Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகரிக்கும் உடல் பருமன்

நன்றி குங்குமம் டாக்டர்

தடுக்க... தவிர்க்க!

மக்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கும், அவர்களின் உடல் எடைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றால், நிச்சயம் உண்டு என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார் மருத்துவர் பாரி முத்துக்குமார். உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

உடல் பருமன் என்பது என்ன? எதனால் ஏற்படுகிறது?

உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையைவிட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். அதாவது ஒருவர் தன்னுடைய உயரத்துக்கு எவ்வளவு எடை இருக்கலாம் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது பாடி மாஸ் இன்டக்ஸ் (BMI) என்று சொல்லப்படும். இந்த BMI என்பது ஒருவரின் உயரத்தை இருமடங்கால் வகுத்தால் கிடைக்கும் விடையாகும். உதாரணமாக (BMI = Kg/m2) அந்த விடை 18லிருந்து 25க்குள் இருந்தால் சரியான உடல் எடை ஆகும். அதுவே, 27- 30க்குள் இருந்தால் ஓவர் வெயிட் உடல் பருமன் ஆகும். 30க்கும் அதிகமானால் அதைத்தான் ஒபிசிட்டி என்று சொல்கிறோம்.

இந்த ஒபிசிட்டியிலேயே கிளாஸ் 1, கிளாஸ் 2, சூப்பர் ஒபிசிட்டி என்று மூன்று பிரிவுகள் இருக்கிறது. இன்னும் சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் 150 செ.மீ உயரம் இருக்கிறார் என்றால், அவரது உயரத்தில் 100 கழித்துவிட்டால் மீதம் இருக்கும் 50 அளவுதான் எடை இருக்க வேண்டும். சற்று கூடுதலாக என்றால், 50-60 கிலோ வரை எடை இருக்கலாம். இதுதான் அந்த உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையாகும். அதைத்தாண்டும்போதுதான் உடல்பருமன் என்று சொல்கிறோம்.

தமிழகத்தில் உடல்பருமன் உள்ளோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. உதாரணமாக, பிஎம்ஐ 25-30க்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 50-60 சதவீதத்துக்கும் அதிகம் இருக்கிறார்கள். ஓவர் வெயிட்டாக இருப்பவர்கள் 20-30 சதவீதத்தினர் இருக்கிறார்கள். இந்த உடல் பருமன் யாருக்கு எல்லாம் பிரச்னையை கொடுக்கும் என்றால், வயதானவர்களை அதிகம் பாதிக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கும். அடுத்து சின்ன குழந்தைகளை அதிகமாக பாதிக்கும்.

குழந்தைகளுக்கான உடல் பருமனைப் பொருத்தவரை, அவர்களது உணவு முறை ஒரு காரணம் என்றாலும் அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் குழந்தைகள் அதிக உடல் எடையில் இருந்தால், தைராய்ட், வளர்ச்சி ஹார்மோன் போன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டும். வளரிளம் பருவத்தைப் பொருத்தவரை அவர்களுக்கு தங்களது உடல் குறித்து விழிப்புணர்வு அதிகம் இருக்கும் அதனால் 80 சதவீதம் சரியான அளவில்தான் இருக்கிறார்கள். 20 சதவீதத்தினர்தான் உடல் பருமனாக இருக்கிறார்கள்.

ஆனால், 30-45 வயதை கடந்தவர்கள் இந்த அதிக உடல் எடை பிரிவில் வருகிறார்கள். உடல்பருமன் ஏற்பட பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, பரம்பரையாக வரும் உடல்வாகு, உடல் உழைப்பின்மை, எந்தவித உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்யாதிருத்தல், அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள், அதிகமாக உண்ணுதல், அடிக்கடி உணவகம் சென்று சாப்பிடும் பழக்கம், துரித உணவுகளை உட்கொள்வது போன்றவையே உடல் எடை கூட காரணங்களாகின்றன.

உடல் பருமன் பொருத்தவரை ஆண்களைவிடப் பெண்களே அதிகளவில் பாதிக்கின்றனர். தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டதே இதற்கு காரணம். மேலும், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே நொறுக்குத்தீனியை அளவு தெரியாமல் சாப்பிடுவதும்கூட பெண்கள் உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்

உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல உண்டு. அவற்றுள் முக்கியமானவை, டைப் 2 சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, ஸ்லீப்ஆப்னியா எனும் உறக்கச் சுவாசத் தடை. மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்னைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூல நோய், மனச்சோர்வு போன்றவைகளாகும்.

உடல் பருமனை தவிர்க்கும் வழிகள்

சரியான சமச்சீரான உணவுகளை உண்பதோடு, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு முக்கியமான வழியாகும். மேலும், உணவு கட்டுப்பாடும் உடல் பருமனை தவிர்க்க முக்கிய வழியாகும். உணவு கட்டுப்பாடு என்று எடுத்துக்கொண்டால், உணவை நேரத்துக்கு உண்ண வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அளவாக உண்ணுதல் வேண்டும். இது ஒவ்வொருவரின் லைஃப் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாறுதல் பெறும். உதாரணமாக, ஒரு குடும்ப தலைவியை எடுத்துக் கொள்ளும்போது, அவர்கள் நேரத்திற்கு உணவு அருந்தமாட்டார்கள். காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், பின்னர், தாங்களே வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டு வேலைகள் என இருப்பதால், அவர்கள் நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இதுவும் பெண்களிடையே உடல் பருமன் அதிகரிக்க ஒரு காரணமாகும். இதை தவிர்க்க, மாலை ஆறு மணிக்கு முன்பு இரவு வேளை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், சூரியன் உதித்த பிறகும் சூரியன் மறைவதற்குள்ளும் உணவை சாப்பிட்டு விட வேண்டும். இதனை லாங் பாஸ்டிங் அவர்ஸ் என்று சொல்வோம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகும். ஒருவேளை இரவு அதிக நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டிய நிலை இருந்தால் அவர்கள் சாப்பிட்டதும் படுக்கச் செல்லாமல், சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு பின்புதான் தூங்க செல்ல வேண்டும்.

அதுபோன்று தற்போது, இரவில் உணவகங்கள் சென்று மிட் நைட் உணவுகளை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறானது. எப்போதாவது ஒருமுறை சாப்பிட்டால் அது ஒன்றும் செய்யாது. அதுவே, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமனை அதிகரிக்கும். உடல் நல பாதிப்புகளை இரட்டிப்பாக்கவும் வாய்ப்புகள் அதிகம். உடல் பருமன் அதிகரிக்கும்போது, கூடுதல் எடைக்கு ஏற்றவாறு இருதயம் கூடுதலாக உழைக்க வேண்டும்.

நுரையீரல் அதிகம் உழைக்க வேண்டும், கிட்னி அதிகம் உழைக்க வேண்டும். இப்படி உடலுக்கு ஓவர் லோட் கொடுக்கும்போது, உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உடல் பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

உடல் பருமனுக்கான சிகிச்சை முறைகள்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூன்று வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதில் முதல்கட்டமாக வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு கட்டுப்பாடு. அடுத்தது மருந்து மாத்திரைகள். தற்போது அதிக உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை இந்தியாவில் உபயோகிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக அறுவைசிகிச்சை. அறுவை சிகிச்சை பொருத்தவரை, இரண்டு வகையான அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முதலாவதாக மெட்டபாலிக் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதன்மூலம், வயிற்றில் உள்ள உணவுப் பையை சுருக்குவதாகும். இதனால், உண்ணும் உணவின் அளவு குறையும். மேலும், சாப்பிடும் உணவானது வேகமாக செரிமானம் ஆகும். அடுத்து பைப்பாஸ் அறுவைசிகிச்சை. இது யாருக்கு என்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு. அதாவது சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை என்றால் செய்யப்படும். ரத்த அழுத்தம் இருப்பவர்கள், சூப்பர் ஒபிஸ் போன்றவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த மூன்று சிகிச்சை முறையும் அவரவர் உடல் பருமனுக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகிறது.

உடற்பருமன் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டியவை

பொதுவாக நம்மூரில் ஒரு பழமொழி இருக்கிறது. ஓடுகிற பாம்பை மிதிக்கும் வயது என்பார்கள். அந்த வயது வரை யாருக்கும் பெரிதாக பிரச்னை இருக்காது. அதுவே, 30 வயதை தாண்டும்போது தான் பிரச்னைகள் ஆரம்பிக்கும். அந்த வகையில், வயது கூட கூட பலருக்கும் பலவிதமான பிரச்னைகள் தொடங்கும்.

எனவே, உடல் எடை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டிய செயல். அதற்கு முறையான உணவுப் பழக்கம், இடைவேளை விட்டு உண்பது, சரியான நேரத்தில் உண்பது, ஒரு பங்கு முழு தானிய உணவும், அதற்கு இரண்டு மடங்கு காய்கள், கீரைகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்வது, அளவான- தரமான கொழுப்புணவு, புரதச் சத்திற்கு மீன், முட்டை, பால், பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (ICMR) பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து நிம்மதியான தூக்கம் மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் நைட் ஷிப்ட் பணியை மேற்கொள்கிறார்கள். இதனால், தூக்கம் சமநிலை இல்லாமல் போகிறது. மேலும், இரவு நேரம் கழித்து சாப்பிடுவது போன்றவற்றாலும் உடல் எடை கூடுகிறது. பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்றால், என்ன சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட வேண்டும்.

ஏனென்றால் அளவு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதனால், உணவில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும், இரவில் பொதுவாக நீராகாரமாக எடுத்துக் கொண்டால் மிக மிக நல்லது. அடுத்து நல்ல தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தினசரி சின்ன சின்ன உடற்பயிற்சிகளாவது செய்ய வேண்டும். இவைகளை கடைபிடித்தாலே உடல் பருமனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்