Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகரித்து வரும் கல்லீரல் புற்றுநோய்

தடுக்கும் வழிமுறைகள்

மருத்துவர் அறிவுரை

கல்லீரல் புற்றுநோய் என்பது கல்லீரல் செல்களில் தொடங்கி கட்டுப்பாடின்றி வளரும் ஒரு வகை புற்றுநோயாகும்; ஹெபடைடிஸ் பி/சி, அதிக மது அருந்துதல், கொழுப்பு கல்லீரல் நோய் ஆகியவை முக்கிய காரணங்கள்; மேல் வயிற்று வலி, எடை இழப்பு, மஞ்சள் காமாலை, சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள்; சிகிச்சை முறைகளில் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி போன்றவை அடங்கும்.

கல்லீரல் அறுவை சிகிச்சை என்ற செய்தியை மருத்துவ பயனாளிகள் கேட்கும்போதே அச்சம் அவர்களை ஆட்கொள்கிறது. இந்த சிகிச்சை செயல்முறை மிகவும் ஆபத்தானது என்றே பெரும்பாலும் மருத்துவ பயனாளிகள் கருதுகின்றனர். ஆனால் மருத்துவம் முன்னேறியிருக்கிறது, எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன்கள் போன்றவற்றை பயன்படுத்தி கல்லீரல் பாதிப்பை முன்கூட்டியே அடையாளம் காண்பது, துல்லியமான சிகிச்சை திட்டமிடல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கல்லீரலுக்கு ரத்தத்தை வழங்கும் பகுதியை வேண்டுமென்றே தடை செய்வதன் மூலம் எஞ்சியுள்ள கல்லீரல் வலுவடையுமாறு செய்வது ஆகியவை சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களாகவும், நவீன உத்திகளாகவும் இருக்கின்றன.

அறுவை சிகிச்சை அறையில், மிக நவீன கருவிகளை பயன்படுத்துவதனால் தெளிவான பார்வை நிபுணர்களுக்கு கிடைப்பதுடன், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பு மிக குறைவாகவே இருக்கிறது. இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் முதுநிலை நிபுணரும், இரைப்பை குடல் இயல் மற்றும் இரைப்பை குடல் புற்றுநோயியல் மருத்துவருமான தினேஷ் கூறியதாவது: தாங்கள் நலமாக இருப்பதாகவே மருத்துவ பயனாளிகள் கருதுகின்றனர், இது ஏன் ஆபத்தானதாக இருக்கக்கூடும். கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்படுபவர்கள், தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, தாங்கள் உடல்நலத்துடன் இருப்பதாகவே எப்போதும் சொல்வதுண்டு. கல்லீரலின் பெரிய பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட இழப்பு ஈடுசெய்ய அது தொடர்ந்து செயலாற்றுவதும், மீட்சித்திறன் கொண்டதாக அது இருப்பதுமே இதற்கு காரணம். ஆரோக்கியத்துடன் இருப்பதாக நீங்கள் உணரும்போது கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்படும்போது அதை ஏற்றுக்கொள்வது சிரமமானது.

கல்லீரல் பாதிப்புகள் அல்லது கொழுப்புள்ள கல்லீரல் நோய் இருக்கும் நபர்கள் மத்தியில் நீண்டகாலமாக கல்லீரல் புற்றுநோய் வெளியில் தெரியாமல் அமைதியாக ஏன் இருக்கிறது என்பதை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

எனவேதான் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு குறித்த காலஅளவுகளில் ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் செய்வது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், இதன் அவசியத்தையும் புரிந்து கொள்வது முக்கியமானது.நுண்துளை அறுவை சிகிச்சை - கல்லீரல் புற்றுநோயியலில் இது சாத்தியமா. நிச்சயமாக இது சாத்தியமானதே. பல மருத்துவ பயனளிகளுக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை பொருத்தமானதாக இருக்கும். மிகச்சிறிய கேமரா மற்றும் சிறிய கீறல்களின் மூலம் குறைவான வலியையும், விரைவாக குணம் பெறுதலையும் உறுதி செய்ய முடியும், அதற்கும் மேலாக குறைவான காலத்திற்கே மருத்துவமனையில் தங்குவது தேவைப்படும்.

பெரும்பாலும் கல்லீரலின் ஆழ்பகுதிகள் மீது தெளிவான கண்ணோட்டத்தை கேமரா பெரும்பாலும் வழங்கும், ஆனால் அனைத்து மருத்துவ பயனாளிகளுக்கும் இது சாத்தியமாகாது. புற்றுக்கட்டியின் அளவு, அமைவிடம் மற்றும் வகை ஆகிய அம்சங்களே, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை பொருத்தமானதா என்பதை தீர்மானிக்கிறது. ஆகவே புற்றுக்கட்டியை பாதுகாப்பாகவும், முழுமையாகவும் அகற்றுவதற்கே மருத்துவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர், வெட்டுக்காயத்தின் அளவுக்கு அல்ல. அறுவை சிகிச்சை நிபுணரின் சமநிலை நடவடிக்கை: ஒரு அறுவை சிகிச்சைக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும், சிகிச்சைக்கு உகந்த நேரமும் மற்றும் சரியான தீர்மானிப்புமே, இது வெட்டுக்காயம், கீறல் குறித்தது மட்டுமல்ல. கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணருக்கு மிக கடினமானதாக இருப்பது சமநிலையை பேணுவதே. கல்லீரலின் எந்த அளவை அகற்றுவது மற்றும் எந்த அளவை விட்டு வைப்பது என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் முடிவு செய்ய வேண்டும். கல்லீரலின் மிகச்சிறிய பகுதியை மட்டும் அகற்றினால் புற்றுநோய் திரும்பவும் வரக்கூடும், அளவுக்கதிகமாக அகற்றப்படுமானால் கல்லீரல் செயல்படாமல் போகலாம்.

எனவே நாங்கள் செய்யும் அனைத்து அறுவை சிகிச்சை நேர்வுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஆனால் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் விரிவான திட்டமிடல் அவசியமானது. அறுவைசிகிக்சை செய்யும்போது, எதிர்பார்த்ததை விட கல்லீரல் பலவீனமானதாக இருக்குமானால், என்ன செய்வது என்று விரைவான முடிவை எடுக்க அறுவை சிகிச்சை நிபுணர் தயாராக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையே ஒரே வழிமுறையாக எப்போதும் இருப்பதில்லை, பிற சிகிச்சை வழிமுறைகளும் இருக்கின்றன: கல்லீரல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையே அவசியமான சிகிச்சை வழிமுறையாக எப்போதும் இருப்பதில்லை.

குறிப்பாக கல்லீரலின் பெரிய பகுதி சேதமடைந்திருக்குமானால் அல்லது புற்றுநோய் பரவியிருக்குமானால், சிகிச்சைக்கான முதல் சிறந்த விருப்பத்தேர்வாக அறுவை சிகிச்சை எப்போதும் இருப்பதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், நோயைக் கட்டுப்படுத்த முதலில் அப்லேஷன் (தணிப்பு), கீமோ மூலம் ரத்தஉறைவு நீக்கம், இலக்குடன் கூடிய மருந்துகள் அல்லது இம்யூனோதெரபி போன்ற சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். கல்லீரலின் நிலை மேம்பட்டால், பின்னர் அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஒரு நீண்ட, சிறந்த வாழ்க்கைக்கான உகந்த வாய்ப்பை, மருத்துவ பயனாளிக்கு ஏற்றவாறு வடிவமைப்பதே சிகிச்சை உத்தியின் நோக்கமாகும்.

முன்தடுப்பு, முக்கியமான எளிய நடவடிக்கைகள்:

பல மருத்துவ பயனாளிகளை பொறுத்தவரை கல்லீரல் தொற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியதே. வைரஸின் காரணமாக வரும் ஹெபடைட்டிஸ், கொழுப்புள்ள கல்லீரல் அல்லது அதிகளவு மதுபான நுகர்வு போன்ற நீண்டகால பிரச்னைகளின் காரணமாகவே பல கல்லீரல் புற்றுநோய்கள் உருவாகின்றன. ஆனால் இவைகள் வராமல் பெரும்பாலான நேரங்களில் தடுக்க முடியும். ஹெபடைட்டிஸ் பி-க்கு எதிரான தடுப்பூசி, தொற்றுகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது, ஆரோக்கியமான உணவு முறை, உடல் எடையை கட்டுப்படுத்துவது, அளவுக்கதிகமாக மது அருந்துவதை தவிர்ப்பது ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் கல்லீரலை பாதுகாக்க உதவும்.

நீரிழிவு அல்லது உடல் பருமன் நோய் உள்ள நபர்களும் குறித்த கால அளவுகளில் கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் வராமல் தடுப்பது என்பது கவனத்தை அதிரடியாக ஈர்க்கும் சொற்றொடராக இல்லையென்றாலும், அமைதியாக நம் உயிர்களை அது காப்பாற்றுகிறது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மனவலிமை அவசியம்

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், தைரியத்தையும், மனவலிமையையும் கற்றுத் தருகின்றனர்.

அதிக பாதிப்போடு மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதன் பிறகு தங்களது வாழ்க்கை முறையை முற்றிலுமான மாற்றிக் கொண்டு பல ஆண்டு சிறப்பான வாழ்க்கையை வாழும் மருத்துவ பயனாளிகளை நான் பார்த்திருக்கிறேன். இவர்களுள் சிலர் தினசரி உடற்பயிற்சியை செய்பவர்களாக, மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்தியவர்களாக, ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிப்பவர்களாக, அதிக நம்பிக்கையோடு, நேர்மறையான எண்ணத்தோடு வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையும் தைரியமும் மருத்துவ நிபுணர்களாகிய எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

ஆனால் நலமாகவும், ஆரோக்கியமாகவும் அவர்களை வாழ வைப்பது அவர்களின் ஆக்கப்பூர்வ சிந்தனையும், நேர்மறையான மனநிலையும்தான்.

வகைகள்

முதன்மை கல்லீரல் புற்றுநோய்: கல்லீரலில் தொடங்குவது. ஹெபடோசெல்லுலர் கார்சினோமா மிகவும் பொதுவான வகை.

இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய்: மற்ற உறுப்புகளில் (பெருங்குடல், மார்பகம் போன்றவை) தொடங்கி கல்லீரலுக்குப் பரவுவது.

பொதுவான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி/சி: வைரஸ் தொற்றுகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு வழிவகுத்து புற்றுநோயை உண்டாக்கும்.

அதிக மது அருந்துதல்: கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொழுப்பு கல்லீரல் நோய்: மது அருந்துவதால் அல்லது அருந்தாததால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல்.

அப்ளாடாக்சின்: பூஞ்சை நச்சு (வறுத்த உணவுகள், பருப்புகள் போன்றவற்றில் இருக்கலாம்).

அறிகுறிகள்

வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி.

விவரிக்க முடியாத எடை இழப்பு.

மஞ்சள் காமாலை (கண்கள், தோல் மஞ்சள் நிறமாதல்).

சோர்வு மற்றும் பலவீனம்.

குமட்டல், வாந்தி, பசியின்மை.

கருமையான சிறுநீர்.

சிகிச்சை முறைகள்

அறுவை சிகிச்சை: கட்டியை அகற்றுதல்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: பாதிக்கப்பட்ட கல்லீரலை மாற்றுதல்.

கதிர்வீச்சு சிகிச்சை & கீமோதெரபி: கட்டிகளை அழிக்க.

தடுப்பு முறை

ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொள்வது, ஹெபடைடிஸ் சி தொற்றைத் தவிர்ப்பது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது, ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது.