Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளின் புரதச்சத்து குறைபாட்டை தவிர்க்கும் கொண்டைக்கடலை...

நன்றி குங்குமம் தோழி

உடலின் உயிரணுக்களின் வளர்ச்சி, பராமரிப்பு, தேய்மானம் அடைந்த பாகங்களைப் புதுப்பித்தல், உடல் வலிமை, குழந்தைகளின் வளர்ச்சி அனைத்திற்கும் புரதம் அத்தியாவசியம். அவை கருப்பு கொண்டைக்கடலையில் நிறைந்துள்ளது. உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கவும், ஹார்மோன் மற்றும் அமினோ அமிலங்கள் உருவாகவும், நரம்புகள் இயக்கத்திற்கும் வைட்டமின் பி6 தேவை. இதன் குறைவால் ரத்த சோகை, மன நல பாதிப்பு, அல்சைமர் ஏற்படுகின்றன. இது சுண்டலில் அதிகம் உள்ளது. 100 கிராம் சுண்டலில் 1.1 மி.கி வைட்டமின் பி6 உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, சோடியம், செலினியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.

கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள போலேட்டும் மெக்னீசியமும் மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன. இவை ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கருப்பு கொண்டைக்கடலை அதிக நன்மைகளை தரும். இதை சாப்பிட்டு வர பெண்களின் முகம் பளபளப்பாகும். சருமப் பிரச்னைகளை தடுக்கும், சருமம் பொலிவடையும்.

ரத்தத்தில் ஹோமோசிஸ்டைன் அதிகரித்தால் மனக்கவலை ஏற்படும். அதை தவிர்க்க மதிய உணவில் ஒரு கப் கருப்பு சுண்டல் சாப்பிடலாம். குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். சிறுநீர்ப்பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை வேகவைத்த சுடுநீருக்கு உண்டு.

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்களும், தாதுக்களும் கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள புரதம் தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக வைத்திருப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கிறது. இதில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடையைக் குறைக்க உதவும். மேலும் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளையும் தடுக்கலாம். இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திப்பதால், பசி எடுக்காது. உடலில் ரத்த சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறது.

கொண்டைக்கடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும். தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலையை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கும். தசை வளர்ச்சியும் மேம்படும். ​நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம்.

- கோவீ. ராஜேந்திரன், மதுரை.