Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியம் தரும் கெமோமில் தேநீர்!

நன்றி குங்குமம் டாக்டர்

கிரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, போலவே ஆரோக்கிய நோக்கங்களுக்காக தற்போது பலரும் கெமோமில் டீயை அருந்த தொடங்கியுள்ளனர். கெமோமில் என்பது சாமந்தி பூ வகையைச் சேர்ந்த கெமோமில் (Chamomile) என்கிற பூ வாகும். இயற்கையிலேயே இந்த கெமோமில் பூவானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருப்பது தற்போது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. செம்பருத்தி தேநீர், சங்குப் பூ தேநீர் போன்று இந்த பூக்களை டீ-யில் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமாக நன்மைகளை பெற முடியும். எனவேதான், தற்போது பலரும் பிளாக் அல்லது கிரீன் டீ-க்கு பதில் காஃபின்-ஃப்ரீ யாக இருக்கும் இந்த கெமோமில் டீயை அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர்.

கெமோமில் டீ குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு தேவையற்ற பதற்றத்தை தணித்து ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது.இந்த பூக்களில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆசிட் ரிஃபளக்ஸ் மற்றும் அசிடிட்டி காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்ல தூக்கம் முக்கியம். கெமோமில் மலர்களை காய வைத்து பின் தயாரிக்கப்படும் டீ-யானது நம்முடைய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை அமைதியடைய செய்வதால் தூக்கத்தை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தூங்க செல்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ஒரு கப் கெமோமில் டீ பருகுவது இரவு நிம்மதியான மற்றும் தரமான தூக்கத்திற்கு உதவும்.

கெமோமைலின் பல நன்மைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில், கெமோமில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. இது நோயைத் தடுக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.கெமோமில் டீ-யில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சில வகையான புற்றுநோய்கள் உருவாகும் குறைவான நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கெமோமில் பூக்களில் apigenin என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த apigenin புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மார்பகம், செரிமானப் பாதை, தோல், புரோஸ்டேட் மற்றும் கருப்பை கேன்சர் செல்களை எதிர்த்து போராடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கெமோமில் பூக்கள் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்ட ஃபிளாவோன்ஸ்களை (flavones) கொண்டுள்ளது. மேலும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் வகையில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. இவை தவிர சரும ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க கெமோமில் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கெமோமில் தேநீர் ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.

தொகுப்பு: ஸ்ரீ