Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆரோக்கியம் தரும் உணவுப் பழக்கம்!

நன்றி குங்குமம் டாக்டர்

எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கும் தன்மை நம் கையில் இல்லை. ஆனால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று தீர்மானமாக சொல்லலாம். ஆம் உடற்பயிற்சி, சரியான வாழ்க்கைமுறை, எதை, எப்படி எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது என நீண்ட காலம் வாழ்பவர்களை, வாழ்ந்தவர்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள், நீண்ட காலம் வாழ முதுமையைத் தாமதப்படுத்தும் சில உணவுகளைப் பார்ப்போம். எந்த உணவில் அதிகமான நுண்ணூட்ட சத்துக்களும் குறைவான கலோரிகளும் உள்ளதோ அந்த வகை உணவுகளை உட்கொண்டோமானால் நீண்ட ஆயுள் கிடைக்கும். புரோக்கோலி சாலட், திராட்சை உள்ளிட்ட பல காய்கறிகள், பழங்கள் இப்படி உள்ளன. இவை பலவகை புற்றுநோய் வராமல் காக்கும் திறன் கொண்டவை.

நல்ல கொழுப்பு நிறைந்தது. நல்லெண்ணெய், இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். அதே சமயம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.சிவப்பு நிற காய்கறிகள், பழங்களான தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா போன்ற உணவுகளில் லைக்கோபீன் சத்து இருப்பதால் சில வகை புற்று நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

பீன்ஸ் வகை உணவுகளான பீன்ஸ், அவரை, துவரை, காராமணி, கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் ஃபேட்டி ஆசிட் புட்டிரேட் சத்து உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் சிறுதானியங்களை உண்டால் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் இருக்காது. இதனால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை வராமல் தடுக்கலாம். ஃபோலிக் அமிலம் இருப்பதால் உடலில் செல் சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது.

கிரீன் டீ, வெந்நீரில் தேன், எலுமிச்சம்பழச்சாறு தலா ஒரு தேக்கரண்டி கலந்து குடித்து வந்தால் சிறுநீரகம், கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் நோய் பாதிப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறைந்துவிடும். உடல் பருமன் குறைக்க, சூரியக் கதிர்வீச்சால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்க இது உதவுகிறது. உடலில் நல்ல கொழுப்பு சமநிலையாக இருந்தாலே, உடல் பருமன் ஏற்படாது. பாதாமில் வைட்டமின் இ, தயமின், நார்ச்சத்து, ரிபோஃபிளேவின் இரும்புச்சத்து, கால்சியம் நிறைவாக உள்ளன. தினம் நான்கு பாதாமை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். பச்சை, மஞ்சள். சிவப்பு குடமிளாகாயில் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகம். ஆரோக்கியத்தை மேம்படுத்த, வாரம் இருமுறை குடமிளகாய் உள்ளிட்ட காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம்.

கேரட், பப்பாளி, அன்னாசி உள்ளிட்ட ஆரஞ்சு நிற காய்கறி, பழங்களில் வைட்டமின் ஏ அதிகம். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆயுள் முழுக்க தெளிவான பார்வையை பெற, கேரட்டுக்குத்தான் முதலிடம்.முட்டை மற்றும் மீனில் வைட்டமின் டி முக்கியமான விகிதத்தில் கலந்துள்ளது. இது எலும்பு சம்பந்தமான நோய்கள் உருவாகாமல் தடுக்கும், எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கும். வயோதிக காலத்திலும் நாம் ஓரளவுக்கு சமாளிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் கை கொடுக்கின்றன.

சுண்டை வத்தல் மற்றும் வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம், இவற்றை உட்கொள்வதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். தயிர், வெண்ணெய், யோகர்ட் உள்ளிட்ட பால் பொருட்களில் நன்மை செய்யும் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம், சில வகை புற்று நோயையும் இந்த பாக்டீரியா தடுப்பதில் முதன்மை வகிக்கிறது.

பருவ காலங்களில் விளையும் உள்ளுர் காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆரஞ்சுப்பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்றவை ஊளைச்சதை, கரப்பான், கண் நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகும். எலும்பு, பற்களை உறுதியாக இருக்கச் செய்கிறது.சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி, பிரவுன் அரிசி ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல், ஆன்டிஆக்சிடனட் அதிகம். ஆகையால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கலோரிகள் குறைவு என்பதால் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டோடு இருக்குமாறு செய்யும்.

பழச்சாறு, சாலட், நொறுக்குத்தீனி, மோர், இனிப்புகள் என எதை வீட்டில் செய்தாலும் அதில் ஆளிவிதைகள் இடம் பெறட்டும். இதிலுள்ள நார்ச்சத்து, ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை புற்று நோய்களை எதிர்க்க வல்லவை, கொழுப்பை கரைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. எனவே, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட தொடங்குங்கள்.

தொகுப்பு: பாலசர்மா