நன்றி குங்குமம் டாக்டர்
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும், சளிப்பிடித்தல், தும்மல், இருமல் மற்றும் விடாத தலைவலி போன்றவை பாடாய்ப்படுத்திவிடும். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவரை அணுகினால் இது சைனஸ் பிரச்னை என்பார். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர் எஸ்.கே. சண்முகராம்.
சைனஸ் எதனால் ஏற்படுகிறது?
நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. கன்னம், மூக்கு, நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப்பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு (Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரப்படுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது.
சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு ‘சைனசிட்டிஸ்’ (Sinusitis) என்று பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் ‘பாலிப்’ (Polyp) எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது. இது ஆண், பெண், குழந்தைகள் என யாருக்கு வேண்டுமானாலும் வரும். மாசுபாடான காற்றை சுவாசிப்பது, சுத்தமின்மை, நோய் எதிர்ப்புசக்தி குறைவு, ஒவ்வாமை, குளிர்காலத்துக்கு கால நிலை மாறும்போது, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிப்பது போன்றவை சைனஸ் ஏற்பட முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். வாசனை, சுவை உணர்வு குறையும். தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சில நேரங்களில் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, காது அடைப்பு, கழுத்து வலி மற்றும் சில நேரங்களில் தோள்பட்டை வலி, தலைசுற்றல், வாந்தி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
சைனஸ் முற்றிய நிலையில் தொண்டை வலியும் இருக்கும். மூக்கில் உள்ள சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நிண நீர், சளியாக மாறி, கட்டியாகி அடைத்துக் கொள்வதால், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுபோன்று, மாசடைந்த காற்றில் கலந்துவரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள சளி சவ்வு வீங்கி அழற்சி உண்டாகும்.
சிகிச்சை முறைகள்
சைனஸ் பிரச்னைக்கு கடுமையான அல்லது நாள்பட்ட ஒவ்வாமைதான் முக்கியக் காரணமாக இருப்பதால், முதலில் ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுதல் அல்லது ஆவி பிடித்தல் நல்ல தீர்வு தரும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம்.
முன்பெல்லாம் சைனஸ் முற்றிய நிலையில் இருந்தால், ஊசி மூலம் சளியை அகற்றும் முறை பின்பற்றப்பட்டது. இதற்குப் பயந்தே பலரும் சிகிச்சைக்கு வரத் தயங்குவார்கள். அந்த நிலைமை மாறி தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதனால் பயம் தேவையில்லை.முதலில் சளி பரிசோதனை செய்து, எவ்வளவு பாதிப்பு என கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டித்தால், எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, ‘சைனஸ்’ அடைப்பை சரி செய்யலாம். ஒரு சில நேரங்களில், சளி, கட்டியாகி விடும். மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. இதற்கு, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும். இதில், ‘எண்டோஸ்கோபி’ முறையில், அறுவைசிகிச்சை செய்து, சளிக் கட்டியை அகற்றி விடலாம்.
தற்காத்து கொள்வது எப்படி?
சைனஸ் பிரச்னை வராமலிருக்க மிக முக்கியமாக தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிலும், தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காலத்தில், கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
*இதை தவிர்த்து, பனியில் அலைவது, மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும்.
*வீட்டினுள் அழுக்கு, தூசு சேராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*செல்லப் பிராணிகளின் முடி உதிர்வை அவ்வப்போது சுத்தம் செய்து விட வேண்டும்.
*புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.
*ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை உண்ண வேண்டும். அதில் நிறைய காய்கறிகள், சீசனில் கிடைக்கும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
*ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்ற குளிர்ச்சியானவற்றை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
*உடற்பயிற்சி, யோகா, தியானம், பிராணாயாமம் செய்ய வேண்டும்.
*சுயசுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்