Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நுரையீரல் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும்.

நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை-

ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (Outer pleura)

2. உள்படலம் (Inner pleura)

இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.

இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களில் அதை விழுங்கிவிடுவோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல், தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.

நுரையீரலின் பணிகள்

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.

சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை நுரையீரல் செய்து வருகிறது.

நுரையீரல் பாதிப்பு

உலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

புகைபிடிப்பது

புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles) நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்- கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்

*இருமல்

*மூச்சு வாங்குதல்

*மூச்சு இழுப்பு

*நெஞ்சுவலி

*ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)

நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள்

மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia), காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல் (Asthma).

நுரையீரலை பாதுகாக்க வழிகள்

தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.

பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைபிடிப்பது.

புகைப் பிடிப்பதை தவிர்ப்பது

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது

இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்.. ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்.

தொகுப்பு: சரஸ்