Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லீரல் கொழுப்பு நோய் குணப்படுத்துவது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

கல்லீரல் & பித்தப்பை நிபுணர் ஜாய் வர்கீஸ்

உலகளவில் அதிகரித்து வரும் மற்றும் மிகவும் ஆபத்தான கல்லீரல் பிரச்னைகளில் கல்லீரல் கொழுப்பு நோய் என்பது ஒன்றாக உள்ளது. முன்பு, வளர்ந்த நாடுகளில் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் ஒரு பெரிய உடல்நலப் பிரச்னையாக இருந்தது. ஆனால் சமீப காலமாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இந்த நோய் அதிகரித்து வருகிறது. கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு காரணமாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையும் அதிகரித்துவருகிறது. கல்லீரல் கொழுப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையானது 2040-ம் ஆண்டில் தற்போது உள்ள நிலையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இது குறித்து கல்லீரல், பித்தப்பை மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜாய் வர்கீஸ் பகிர்ந்துகொண்டவை.

கல்லீரலில் கொழுப்பு ஏற்படக் காரணம் என்ன? யாருக்கு எல்லாம் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது?

கல்லீரல் கொழுப்பு நோயானது பொதுவாக வாழ்க்கை முறை மாற்றம் உணவுப்பழக்கம் மற்றும் அடிப்படை நீரிழிவு (உயர் ரத்த சர்க்கரை), உயர் ரத்த கொழுப்பு அளவுகள், உடல் பருமன் (உடல் நிறை குறியீட்டெண் BMI > 30), உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும். சமீபத்தில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆரம்ப நிலை மற்றும் ரத்தத்தில் உயர் Hs-CRP அளவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்திருக்கிறது. மேலும், இது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் கல்லீரல் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.

இந்த நோயைப் பற்றி மக்கள் நன்கு புரிந்துகொள்வதற்கும் அதைத் தடுப்பதற்கும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்ற பெயர் \”வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய்\” என பெயர் மாற்றப்பட்டது. நடுத்தர வயது உடையவர்களிடையே (40 முதல் 60 வயது) இது மிகவும் பொதுவானது. இருப்பினும் தற்போது இளம் பருவத்தினரிடையே இது அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கல்லீரல் கொழுப்பு நோய் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் காட்டாது.

கல்லீரல் கொழுப்பு நோயை கண்டறிவது எப்படி?

கல்லீரல் கொழுப்பு நோயை ரத்தப் பரிசோதனை - கல்லீரல் செயல்பாடு சோதனை மற்றும் அடிவயிற்றின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். பைப்ரோஸ்கேன், காந்த அதிர்வு எலாஸ்டோகிராபி ஆகிய நவீன தொழில்நுட்பத்தின் மூலமும் கண்டறியலாம். மேலே குறிப்பிடப்பட்ட ஸ்கேன்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புப் பகுதியையும் கல்லீரல் சேதத்தின் அளவையும்

துல்லியமாக அளவிடுகின்றன. இதைக் கண்டறிய மற்ற பரிசோதனைகளைப் பொறுத்தவரை உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு, HbA1c அளவு, ரத்தக் கொழுப்பு அளவு, ட்ரைகிளிசரைடு அளவு மற்றும் HOMA இன்சுலின் அளவு ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கல்லீரல் கொழுப்பு நோய்க்கு சிகிச்சை முறை!

வாழ்க்கை முறை மாற்றம், எடை குறைப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இதை குணப்படுத்த முடியும். குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரையுடன் கூடிய ஆரோக்கியமான சமச்சீர் உணவு எடுத்துக்கொள்வது நலம் தரும். அதுபோன்று அதிகப்படியான இனிப்புகள், கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள், அதிக கலோரிமிக்க உணவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், தினசரி நடைப்பயிற்சி, வாரத்திற்கு 3 முதல் 4 முறை ஏரோபிக் உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மேலும், உடல் பருமன் உள்ளவர்கள் அதிகப்படியான எடையை குறைக்க கட்டாயமாக பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

அதுபோன்று, நோய் பாதிப்பு உள்ள அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் மற்றும் கல்லீரல் ஸ்கேன் மூலம் தங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பரிசோதித்துக்கொள்வது மிகவும் நல்லது. குறைந்த அளவில் பிரச்னை உள்ளவர்கள் மருந்து எடுத்துக் கொண்டால் போதுமானதாகும். பொதுவாக எந்தவொரு நோயுமே குணப்படுத்துவதை விட வருமுன் தடுப்பதே சிறந்தது ஆகும். எனவே, கல்லீரல் கொழுப்பு நோய்க்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு, எளிய பரிசோதனைகள் செய்து கொள்வது மூலம் பெரிய அளவில் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.