நன்றி குங்குமம் டாக்டர்
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
நோய் நாடி நோய் முதல் நாடி
தைராய்டு சுரப்பி குறைபாடு என்பது மக்களிடையே பொதுவாக இருக்கும் ஒரு குறைபாடாகும். ஆனால், பெரிதளவில் கண்டுகொள்ளப்படாத ஒரு குறைபாடாக மக்களிடையே இருக்கின்றது. ஏனென்றால், உலகளவில் ஐந்து சதவீத மக்களுக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு இருக்கின்றது. மேலும் இந்தியாவில் பத்தில் ஒருவர் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றார். பெரும்பாலும் தைராய்டு சுரப்பி குறைபாடு பெண்களுக்குதான் அதிகமாக இருக்கின்றது. அதிலும் பலருக்கும் இப்பிரச்னை இருக்கின்றது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான
விஷயமாகும்.
தைராய்டு ஹார்மோன் என்றால் என்ன?
தைராய்டு ஹார்மோன் என்பது, தைராய்டு சுரப்பியில் இருந்து சுரந்து வருவதாகும். தைராய்டு சுரப்பி என்பது கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கியமான சுரப்பியாகும். மேலும், தைராய்டு ஹார்மோனின் மிக முக்கியமான வேலையாக இருப்பது என்னவென்றால், உடம்பிலுள்ள அனைத்து செல்களில் நடக்கும் மெட்டபாலிசத்துக்கு தைராய்டு ஹார்மோன் தேவைப்படுகிறது.
தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள்?
தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும்போது, உடல் மிகவும் சோர்வாக இருக்கும். நமது உடலில் அதிகப்படியான அளவிற்கு முடி கொட்டும். மேலும் அடிக்கடி மறதி ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படும். உடலின் எடை அதிகமாக இருக்கும். அதனால், சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும். பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும். கை, கால் வீக்கமாக இருக்கும். இந்த அறிகுறிகள் அனைத்துமே தைராய்டு குறைவாக சுரக்கும்போது ஏற்படும் பிரச்னைகளாகும்.
மேலும், ஒரு சிலருக்கு தைராய்டு ஹார்மோன் அதிகமாகவும் சுரக்கும். அந்நேரத்தில் ஏற்படும் அறிகுறிகளாக, எப்பொழுதும் பதற்றத்துடனே இருப்பது, மிகவும் சோர்வாக இருப்பது, உடலின் எடை குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். பெரும்பாலும் தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு மற்றும் மலம் கழிப்பதில் பிரச்னை இருக்கிறது என்றால், தைராய்டின் அறிகுறிகள் என்பதை மறந்து விட வேண்டாம். மாதவிடாய் நேரத்தில் ரத்தப்போக்கு குறைவாக இருக்கும். இவையெல்லாம் தைராய்டு அதிகமாக சுரக்கும்போது, உடலில் ஏற்படும் பிரச்னைகளாகும்.
இந்த அறிகுறிகள் இருக்கும்போது, நாம் முறையாக தைராய்டு சார்ந்த பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையோடு மேற்கொள்ள வேண்டும். இந்த அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாவிட்டால், இதனையொட்டி இருக்கும் மற்ற பிரச்னைகள் உடலில் ஏற்பட ஆரம்பிக்கும்.
தைராய்டு இருப்பதற்கான காரணங்கள்:
தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதற்கு முதற்காரணம் என்னவென்றால், ஆட்டோ இம்யூன் கண்டிஷன்ஸ் இருப்பதால் குறைவாக சுரக்கின்றது. இதனால் ஆட்டோ இம்யூன் தொடர்பான மற்ற பிரச்னைகள் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணத்திற்கு, மெட்டாபாலிக் பிரச்னைகள், டயாபடீஸ் பிரச்னைகள் ஏற்படும் போது, தைராய்டு இருக்கிறதா என்பதையும் நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது காரணமாக, சில நேரங்களில் நாம் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்து, மாத்திரைகளால் கூட தைராய்டு சுரப்பது குறைவாக இருக்கலாம். மூன்றாவதாக, அயோடின் குறைவாக இருந்தாலும் பிரச்னை ஏற்படும்.
கடந்த காலத்தில் அயோடின் குறைபாடு தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது செறிவூட்டப்பட்ட உப்பு கிடைப்பதால், அயோடின் குறைபாடு மக்களிடையே குறைவாக இருக்கிறது. அதனால் அயோடின் குறைபாடு, தற்போது மூன்றாம் இடத்திற்கு வந்து விட்டது. இந்த மூன்று காரணங்களால் தான், தைராய்டு குறைவாக சுரக்கின்றது. மேலும் சில காரணங்களும் இருக்கின்றன.
தைராய்டு அதிகமாக சுரப்பதற்கு, காய்ட்டர் என்று சொல்லக்கூடிய கழுத்துப் பகுதியில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். இந்த காய்ட்டர் பிரச்னையால் தைராய்டு குறைவாகவும் சுரக்கலாம் அல்லது அதிகமாகவும் சுரக்கலாம். இதனால், கழுத்துப் பகுதியில் ஏற்படும் சில கட்டிகளாலும், ஆட்டோ இம்யூன் குறைபாட்டால் தைராய்டு அதிகமாக சுரக்க வாய்ப்புகள் இருக்கிறது.
தேவையான வாழ்க்கை முறை மாற்றங்கள்
தைராய்டு பிரச்னைகள் வந்து விட்டது. இதற்கான சிகிச்சை முறைகளும் பின்பற்றி வருகிறோம். வேறு என்ன செய்ய வேண்டும் என்று சிலர் கேட்பார்கள். உண்மையில், எல்லா சிகிச்சைகளுக்கு பின்னும் நாம் நம்முடைய வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான், நோய் நம்மை நெருங்காது. தைராய்டு சீராக இருப்பதற்கு, முதலில் டயட் மிகவும் முக்கியம். அதாவது, டயட்டில் அயோடின் சத்து தைராய்டுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். மேலும், மைக்ரோ நியூட்ரிஷியன் என்று சொல்லக்கூடிய, அயன், விட்டமின் ஏ, சிங், செலீனியம் போன்ற சத்துகளும் தேவைப்படுகிறது.
வீட்டில் சமைக்கும் உணவுகள் மற்றும் காய்கறிகள் சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் உண்ண வேண்டும். இதனால் தைராய்டு இருந்தால் சரியாகும். தைராய்டு இல்லாதவர்களுக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்கப்படும். மேலும் தைராய்டு வந்து விட்டால் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம். இன்னும் டயட் சார்ந்த ஆய்வுகள் நடந்துகொண்டு மட்டுமே இருக்கின்றது. அதனால், தவறான தகவல்களை நம்ப வேண்டாம். டயட் முதலில் இருக்கிறது என்றால், இரண்டாமிடத்தில் நடைப்பயிற்சி இருக்கிறது. தினமும் குறைந்தது அரைமணி நேரம் நடக்க வேண்டும். இவை இரண்டையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் போது தைராய்டை நாம் சரி செய்து விட முடியும்.
தைராய்டும் மற்ற நோய்களும்
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்னைகள் மற்ற நோய்களிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, தைராய்டு பிரச்னையால் சுகர், கொலஸ்ட்ரால் மற்றும் அனீமியா போன்றவை அதிகளவில் பாதிப்பை சந்திக்கின்றன. மேலும், தைராய்டு ஹார்மோன் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரக்கும் போது, மருந்து மாத்திரைகள் எடுத்தாலும், மற்ற நோய்
களான சுகர், கொலஸ்ட்ரால் மற்றும் அனீமியா சரியாகாது.
தைராய்டு பிரச்னையை சரி செய்தால் மட்டுமே, இம்மூன்றையும் சரி செய்ய முடியும் என்பதே நிதர்சனம்.தைராய்டு குறைபாட்டை சரி செய்யவில்லை என்றால், உடலின் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க என்ன தான் நாம் உடற்பயிற்சி மற்றும் தீவிர டயட் இருந்தாலும், தைராய்டு குறைவாக சுரக்கும் போது, உடலின் எடை அதிகரிக்க மட்டுமே செய்யும். உடல் எடை அதிகரிப்பதால், நாம் சாப்பாட்டை குறைக்கும் போது, சத்து குறைபட்டாலும் பாதிக்கப்பட நேரிடும்.
அதேபோல், தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது, உடலின் எடையும் குறைந்து கொண்டேயிருக்கும். எவ்வளவுதான் சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரிக்காது. அதனால், தைராய்டு குறைபாட்டை சரி செய்ய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுக்கும் போது, இம்மாதிரியான பிரச்னைகளையும் சரிசெய்ய முடியும்.
தைராய்டு ஹார்மோனும் கர்ப்ப காலமும்
மேலும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தைராய்டு ஹார்மோனின் தேவை அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும், அந்நேரத்தில் இயல்பாகவே பெண்களுக்கு அதிகமாக தைராய்டு சுரக்க ஆரம்பிக்கும். ஒருசில நேரங்களில் குறைவாக சுரக்கும் போது, மருத்துவரின் ஆலோசனையோடு, கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டு சுரப்பதற்கான மாத்திரைகள் எடுக்க வேண்டி வரலாம். சில நேரம், பெண்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பே தைராய்டு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு, அந்த மாத்திரையின் அளவை வைத்து, கர்ப்ப காலத்திற்கு எந்த அளவுக்கு மாத்திரையின் தேவையிருக்கிறது என்பதையும் மருத்துவரின் ஆலோசனையோடு மாத்திரைகள் எடுப்பது சிறந்தது.
மருந்துகளின் வகைகள்
சில நேரங்களில் மக்கள், மருத்துவரை சந்திக்கும் போது, தைராய்டு மாத்திரை எடுக்கிறேன் என்று மட்டும் கூறுவார்கள். உண்மையில், தைராய்டு ஹார்மோன் சார்ந்த விஷயங்களுக்கு மாத்திரைகள் பலவிதம் இருக்கிறது. அதில் இரண்டு மட்டும் மிகவும் முக்கியமானது. தைராய்டு குறைவாக சுரப்பவர்களுக்கு அதிகமாக சுரக்க மாத்திரைகள் வழங்கப்படும். தைராய்டு அதிகமாக சுரப்பவர்களுக்கு குறைவாக சுரப்பதற்கு மாத்திரைகள் வழங்கப்படும்.
இதில் நாம் எந்த வகைக்கு மாத்திரைகள் எடுக்கிறோம் என்ற புரிதல் நமக்கு மிகவும் அவசியமானது.இப்படியாக நமது உடலுக்கு தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியமானது. இந்த ஹார்மோன் நமது உடலின் மற்ற பாகங்களை இணைக்கும் ஒரு சங்கிலியாகும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு தெரிய வருமானால், தைராய்டு என்று சாதாரணமாகக் கடக்க வேண்டாம். தைராய்டு மட்டும் நாம் சரி செய்து விட்டாலே, நமது உடலை மேலும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும்.