நன்றி குங்குமம் டாக்டர்
கட்டுக்கதைகள் vs உண்மைகள்!
இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது
இதய அறுவைசிகிச்சையில் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ நடைமுறைகள் அடங்கியுள்ளன. இதய அறுவைசிகிச்சை வகைகளில் திறந்த இதய அறுவைசிகிச்சை [open-heart surgery], குறைந்தபட்ச-துளையிடும் அறுவைசிகிச்சை [minimally-invasive], ரோபோடிக் உதவியுடன் கூடிய அறுவைசிகிச்சை [robotic-assisted surgery], ஆஞ்சியோபிளாஸ்டி [angioplasty], ஸ்டென்டிங் [stenting] ஆகிய நடைமுறைகள் அடங்கும்.
ஒவ்வொரு செயல்முறையும் இதயத்தின் நிலை, நோயாளியின் வயது, அறுவைசிகிச்சையால் ஏற்படும் அபாயங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் என பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. இன்று, மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் அதி நவீன முன்னேற்றங்கள், இதய அறுவைசிகிச்சைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், குறைவான துளையிடும் நடைமுறை கொண்டவையாகவும், அதிக பலன் அளிப்பவையாகவும் மாற்றியுள்ளன.
திறந்த இதய அறுவை சிகிச்சையில், இதயத்தில் நேரடியாக சிகிச்சை மேற்கொள்ள மார்பைக் கீறித் திறக்கும் நடைமுறை உள்ளது. இம்முறையில், மார்பில் ஒரு பெரிய கீறல் போடப்பட்டுத் திறக்கப்படுகிறது. மார்பக எலும்பு வெட்டப்பட்டு விலா எலும்பு திறக்கப்படுகிறது. கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்டிங் (coronary artery bypass grafting (CABG)) மற்றும் வால்வு சீரமைப்பு அல்லது மாற்று சிகிச்சை [valve repair or replacement] ஆகியவை இதற்கு பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.
சிஏபிஜி நடைமுறையின் போது, அறுவைசிகிச்சை நிபுணர் உடலின் வேறு பகுதியிலிருக்கும் ஒரு நாளத்தைப் பயன்படுத்தி அடைக்கப்பட்ட தமனிகளைச் சுற்றி ஒரு மாற்றுப்பாதையை உருவாக்குகிறார். பெரும்பாலும், ஒரு இதய-நுரையீரல் பைபாஸ் இயந்திரம் [heart-lung bypass machine] இதயத்துடன் இணைக்கப்பட்டு, அழுத்தம் (பம்ப்) செய்யும் செயலைச் செய்து, இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியேற செய்கிறது. இது துடிப்பு இல்லாத மற்றும் ரத்தம் பாயாத இதயத்தில் அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிகிச்சைப் பணியை மேற்கொள்ள உதவுகிறது.
குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை, ரோபோடிக் உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை ஆகியவற்றில், மார்பக எலும்பை முழுவதுமாகக் கீறித் திறக்க வேண்டிய அவசியமின்றி சிறிய கீறல்கள் மட்டுமே போடப்படுகிறது. மேலும் ரோபோடிக் மருத்துவ உபகரணங்கள் மிகத் துல்லியமாக அறுவைசிகிச்சை செய்ய உதவுகின்றன. வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையைப் போல் இல்லாமல், சிறிய அளவிலான வடுக்கள், அறுவைசிகிச்சை முடிந்த பின்பு குறுகிய காலம் மருத்துவமனையில் தங்கினால் போதும் என்ற சூழல், நோயாளி மிக விரைவாக குணம் அடையும் வாய்ப்பு உள்ளிட்ட பல நன்மைகள் இதில் உள்ளன.
ஆஞ்சியோபிளாஸ்டி [Angioplasty] என்பது வடிகுழாய் அடிப்படையிலான [catheter-based procedure] செயல்முறையாகும். இதில் பலூன்-முனை குழாய் இடுப்பு அல்லது மணிக்கட்டு வழியாக ஒரு குறுகலான தமனியில் அடைப்பு இருக்கும் இடம் வரை செருகப்படுகிறது. தமனியின் சுவருக்கு எதிராக பிளேக்கைத் (plaque) தள்ளி, தமனியை அகலப்படுத்த பலூன் ஊதப்படுகிறது. இதன்மூலம் ரத்த ஓட்டம் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படுகிறது. மூலம் நாளத்தைத் திறந்து வைத்திருக்கவும் மீண்டும் குறுகும் அபாயத்தைக் குறைக்கவும் பொதுவாக ஒரு உலோக கண்ணி “ஸ்டென்ட்” [“stent”] வைக்கப்படுகிறது.
இதற்கு மார்பைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இம்முறையில் குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் மயக்க நிலை ஓர் இரவுக்குள் தெளிந்துவிடும். இதற்கு ஒரு இரவு அல்லது குறுகிய காலமே மருத்துவமனையில் தங்கியிருந்தால் போதுமானது.
இதய அறுவைசிகிச்சையைப் பற்றிப் பல கட்டுக்கதைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கட்டுக்கதை - இதய அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது.உண்மை - நவீன இதய அறுவை சிகிச்சை மிக அதிக வெற்றி விகிதங்களைக் கொண்டுள்ளது என்பதே உண்மை. பைபாஸ் அறுவைசிகிச்சை 96 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை வெற்றி விகிதத்தைக் [a 96%-98% success rate < https://asianheartinstitute.org/blog/heart-bypass-surgery-success-rates-outcomes/ >] கொண்டுள்ளது. பல மருத்துவமனைகளில் வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் இறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே பதிவாகின்றன. மயக்க மருந்து, இமேஜிங், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் சிக்கல்களின் அபாயத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் வகையில் குறைத்துள்ளன.
கட்டுக்கதை - அறுவைசிகிச்சை நிபுணர் இதயத்தை மார்பிலிருந்து முற்றிலுமாக வெளியே எடுப்பார்.
உண்மை - மாற்று அறுவைசிகிச்சைகளைத் தவிர, மற்ற சிகிச்சைகளில் இதயம் அதே இடத்தில்தான் இருக்கும். அறுவைசிகிச்சை நிபுணர்கள் மார்பில் உள்ள கீறல்கள் அல்லது வெட்டுக்கள் வழியாகவே சிகிச்சைப் பணியைச் செய்கிறார்கள். பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு, மார்பக எலும்பு பிரிக்கப்படுகிறது. [மருத்துவ நடைமுறைக்குப் பிறகு அவை மீண்டும் இணைக்கப்படுகிறது]. அதே நேரத்தில் இதயம் அதன் இடத்திற்குள்ளாகவே பாதுகாக்கப்படுகிறது.
கட்டுக்கதை - வயதானவர்களுக்கு மட்டுமே இதய அறுவைசிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறது.
உண்மை - இளைஞர்கள் மற்றும் பிறவி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குக் கூட இதய சிகிச்சை நடைமுறைகள் தேவைப்படலாம். இதய அறுவை சிகிச்சை நடைமுறைகளை பாதுகாப்பாக மேற்கொள்வதன் மூலம் அவர்கள் பயனடையலாம்.
கட்டுக்கதை - அறுவைசிகிச்சைக்குப் பின் குணமடைய பல மாதங்கள் ஆகும்.
உண்மை - மருத்துவமனையில் தங்குவது பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். பெரும்பாலான மக்கள் 6 முதல் 8 வாரங்களுக்குள் தங்களது வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்குவார்கள். குறைந்தபட்ச ஊடுருவல் நடைமுறைகள், மேம்படுத்தப்பட்ட சிகிச்சை செயல்முறைகள் போன்றவற்றால் பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, 4 முதல் 6 வாரங்களில் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்புகின்றனர். மேலும் ஸ்டென்டிங் நடைமுறைகளைப் பொறுத்தவரையில், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதுமானது.
கட்டுக்கதை - ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்போதும் சிறந்தது.
உண்மை - ரோபோடிக் நுட்பங்கள் ஒரு மேம்பட்ட அறுவைசிகிச்சைக்கான கருவியாகும். எப்போதும் சிகிச்சைக்குப் பின் சிறந்த பலன்களை அளிக்கும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல. ஆனால் ஒட்டுமொத்தமாக, ரோபோடிக் அல்லாத அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது ரோபோடிக்-உதவியுடன் கூடிய அறுவைசிகிச்சையில் மருத்துவமனையில் தங்கும் சராசரி காலம் குறைவு. மேலும் இவை சிக்கல்களையும் இறப்பு விகிதத்தையும் கணிசமாகக் குறைத்துள்ளன. ஆனாலும் ரோபோடிக் அல்லாத குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சைகள் மூலம் குறைந்த செலவில் நல்ல முடிவுகளை அடைய முடியும். இந்த விஷயத்தில் உங்களுடைய அறுவை சிகிச்சை நிபுணர்தான் சிறந்த வழிகாட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கட்டுக்கதை - ஆஞ்சியோபிளாஸ்டி “உண்மையான” அறுவைசிகிச்சை அல்ல.
உண்மை - அறுவைசிகிச்சை அரங்கிற்குப் பதிலாக ஒரு கேத் (cath) ஆய்வகத்தில், குறைந்தபட்ச ஊடுருவல் நடைமுறையில் இது செய்யப்பட்டாலும், ஆஞ்சியோபிளாஸ்டி என்பது மிகவும் துல்லியமாக, உயிர்காக்கும் சிகிச்சையாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நடைமுறைக்கே உள்ள அபாயங்கள் இருக்கின்றன. அதேபோல் இதை மிக நுணுக்கமாக மேற்கொள்ளும் திறமையும் அவசியம்.
கட்டுக்கதை - ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்கள் ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்கின்றன.
உண்மை - நவீன மருந்துகள் பூசப்பட்ட ஸ்டென்ட்கள், மருந்தை வெளியிடுவதால் மீண்டும் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன் நீண்ட கால நன்மைகளை வழங்குகின்றன. இந்த கேதெடர் (வடிகுழாய்) அடிப்படையிலான சிகிச்சைகள் காரணமாக பல நோயாளிகள் பைபாஸ் சிகிச்சையை முற்றிலுமாகத் தவிர்க்க முடிந்திருக்கிறது.
உண்மைகள் இப்போது எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. இதய அறுவை சிகிச்சை தொடர்பாக பொதுவாக எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மற்றும் எப்படித் தயாராவது என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சைக்கு முந்தைய மதிப்பீட்டில் ரத்த பரிசோதனைகள், இமேஜிங் (எக்கோ கார்டியோகிராம், சிடி - echocardiogram, CT) மற்றும் ஆபத்து மதிப்பீடுகள் ஆகியவை அடங்கும். இது அறுவைசிகிச்சைக்கு நீங்கள் தயாராக, ஏற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்யும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நாளில், திறந்த இதய சிகிச்சை நோயாளிகளுக்கு வழக்கமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பின்னர் இதய-நுரையீரல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கேதெடர் (Catheter - வடிகுழாய்) அடிப்படையிலான நடைமுறைகளில் பெரும்பாலும் மயக்க மருந்தைப் பயன்படுத்துகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு என்பது வலி கட்டுப்பாடு மற்றும் இதய மறுவாழ்வு நடைமுறைகளுடன் அடங்கிய ஒரு முக்கியமான கட்டமாகும். இது மீண்டும் வலிமை பெறவும், இதயத்தைப் பாதுகாப்பது தொடர்பான வாழ்க்கை முறை மாற்றங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
இதய அறுவைசிகிச்சை என்பது உங்கள் அறுவைசிகிச்சை நிபுணர், இதயநோய் நிபுணர், மயக்க மருந்து நிபுணர், செவிலியர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் அனைவரும் இணைந்து உங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய இணைந்து பணியாற்றும் ஒரு குழு முயற்சியாகும். கட்டுக்கதைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்வது, உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து, உங்களுக்கான சரியான சிகிச்சையைத் தேர்வு செய்து, சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய நிலைமை ஆகியவற்றை பற்றி தகவலறிந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும்.
இது திறந்த இதய அறுவைசிகிச்சை, ஒரு துளையிட்டு அதன் வழியாக செய்யப்படும் நடைமுறை அல்லது ஸ்டெண்ட் பொருத்தப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி என எதுவாக இருந்தாலும், நவீன மருத்துவம் உங்களுக்கு முன்பை விட அதிகமான வாய்ப்புகளையும் பாதுகாப்பான தேர்வுகளையும் கொண்டுள்ளன. இதை அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.