Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹெல்த்தி தூக்கம் ஹேப்பி இதயம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிக அளவில் காபி குடிப்பது, நண்பர்களுடன் அடிக்கடி புகைபிடிப்பது, பொது இடங்களில் கொட்டாவி விடுவது, வரவேற்பு சோபாவில் குட்டித் தூக்கம் தூங்குவது போன்ற போக்கை உருவாக்கியுள்ளனர். நள்ளிரவு பார்ட்டி, இரவு வேலை செய்தல், தங்களுக்குப் பிடித்தமான வெப் சீரிஸை அதிக நேரம் பார்ப்பது அல்லது தங்களுக்குப் பிடித்த விளையாட்டைப் பார்க்க இரவு முழுவதும் விழித்திருப்பது வழக்கமான செயல்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்த செயலால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம், இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

மோசமான தூக்கப் பழக்கம் அல்லது போதிய தூக்கமின்மை பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர். ஆனால் எச்சரிக்கை பயனுள்ளதாக இருக்கிறதா என்பது கேள்வியே? மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கமின்மை நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள் இது ஒரு ஆபத்தான எச்சரிக்கையாக கருதுகிறார்கள், ஏனெனில் இது எல்லா வயதினருக்கும் பாலினத்தவர்களுக்கும் இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 30 முதல் 50 வயது வரை உள்ள இளைஞர்கள் போதிய இரவு தூக்கத்தை மதிக்காததால் அதிகமாகவும் மற்றும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதன் நன்மைகளை பல ஆய்வுகள் மூலம் போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆய்வுகள் போதிய தூக்கம் இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புள்ளதை அறிவுறுத்தியுள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. உண்பது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் போலவே, செல்கள் ஓய்வெடுக்கவும் மீண்டும் உற்சாகம் பெறுவதற்கு தூக்கம் உதவுகிறது. இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு எட்டு மணிநேரம் திடமான தூக்கம் தேவை. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் நீரிழிவு ஆகியவை நல்ல தூக்க சுகாதாரத்துடன் நிர்வகிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளில் அடங்கும்.

கார்டிசோல் மற்றும் லெப்டின் போன்ற ஹார்மோன்கள் போதுமான தூக்கத்தைப் பெறாதபோது பிரச்னையை தருகிறது. மாரடைப்புக்கு காரணமான தமனிகளில் கொழுப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் பிற இரசாயனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியானது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் உயர்ந்த அளவுகளால் ஏற்படுகிறது. லெப்டின் அளவு குறைவாக இருக்கும்போது நாம் அதிகமாக சாப்பிடுகிறோம், குறைவாக உடற்பயிற்சி செய்கிறோம். இந்த காரணிகள் ஒரு தீய பழக்க சுழற்சியை உருவாக்குகின்றன மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான உறுப்புகளுக்கு போதுமான தூக்கம் முக்கியம் என்றாலும், அதிகமாக தூங்குவதும் தீங்கு விளைவிக்கும்.

தூக்கமின்மை இதயத்திற்கு மோசமானது என்பதால், அதிக நேரம் தூங்குவது நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புவதால், இதைப் பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு இரவும் ஆறு முதல் எட்டு மணி நேரம் தரமான தூக்கம் பெறும் நபர்கள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களை விட ஆரோக்கியமான இதயங்களைக் கொண்டுள்ளனர்.

வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள், ஜப்பானுக்கு அடுத்தபடியாக தூக்கமின்மை உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில், பெண்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கும் சக்தி இருப்பதாக கருதப்பட்டது. இருப்பினும், தூக்கம் இல்லாத பெண்களுக்கு இது உண்மையல்ல நிரூபணமாகியுள்ளது. தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைவாக தூங்கும் இளம்பெண்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூக்கமின்மை அல்லது தூக்கம் தொடர்பான கோளாறுகள் காரணமாக சராசரியாக ஆண்கள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் மற்றும் பெண்கள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் இருதய நோயற்ற வாழ்க்கையை இழக்கிறார்கள்.

பரிந்துரைக்கப்பட்ட உரங்கப் போகும் நேரம் இரவு 10 மணிக்கு முன் ஆகும். பெரும்பாலான இந்தியர்கள் நள்ளிரவுக்குப் பிறகுதான் உறங்கச் செல்கிறார்கள் என்று ஒரு ஆன்லைன் ஆதாரம் கூறுகிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல், இது இளைஞர்களிடையே மோசமாக உள்ளது. நீல ஒளி வெளிப்பாடு, டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பார்ப்பது, இரவு நேர கேஜெட் பயன்பாடு, மன அழுத்தம் நிறைந்த வேலைச் சூழல்கள் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை உலக அடிப்படையில் தூக்கத்தை அதிகமாக சீர்குலைக்கும் காரணியாக கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் ஏற்கனவே இவற்றைப் பற்றி நன்கு அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த கேம் அல்லது தங்களுக்குப் பிடித்த ஆன்லைன் தொடரின் புதிய எபிசோடிர்க்கு பதிலாக ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதைத் தேர்வு செய்வதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இது ஒரு இரவு மட்டுமே தானே என்றும், ஓரிரு பகல் குட்டித் தூக்கம் அல்லது காபி அருந்துவதன் மூலம் நம் இரவு தூக்கத்தை ஈடுகட்ட முடியும் என்றும் நாம் நம்பலாம். பொதுவான கருத்துக்கு மாறாக, நாம் நம்முடைய சர்க்காடியன் ரிதத்தை இங்கே சீர்குலைக்கிறோம். நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தேவையான ஓய்வைப் பெற உங்களை அனுமதிக்கிறது. அடுத்து நாளிற்கான நல்ல உடல் மற்றும் மன செயல்திறன் தூக்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலர் மேற்கூறியவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும், அது நமக்குப் புதிதல்ல என்றாலும், இரவில் நம் உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஓய்வைக் கொடுக்க தயங்குகிறோம். நீங்கள் பல காரணங்களை சொல்லலாம், ஆனால் ஆரோக்கியமான உடலை பராமரிக்க அனைவருக்கும் போதுமான அளவு தூக்கம் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற, மருத்துவர்கள் என்ன அறிவுறுத்துகிறார்கள் என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையைத் தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலமோ அல்லது இரவு 9 முதல் 10 மணிக்குள் உறங்கச் செல்வது போன்ற வேறு ஏதேனும் அத்தியாவசியமான முறையில் அவர்களின் தூக்க முறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறார்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்