப்ட்வேர் மாதிரி. எட்டு மணி நேரம் தூங்கும் போது அன்றைய தினம் என்னவெல்லாம் நடந்தது என்பதை அலசும். அதிலுள்ள நல்ல நினைவுகள் மற்றும் துயர நிகழ்வுகள் அனைத்தையும் பிரித்து, மூளையில் பதிவு செய்யும். அதனால்தான் தேர்வு நாட்களில் நன்றாக தூங்க வேண்டும். அவ்வாறு செய்வதால், படித்தவை அனைத்தும் மூளை மனதில் நினைவு வைத்துக் கொள்ளும். தூங்காமல் என்ன படிச்சாலும் அது நினைவில் இருக்காது. அடுத்து மூளையில் உள்ள அணுக்களில் நிறைய நச்சுப் பொருட்கள் இருக்கும். இரவு தூங்கும் போது மூளையில் உள்ள அணுக்கள் சுத்திகரிக்கப்படும். அதை கிளிம்பேட்டிக் சிஸ்டம்னு சொல்வோம். இல்லையென்றால் அந்த நச்சுக்களால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு டிமென்ஷியா ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நல்ல தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம்.

இந்தப் பிரச்னையில் இருந்து பாதுகாக்க நாம் சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது கேஃபைன் (டீ மற்றும் காபி) உள்ள பானங்களை மாலை நான்கு மணிக்கு மேல் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இதில் உள்ள கேஃைபனின் தாக்கம் நம்முடைய உடலில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இருக்கும். அடுத்து ப்ளூலைட் அதாவது, செல்போன், டி.வி, லேப்டாப் பார்ப்பதை இரவு படுக்கைக்கு செல்லும் இரண்டு மணி நேரம் முன்பு தவிர்க்க வேண்டும்.

மெலடோனின் என்ற ஹார்மோன், தூக்கத்திற்கு மிகவும் அவசியம். அந்த ஹார்மோன் இந்த ஸ்கிரீன் லைட் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு தூக்கம் வருவதை தடுக்கும். தூங்கும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். படுக்கை அறை ரிலாக்ஸ் செய்ய மட்டும்தான். படுக்கையில் அமர்ந்து வேலை பார்க்கக் கூடாது. அதற்கென தனி இடம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி கடைபிடிக்க வேண்டும். யோகாவும் கை கொடுக்கும்’’ என்றவர் தூக்கமின்மை ஏற்படக்கூடிய காரணங்களையும் விவரித்தார்.

‘‘இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள். அதுவே தூக்கமின்மைக்கு மிக முக்கிய காரணம். சில சமயம் வயோதிகம் காரணமாகவும் தூக்கம் பாதிக்கப்படும். இதில் இரண்டு வகைப்படும். ஒன்று தூக்கமே வராது. ஆனால், தூங்கிவிட்டால் ஆழ்ந்து தூங்குவார்கள். இரண்டாவது தூக்கம் வரும். ஆனால், இடை இடையே முழிப்பு வந்து எழுவார்கள். இதற்கு தீர்வு நான் மேலே குறிப்பிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கினால் அதையே தொடர வேண்டும். இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை என்பது சிறந்த நேரம்.

அப்படி இல்லாமல் இரவு 12 அல்லது ஒரு மணிக்கு தூங்குவதை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் தூக்கம் வராது. மன உளைச்சல், ஹாட் பிளாஷஸ் ஏற்படுவதால் உடல் செயல்பாடுகள் ஒரு குழப்பத்தில் இருப்பதால் அது தூக்கத்தை பாதிக்கும். தைராய்டு பிரச்னை இருந்தாலும் தூக்கம் வராது. அதற்கான நிபுணரிடம் ஆலோசனை பெறலாம். தூக்கமின்மை வியாதி இல்லை. அதற்கு வெவ்வேறு காரணம் இருக்கலாம். அது என்னவென்று அறிந்து ஆலோசனை பெற்றால் கண்டிப்பாக தூக்கமின்மை பிரச்னையில் இருந்து முழுமையாக விடுபடலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் நரம்பியல் நிபுணரான டாக்டர் ஸ்ருதி டெகாபுடி.

தொகுப்பு: நிஷா