Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தாய்ப்பால் அதிகரிக்க உதவும் மூலிகை!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்று பிரசவித்த பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை குழந்தைக்குப் பால் போதவில்லை என்பதுதான். எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளைத் தேடித் தேடி முயற்சிக்கும் நமக்கு நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை போதும். தாய்க்கு அருவிபோல் பால் சுரக்க. சித்திரப் பாலாடை என்ற மூலிகையே அது. அது என்ன சித்திரப் பாலாடை என்கிறீர்களா? அது வேறொன்றுமில்லை அம்மான் பச்சரிசி கீரைதான். சித்திரப் பாலாடை என மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.

முக அழகுக்கும், சருமத்தில் ஏற்படும் பரு, புண், மரு, கட்டிகள் போன்றவற்றிற்கு பலரால் குறிப்பாக இளவயதினரால் அதிகம் பயன்படுத்தப்படும் கீரைதான் இந்த அம்மான் பச்சரிசி கீரை. துவர்ப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த கீரையின் முழுத் தாவரமும் மருந்தாகப் பயன்படக்கூடியது. குளிர்ச்சித்தன்மை கொண்ட இந்தக் கீரையை எங்கு கிள்ளினாலும் பால் வடியும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த சிறு செடி. சொரசொரப்பான எதிர் அடுக்கு இலைகளைக்கொண்ட கீரை ஆகும்.

சிறு பூண்டு இனத்தைச் சேர்ந்த இது வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும் மூலிகை. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உள்ளன. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிக் குருணை போலிருப்பதால் பச்சரிசிக் கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்துப் பாகமும் மருத்துவக் குணம் கொண்டது. இது ஒரு கீரை வகையைச் சேர்ந்தது. இன்று பெருமளவில் இதனை கீரையாகப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்துவிட்டது. எந்த ரசாயனமும் இன்றி தானாக வளரும் இந்தக் கீரையை பயன்படுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பு மேலும் எந்த தொற்றுக் கிருமிகளையும் அண்ட விடாது என்பதற்காக. உடலில் ஏற்படும் மருக்களுக்கு இதன் பாலை தொடர்ந்து பூச மருக்கள் உதிர்ந்துவிடும். மேலும் முகத்தில் தோன்றும் அனைத்து சரும தொந்தரவுகளுக்கும் இந்த பால் உதவும். கருந்திட்டுகள், கட்டிகளுக்கும் இதனை பூசலாம்.

இதன் இலைகளை நீரில் கலந்து சிறு தீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும். இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை அருந்த வேண்டும். மேலும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்க உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.ஆண், பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் எண்ணெய்ப்பிசுக்கையும் நீக்கும். இதன் பால் காலில் ஏற்படும் கால் ஆணி, பாத பித்த வெடிப்பை நீக்கும். உதட்டில் ஏற்படும் வெடிப்புகளுக்கும், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.

இதில் கூட்டு, துவையல், பொரியல் செய்து உண்பதால் உடலில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல், நரம்பு வீக்கம், நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும்.உடலில் ஏற்படும் வீக்கங்களையும், வலிகளையும் இந்த கீரை குறைக்க உதவுகிறது.காசநோயினை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குடல் சார்ந்த தொந்தரவுகள், ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. சிறுநீர் கடுப்பு, எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது.

அம்மான் பச்சரிசி கீரை சமைக்கும் முறைகள்

அம்மான் பச்சரிசி துவையல் மலச்சிக்கலை போக்கும். ஒரு கையளவு அம்மான் பச்சரிசி இலைகள், கறுப்பு உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம் சிறிது மிளகு, புளிப்பிற்கு ஒரு தக்காளி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைக்க சுவையான அம்மான் பச்சரிசி துவையல் தயார்.இதனை பாசிப்பருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து கூட்டாகவும் செய்ய சுவையாக இருக்கும்.இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெறும்.

பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது. இனி இந்த கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்துவோம், பயன் பெறுவோம்.

தொகுப்பு: ரிஷி