Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹெல்த்தி ஹேபிட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

- மருத்துவர். வி.எம். ஜெயபாலன்

பசியில்லாமல் சாப்பிடலாமா?

எப்படியும் வாழலாம், சாப்பிடலாம், இருக்கலாம் என்ற கோட்பாட்டில் இன்று மனிதர்கள் வாழுகிறார்கள். இயற்கை விதியை முற்றிலும் மாற்றி அவர்கள் விரும்பும் நேரத்தில் சாப்பிடும் பழக்கம் இன்று நம்மிடையே அதிகம் இருக்கிறது. 24 மணி நேர உணவு மையங்கள் இருப்பதால் உணவை எந்த நேரமும் சாப்பிடலாம் என்ற மனப்பாங்கு வளர்ந்து விட்டது. பசியெடுக்கும் நேரத்தில் தேனீரையோ, காபியையோ, குடித்துவிட்டு பசியை அடக்கிக் கொள்கிறார்கள்.

அதன்பிறகு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது சாப்பிடப் போகிறார்கள். அந்த நேரத்தில் பசி எடுப்பதில்லை. பசி நேரத்தை மீறி சாப்பிடும் மனிதனுக்கு வாயுவானது பசி தாக்கத்தை அணைத்து விடுவதால் உட்கொள்ளப்பட்ட உணவானது மிகவும் சிரமப்பட்டு ஜீரணமாகிறது. இப்படிப்பட்ட கடினமான நிலையில் இவர்கள் உணவு சாப்பிடுவதால் அடுத்த வேளைக்குப் பசியெடுப்பதில்லை. ஒரு தேனீர் சாப்பிட்டுவிட்டு இன்னும் இருக்கின்ற பசிக்கு மனிதன் கல்லறை கட்டிவிடுகிறான். ஆகையால் இம்மனிதன் அடுத்தவேளை உணவை விரும்புவதில்லை.

மிகச் சூடான அல்லது ஆறிய உணவை உபயோகிப்பதன் கெடுதி

தினமும் நாம் சாப்பிடும் உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று எப்போதாவது கவனம் செலுத்தியிருக்கிறோமா என்றால் பெரும்பாலானோர் இல்லை என்றே சொல்லுவார்கள். பொதுவாக நம்மை நடக்க வைப்பது, ஓட வைப்பது, ஆட வைப்பது, பாட வைப்பது, யோசிக்க வைப்பது என நாம் தினமும் செய்யும் செயல்களை செய்ய வைப்பது நாம் உண்ணும் உணவுதான்.

எல்லோரும் அறிந்து இருந்தாலும் நம்மைக் காக்கும் அந்த உணவை நாம் என்றாவது மதித்து இருக்கிறோமா.. அதற்கு ஒரு மரியாதைக்காக இந்த உணவு தினமும் நமக்கு உதவி செய்கிறதே அதற்கு நன்றி என்று சொல்லியாவது இருக்கிறோமா இல்லை என்ற பதில் தான் நம்மிடம் வரும். சரி! இந்த உணவை எப்படிச் சாப்பிட்டால் கெடுதி வரும் என்பதைப் பார்ப்போம்.

மிகவும் சூடாக இருக்கும் உணவானது மயக்கம், எரிச்சல், தண்ணீர்த் தாகம், பலக்குறைவு, தலைசுற்றல், ரத்தப்பித்தம் இவைகளை உண்டாக்குகின்றன.மிகவும் குளிர்ந்துபோன உணவானது. களைப்பு, உணவில் ருசியின்மை இவைகளை உண்டு பண்ணுகிறது. பசித்தீயை அணைத்துவிடுகிறது. குமட்டல், அஜீரணம், மயிர்க்கூச்சம் இவைகளையும் உண்டாக்குகிறது.

சமைப்பதற்கு ஏற்ற பாத்திரங்கள்

இன்றைய நவீன உலகில் நமது நாட்டில் விதவிதமான வகைவகையான சமைக்கும் பாத்திரங்கள் வந்துவிட்டன. அதற்கு நாகரிகம், கலாச்சாரம் என நாமே பல பெயர்களை சூட்டிக் கொள்கிறோம்.

ஆனால், உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சமையல் பாத்திரம் என்றால் அது காலம் காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்த மண் பாத்திரம்தான். அது உணவில் உள்ள மணத்தையும் ருசியையும் மாறாமல் தரும். நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட மண் பாத்திரத்தில் சமைப்பது நல்ல மணத்தையும், சிறந்த குணத்தையும் ருசியையும் கொடுக்கும். எனவே சமைப்பதற்கு மண் பாத்திரமே மிகச் சிறந்தது.

தண்ணீர் கொதிக்க வைக்கும் முறை

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடித்தனங்களாக இருப்பதால், சமையல் கலையை பல பேர் முறையாக கற்றுக் கொள்வதில்லை. இன்னும் சிலருக்கு சமையலே வராது. இப்படிப்பட்ட சூழலில் தண்ணீரை காய்ச்சுவதைக் கூட பலரும் அறிந்திருப்பதில்லை. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது மூடிப் போட்டு மூடி விடுகிறார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. மூடி போட்டு கொதிக்க வைக்கும் தண்ணீர் கெட்டுப் போகின்றது. எனவே மூடாமல் தான் கொதிக்க வைக்க வேண்டும்.

அதுபோன்று கொதித்து ஆறிய நீர் கபத்தை உண்டாக்குவதில்லை. சுகமாக ஜீரணமாகச் செய்யும். மேலும், பித்தம் சம்பந்தமான நோயாளிக்கும் இதமானது. கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை ஒரு நாளுக்கு மேல் வைத்திருந்து குடித்தால் அது மூன்று தோசங்களை உண்டாக்கும். அதாவது, வாத - பித்த - கபம் ஏற்படும். எனவே, நம்முடைய மனதையும், உடலையும் காக்க நீரை தினமும் காய்ச்சி குடிப்பதுதான் சிறந்தது.

அதுபோன்று காலை எழுந்தவுடன் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து நன்கு ஆறவிட வேண்டும். அந்த நீர் ஆறிய பிறகு காலையிலிருந்து இரவு வரை அந்த நீரை தேவைக்கேற்ப பருக வேண்டும். அவ்வாறு செய்யும்போது இரவில் கபங்கள் கட்டுவதில்லை. நல்ல ஜீரணமும் ஆகும்.