Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நீரிழிவு, இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் சமோசா, ஜிலேபி: ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கை

உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி தற்போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி செய்யும் காலகட்டத்தில் இன்றைய சமூகம் வந்துவிட்டது. இதற்கு காரணம், நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த உணவு பழக்க வழக்கம் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் முற்றிலும் மாறிப்போனது தான். நமது சூழல் தெரியாமல் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றி தற்போது எதை தவிர்ப்பது, எதை தின்பது என யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இது அடுத்த சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மக்கள் கண்டிப்பாக பாரம்பரிய உணவை தேடி செல்லக்கூடிய காலம் வரும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கூட மிகப் பெரிய ஓட்டல்களில் மீண்டும் பழைய சோறு, அரிசி மாவு கஞ்சி, திணை வகைகள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளதை காண முடிகிறது. இவை உணர்த்துவது ஒன்றுதான் உடலுக்கு எது நல்லது என்பதை மக்கள் மீண்டும் தேட ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. அந்த வகையில் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் மற்றும் செல்போன்களின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கின்றன. ஒரு காலகட்டத்தில் என்றாவது ஒரு நாளைக்கு சென்று ஓட்டலில் சாப்பிட்ட காலம் மாறி இன்று தினமும் ஓட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குடும்பம் குடும்பமாக வாரத்தில் 2 நாட்களாவது ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வருகின்றன.

அதுவும் சைனீஸ் ரெஸ்டாரன்ட், அமெரிக்கன் ரெஸ்டாரன்ட் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளை தேடிச் சென்று சாப்பிடுகின்றனர். அதில் எந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த உணவுகளில் என்னென்ன ரசாயணங்கள், நிறமூட்டிகள், சுவைக்கான மசாலாக்கள் உள்ளன என்பதை எல்லாம் பார்க்காமல் சுவைக்காக இது போன்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல வெளிநாடுகளின் உணவு வகைகள் பிரபலமாக இருந்தாலும் வட மாநில நபர்கள் அதிக அளவில் தமிழகத்தில் வர ஆரம்பித்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநில உணவுகள் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ஊடுருவி அது மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே மயோனைஸ் எனப்படும் உணவு பொருளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதேபோல், சவர்மா என்னும் வட மாநில உணவை சாப்பிட்ட பலர் பாதிக்கப்பட்டு அந்த சர்ச்சை அடங்கியது.

அதற்குள் தற்போது மீண்டும் புதிதாக ஒரு சர்ச்சை எழுத்துள்ளது. வட மாநிலத்தில் அதிகமாக விற்பனையாகும் சிற்றுண்டிகளில் சமோசாவும், ஜிலேபியும் ஒன்று. இந்த சமோசா, ஜிலேபி தற்போது தமிழகத்தில் அனைத்து சிற்றுண்டி கடைகளிலும் பெரும்பாலான இடங்களில் விற்கப்படுகின்றன. எந்த இடத்தில் சமோசா இருக்கிறதோ அதன் அருகிலேயே ஜிலேபியும் பார்க்க முடியும். அந்த அளவிற்கு இரண்டு உணவு பொருட்களும் தற்போது தமிழகத்திலும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. திடீரென ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை சமோசா பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது. அந்த வகையில், மக்களிடையே மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இது குறித்து லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் 2050ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 44 கோடி பேர் உடல் பருமன், நீரிழிவு ரத்த கொதிப்பு போன்ற வாழ்வியல் மாற்ற நோய்களுக்கு உள்ளாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அதிக இனிப்பு, கொழுப்பு மற்றும் மாவு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சமோசா, ஜிலேபி, பகோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை கொழுப்பு சத்துக்களின் அளவு, அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை கடைகளில் வாசலில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. அந்த வகையில் மகாராஷ்டிரா நாகூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில் சோதனை ஓட்டமாக இந்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட உள்ளதாகவும் பரபரப்பாக தகவல்கள் வெளியாகின. இது வெறும் எச்சரிக்கை பலகை தான் உணவுக்கு தடை இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. அது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டால் பெருமளவில் சமோசா மற்றும் ஜிலேபி விற்பனை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மாலை வேளையில் மிக அதிக அளவில் விற்பனையாகும் உணவுப் பொருட்களில் சமோசா மற்றும் ஜிலேபி முதன்மையாக உள்ளதால் இதனை சாப்பிட வேண்டாம் எனக் கூறுவதா அல்லது சாப்பிட்டால் பிரச்னை வரும் எனக் கூறுவதா என சொல்லத் தெரியாமல் பலரும் விழுப்பிதுங்கி நிற்கின்றனர். அப்படி இந்த சமோசா மற்றும் ஜிலேபியில் என்னதான் உள்ளது என்பதை அறிந்து கொள்ள கொரட்டூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரூபினி தேவியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

இனிப்பு சம்பந்தப்பட்ட எந்த உணவும் உடலுக்கு நல்லது கிடையாது. அது ஜிலேபி ஆக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் அனைத்திலும் சர்க்கரை அளவு மிக அதிக அளவில் உள்ளது.

இவை அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான். கடலை மாவு, மைதா, டால்டா, தரமில்லாத நெய் போன்றவற்றை இதில் கலக்கின்றனர். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. அதேபோல சமோசா என்பது டீப் ப்ரை எனப்படும் உணவு வகை. மேலும் அது சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி எண்ணெயில் போட்டு எடுத்து தருவார்கள். நீண்ட நேரம் பொரிப்பதால் அதில் எண்ணெய் உள்ளே ஊறி அதிக கெட்ட கொழுப்பை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதேபோன்று தான் பஜ்ஜி வடை போன்ற உணவுப் பொருட்களிலும் அதிக அளவு எண்ணெய் சேர்ந்துள்ளது. இவை அனைத்தும் உடலுக்கு கெடுதல் தான். ஏன் இவை இரண்டும் அதாவது சமோசா மற்றும் ஜிலேபி என குறிப்பிடுகிறார்கள் என்றால் தற்போது வட மாநிலம் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் மாலை நேரங்களில் பெரும்பாலான கடைகளில் ஒரு காம்போ போல இதனை விற்கிறார்கள்.

சமோசா கடையில் கண்டிப்பாக ஜிலேபியை பார்க்க முடியும். அந்த அளவிற்கு இதன் விற்பனை அதிகரித்து விட்டது. சில கடைகளில் காலையில் 10 மணிக்கு சமோசா போடுகிறார்கள். அது விற்பனையாக வில்லை என்றால் மீண்டும் அதே சமோசாவை மாலை மீண்டும் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தருகிறார்கள். இது மிகவும் உடலுக்கு கெடுதலை விளைவிக்கிறது. இந்த உணவுகளை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகரித்து அது இதயத்திற்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இன்சுலின் அதிகரித்து சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி வருவதற்கு இது வழி வகுத்து விடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் என்ற ஒரு விஷயம் கிடையாது. ஆனால் இன்று அது கட்டாயம் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் சமோசா, ஜிலேபி உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருவதற்கு பதிலாக தினமும் ஒரு சுண்டல் வகைகள் பொரி, பாப்கான், பிரவுன் பிரட், ராகி பிரட் இல்லையென்றால் பழங்கள், பாதாம் போன்றவற்றை தரலாம். தினமும் ஒரு சூப் வகைகளை தரலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்கள் ஏராளமானவை உள்ளன. அதனை விடுத்து தேவையில்லாத நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராத உணவுப் பொருட்களை பொதுமக்கள் தவிர்ப்பதன் மூலம் தேவையில்லாத நோய்களிலிருந்து விடுபடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

கடைகளில் அறிவிப்பு பலகை

தற்போது சமோசா ஜிலேபி குறித்து வெளியான தகவலுடன் அதனை சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்பது போல ஒரு தகவலும் வெளியானது சிகரெட் பாக்கெட் களின் புகைபிடிக்கும் போது உடல் நலத்திற்கு தீங்கு என போட்டு இருக்கும் அதே போன்று மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என போட்டிருக்கும் இதுபோன்ற வாசகங்களை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனி விற்கும் கடைகளிலும் எழுத வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு அவசியம்

ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கொழுப்பு சத்து உள்ளது எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை அறிந்து கொண்டாலே பொதுமக்கள் அதை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு குலோப் ஜாமூனில் 5 டீஸ்பூன் சர்க்கரை உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது அதை மீண்டும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். இதேபோல கெடுதல் தரும் உணவுகளில் என்ன உள்ளது என்பதை தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.